தமிழ்த் திரையுலகின் பத்திரிகையுலக பிதாமகன் பிலிம் நியூஸ் ஆனந்தன் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.
தமிழ்த் திரையுலகில் முதல் பத்திரிகை தொடர்பாளர் இவர்தான். பத்திரிகை தொடர்பாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவரும் இவரே.. சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் ஸ்தாபகரும் இவரே..!
1954-ம் ஆண்டு முதல் தமிழ்த் திரையுலகில் செய்தித் தொடர்பாளராக வலம் வந்து கொண்டிருந்த பிலிம் நியூஸ் ஆனந்தன்.. சமீப ஆண்டுகளில் தள்ளாத வயதிலும், நடக்க முடியாத காலத்திலும்கூட பல விழாக்களுக்கு ஆர்வத்துடன் முன் வந்து கலந்து கொள்வார்.
மிக துல்லியமாக நாள், தேதியைக்கூட இன்னமும் மறக்காமல் நினைவில் வைத்திருந்து மேடையில் அவர் பேசுகின்ற பேச்சுக்கள் தமிழ்த் திரையுலகத்தினரை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்..!
எந்த விஷயத்தையும் மேம்போக்காக பேசாமல் அதன் அடி ஆழம்வரையிலும் செய்திகளை சேகரித்து அதனைத் தொகுத்து வரும் வல்லமை படைத்தவர்.
எம்.ஜி.ஆரின். நாடோடி மன்னன்தான் இவர் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய முதல் படம். அன்றிலிருந்து சுமாராக 1000 படங்களுக்கு மேலாக மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். பல்வேறு மொழி படங்களுக்கும் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழின் தியாகராஜ பாகவதர் முதல் அனைத்து சூப்பர் ஸ்டார்களுடனும் நெருங்கிப் பழகிய.. அவர்களின் படங்களுக்கு மக்கள் தொடர்பாளர்களாக பணியாற்றி பெருமையுடைய ஒரே பி.ஆர்.ஓ. மறைந்த பெரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் மட்டுமே..!
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று திராவிட மொழிகளின் திரையுலகம் தொடர்பான தகவல்களைக்கூட விரல் நுனியில் வைத்திருப்பார்.
தமிழ்ச் சினிமாவுலகம் பற்றி இவர் திரட்டிக் கொடுத்த புத்தங்களினால் மட்டுமே இப்போதுவரையிலும் வெளியான தமிழ்ச் சினிமாக்களின் எண்ணிக்கையை மிகச் சரியாக சொல்ல முடிந்திருக்கிறது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்கும் சேர்த்தே இவர் உழைத்திருப்பதன் பலனதான் இன்றைய தென்னிந்திய சினிமா பற்றிய புரிதலும், முழு விபரங்களும் இந்த நாட்டுக்குக் கிடைத்திருக்கின்றன என்றே சொல்ல்லாம்.!
வருடந்தோறும் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலையும், தமிழ்ச் சினிமாவுலகில் நடந்த பலவித விஷயங்களையும் தொகுத்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதியன்று ஒரு கையடக்கமான புத்தகத் தொகுப்பை வெளியிடுவது இவரது வழக்கம்.
அதைக்கூட இந்த முடியாத வயதிலும் தானே நேரில் வந்து பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களிடத்தில் தானே கொடுப்பார். இதுதான் எனக்கு திருப்தி என்பார்.. இந்த அளவுக்கு கடைசிவரையிலும் தமிழ்ச் சினிமாவுக்காகவே உழைத்துக் கொண்டிருந்த அந்த பெரிய மனிதர் இன்றைக்கு நிரந்தரமாக ஓய்வெடுத்துவிட்டார்.
தமிழ்த் திரையுலகம் மட்டுமல்ல.. தென்னிந்திய திரையுலகம் மட்டுமல்ல.. இந்தியத் திரையுலகமே அவர் திரட்டிக் கொடுத்த திரையுலகச் செய்திகளுக்காகவும், திரையுலகத்திற்கு அவர் ஆற்றிய சேவைக்காகவும் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.
அவருடைய ஆன்மா சாந்தியாகட்டும்..!