‘பெப்சி’ தேர்தல் – தலைவர் பதவிக்கு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டி..!

‘பெப்சி’ தேர்தல் – தலைவர் பதவிக்கு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டி..!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்றழைக்கப்படும் பெப்சி(Fefsi-Federation of Film Employees Union) அமைப்பின் 2019-2021-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 17, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ளது.

தமிழ்ச் சினிமாவில் தொழிலாளர்களுக்கான அமைப்பில் உச்சபட்ச அமைப்பான பெப்சிக்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 22-ம் தேதியோடு முடிவடைவதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

fefsi-label-1

பெப்சி அமைப்பின் நிர்வாகிகள் சினிமா துறையைச் சேர்ந்த தொழிலாளர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக சினிமா தொழிலாளர்களுக்காக தற்போது இருக்கும் 22 சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய 3 பேர் மட்டுமே ஓட்டுப் போட்டு பெப்சி அமைப்பின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஆக இந்த பெப்சி அமைப்பின் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையுள்ளவர்கள் மொத்தமே 66 பேர்தான். இவர்கள்தான் பெப்சி அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் 5 துணைத் தலைவர்கள், 5 துணைச் செயலாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.  இந்த 66 பேரும்தான் பெப்சி அமைப்பின் பொதுக்குழு உறுப்பினர்கள்..!

அந்த வரிசையில் ஏதாவது ஒரு சினிமா சங்கத்தில் தலைவராகவோ, செயலாளராகவோ, பொருளாளராகவோ இருப்பவர்தான் பெப்சியின் அமைப்பில் நிர்வாகியாக இருக்க முடியும் என்பது சங்க விதிமுறை.

தற்போது பெப்சியின் தலைவராக இருக்கும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியே மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஒப்பனைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மூர்த்தி, தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

பொதுச் செயலாளர் பதவிக்கு கலை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் சண்முகமும், சண்டை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் சோமசுந்தரம் என்கிற சுப்ரீம் சுந்தரும் போட்டியிடுகிறார்கள்.

பொருளாளர் பதவிக்கு தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் சார்பில் சுவாமிநாதனும், தயாரிப்பு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சந்திரனும் போட்டியிடுகிறார்கள்.

இந்த மூன்று பதவிகளுக்கு மட்டுமே போட்டி ஏற்பட்டுள்ளதால், இவைகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறவுள்ளது.

fefsi-label

துணைத் தலைவர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் பதவிகளுக்கு தலா 5 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.

இதன்படி துணைத் தலைவர்களாக இசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் தீனா, ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் சார்பில் ஸ்ரீதர், நடன இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் ஷோபி, டிரைவர்கள் சங்கத்தின் சார்பில் செந்தில், நளபாக ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக ராதாகிருஷ்ணனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

துணைச் செயலாளர்கள் பதவிக்கு ஸ்டில்ஸ் போட்டோகிராபர்கள் சங்கத்தின் சார்பில் ராஜா, சினி ஏஜெண்ட் சங்கத்தின் சார்பில் ரமண பாபு, ஒப்பனைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கிரி, எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் சம்பத், மகளிர் சங்கத்தின் சார்பில் ஸ்ரீப்ரியா ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றபோது ஆர்.கே.செல்வமணி தாக்கல் செய்த தலைவருக்கான வேட்பு மனு மீது கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதாம்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்து பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஒரு சர்ச்சை திடீரென்று எழுந்தது.

“ஆர்.கே.செல்வமணிக்கு தலைவர் பதவிக்கான பரிந்துரைக் கடிதத்தை எழுத்தாளர் சங்கம் கொடுக்கவில்லை. அப்படியொன்று இருந்தால் அதனை நிராகரிக்கவும்..” என்று எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவரான இயக்குநர் கே.பாக்யராஜ், நேற்று காலை திடீரென்று ஒரு கடிதத்தை பெப்சிக்கு கொடுத்து அனுப்பியது நிலைமையை மேலும் பரபரப்பாக்கியது.

ஆனால் இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில்தான் பரிந்துரைக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் கடிதம் கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை.

fefsi-leaders

ஆனால் குழப்பம் எப்படி, ஏன் ஏற்பட்டது என்றால், வழக்கமாக தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரு பாதுகாப்புக்காக இரண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வது வழக்கம்.

அதன்படி இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பெப்சி தலைவர் தேர்தலுக்கான தேர்தலில் இரண்டு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். ஒரு மனுவில் அவருக்காக முன் மொழிந்த பெப்சியின் பொதுக் குழு உறுப்பினர்களாக இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த இருவர் கையெழுத்திட்டிருந்தனர்.

இன்னொரு வேட்பு மனுவில் எழுத்தாளர்கள் சங்கத்தின் செயலாளர் மனோஜ்குமாரும், பொருளாளர் ரமேஷ் கண்ணாவும் கையெழுத்திட்டு முன் மொழிந்திருந்தனர். இதைப் பார்த்துவிட்டுத்தான் எழுத்தாளர் சங்கம் ஆர்.கே.செல்வமணிக்கு பரிந்துரை கடிதம் எழுதியனுப்பியிருக்கிறது என்று தவறாகப் புரிந்து கொண்டு சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜூக்கு ஏடாகூடமாகச் சொல்லி அவர் கடிதம் எழுதி, பிரச்சினை எழுந்துவிட்டது என்கிறார்கள் பெப்சி அமைப்பினர்.

ஆனால் தேர்தலை நடத்துவதற்காக வந்திருக்கும் முன்னாள் நீதிபதி பாலசுப்ரமணியம், ஆர்.கே.செல்வமணிக்கு வந்திருக்கும் பரிந்துரை கடிதம் இயக்குநர்கள் சங்கத்தில் இருந்துதான் என்பதை ஆதாரப்பூர்வமாக அறிந்து கொண்டு அந்த வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டார்.

fefsi-siva

நேற்றைக்கு நடந்த இந்தக் குளறுபடிகளுக்கு பெப்சியின் முன்னாள் தலைவரான சிவாவைத்தான் அனைவரும் குற்றம் சாட்டுகிறார்கள். இதில் சிவாவும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாகச் சொல்லி ஒரு வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். ஆனால் அது தள்ளுபடியாகிவிட்டது. அந்தக் கோபத்தில்தான் இப்படி குழப்பத்தை உருவாக்கி வருகிறார் என்கிறார்கள் சிலர்.

அவர் ஏற்கெனவே பெப்சியின் தலைவராக இருந்தபோது ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். இதனால்தான் அவரால் பெப்சிக்கு தலைவராகவும் முடிந்தது. ஆனால் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பாக சிவா, ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் 40 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக எழுந்த புகாரையொட்டி அந்தச் சங்கத்தில் இருந்து சிவா இடை நீக்கம் நீக்கப்பட்டுள்ளார். இதனால் பெப்சி தேர்தலில் அவரால் போட்டியிட முடியாத நிலையில் இருந்தார்.

இந்த நேரத்தில் நடிகர் ராதாரவியின் உதவியுடன் திடீரென்று டப்பிங் யூனியனில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டு “எங்களது சங்கத்தின் சார்பாக சிவாவை நாங்கள் முன் நிறுத்துகிறோம்…” என்று டப்பிங் யூனியனின் பரிந்துரையோடு வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் சிவா.

ஆனால் பெப்சியின் சட்டத் திட்டத்தின்படி ஒருவர் ஒரு சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகே அவர் அந்தச் சங்கத்தின் தேர்தல்களில் போட்டியிட முடியும். தேர்தலில் போட்டியிட்டு தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றால் ஒழிய, பெப்சி அமைப்பில் எந்தவொரு பதவிக்கும் போட்டியிட முடியாது.

இரண்டு முறை பெப்சியின் தலைவராக இருந்த சிவாவுக்கு இந்தச் சட்டத் திட்டங்கள் நன்கு தெரியும். இருந்தும் ஒரு பரபரப்புக்காக தலைவர் பதவிக்கு  வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு முறையற்றது என்பதால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் டப்பிங் யூனியனின் பெயர் கெட்டதுதான் மிச்சம்..!

இப்போது வரும் பிப்ரவரி 17-ம் தேதியன்று தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளுக்கு மட்டுமான தேர்தல் பெப்சி அலுவலகத்திலேயே நடைபெறும். அன்று மதியமே ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்..!

 

Our Score