“சின்னத்திரை உதவி இயக்குநர்களுக்கு முறையான சம்பளம் தர வேண்டும்..” – இயக்குநர் கே.பாக்யராஜ் வேண்டுகோள்..!

“சின்னத்திரை உதவி இயக்குநர்களுக்கு முறையான சம்பளம் தர வேண்டும்..” – இயக்குநர் கே.பாக்யராஜ் வேண்டுகோள்..!

சின்னத்திரையில் பணிபுரியும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், உதவி இயக்குநர்களுக்கு மட்டும் எந்தவிதமான ஒப்பந்தமும் இதுவரை போடவில்லை.

இது தொடர்பாக பல வருடங்களாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேசியும், கடிதம் எழுதியும், அவர் ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள்.

ஆகவே உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுத் தர, சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத அற வழிப் போராட்டம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் சேப்பாக்கம்,  அரசு விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது.

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான இயக்குநர் தளபதி, இந்த உண்ணாவிரதத்திற்கு முன்னிலை வகித்தார்.  

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் C.ரங்கநாதன், பொருளாளர் M.K.அருந்தவராஜா, துணை தலைவர்கள் B.நித்தியானந்தம் & அறந்தாங்கி சங்கர், இணைச் செயலாளர்கள் T.R.விஜயன் & S.கிஷ்ணப்பர் அலிகான் மற்றும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் 300-க்கும் அதிகமான உதவி இயக்குநர்களும் இந்த அற வழிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.    

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இயக்குநர் கே.பாக்யராஜ் துவக்கி வைத்தார்.

IMG_20190210_092310

அப்போது அவர் பேசுகையில், “சின்னத்திரையில் பணியாற்றும் உதவி இயக்குநர்களுக்கு சம்பள நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

சின்னத்திரையில் பணியாற்றும் உதவி இயக்குநர்கள் எவ்வளவு ஊதியம் பெறுகிறார்கள் என்பதே தெரியாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.

உதவி இயக்குநர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது இயக்குநர்கள்தான். எங்களுக்கு இத்தனை உதவி இயக்குநர்கள் தேவை என்று இயக்குநர்கள்தான் தயாரிப்பாளர்களிடத்தில் பேசி புரிய வைக்க வேண்டும்.

WhatsApp Image 2019-02-10 at 4.22.15 PM

இப்போதெல்லாம் ஒரு நாள் படப்பிடிப்புச் செலவிற்கு 1.5 லட்சம், 2 லட்சம் என்று கொடுக்கிறார்கள். சில தொடர்களுக்கு 75 ஆயிரம்கூட பெற்றுக் கொண்டு சீரியலை எடுக்கிறார்கள். ஆகையால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதே உதவி இயக்குநர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி ஒரு சில இயக்குநர்களுக்குத்தான் மார்க்கெட் இருக்கிறது. அப்படி மார்க்கெட் இருக்கிற இயக்குநர்கள் தங்களுடைய உதவி இயக்குநர்களுக்கு ஒரு கணிசமான தொகையை அளிக்க வேண்டும்.

அந்தத் தொகையை வைத்துக் கொண்டு அவர்களால் ஒரு சிறிய வீடுகூட கட்ட முடியாது. அவர்ககளுக்கு வரும் வருமானத்தைக் கொண்டு கார் வாங்க முடியாது. ஒரு சிறிய இரண்டு சக்கர வாகனம் வாங்கி மகிழ்வதற்கு ஏற்ற வகையில், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

IMG_20190210_172123

இந்த அடையாள உண்ணாவிரதம் யாருக்கும் எதிரானது அல்ல. எங்களுடைய கஷ்டத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. இதற்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு தயாரிப்பாளர் சங்கத்துடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வேன். நான் இதற்கு என்றும் உறுதுணையாக இருப்பேன்…” என்றார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் பெப்சி அமைப்பின் தலைவர் நடராஜ் மற்றும் நடிகர் ராதாரவி, இயக்குநர் K.S.ரவிக்குமார், இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீணா, நடிகர் கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில், மாலை 5 மணிக்கு இயக்குநர் R.V.உதயகுமார் அனைவருக்கும் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

Our Score