full screen background image

பத்திரிகையாளர்களை மிரட்டிய பெப்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை – அமீர் அறிவிப்பு..!

பத்திரிகையாளர்களை மிரட்டிய பெப்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை – அமீர் அறிவிப்பு..!

சில நாட்களுக்கு முன்னால் பிரசாத் கலர் லேப்பில் நடைபெற்ற ‘ஆதியும், அந்தமும்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது பெப்சி அமைப்புடன் இணைந்த நளபாக ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த சிலர் அங்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். அவமரியாதை செய்தனர். தாக்குதல் நடத்தவும் துணிந்தனர்.. ரவுடித்தனம் செய்தனர் என்பதை ஏற்கெனவே இதில் குறிப்பிட்டிருந்தோம்.

இதனை உடனேயே பெப்சி அமைப்புக்கும் பத்திரிகையாளர்கள் தெரிவித்திருந்தனர். உடனேயே பெப்சி அமைப்பும் தனது ஊழியர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன் அதற்குக் கண்டனமும் தெரிவித்திருந்தது. அடுத்து 3 நாட்களில் நடைபெறவிருந்த ‘சினேகாவின் காதலர்கள்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது அதே பிரசாத் லேப்பிற்கு, ரகளை செய்த அதே ஊழியர்களை அழைத்து வந்து பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வைப்பதாகவும் கூறியிருந்தது பெப்சியின் தலைமை.

ஆனால் அன்றைய தினம் நமது கேமிரா கவிஞர் பாலுமகேந்திரா திடீரென்று காலமானதால் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வேலைகள் காரணமாக அது நடைபெறவில்லை. இன்றைக்கு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேர் விடுதலை தொடர்பாக தமிழக முதலமைச்சரின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தும், அவர்களது விடுதலை வேண்டி நடந்த திரையுலக ஆலோசனைக் கூட்டத்தின்போது பெப்சியின் தலைவர் அமீர் இது பற்றி பேசினார்.

அவர் பேசும்போது, “சில நாட்களுக்கு முன்னால் பெப்சி ஊழியர்கள் சிலர், பத்திரிகையாளர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக எங்களுக்கு புகார் வந்தது. பத்திரிகையாளர்கள் பலரும் வருத்தத்துடன் எங்களிடம் அதைச் சொன்னார்கள். நாங்கள் அப்போதே அவர்களிடம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தோம். அதன்படி அ்ந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான கடிதம் இது. இன்றைக்கு சம்பந்தப்பட்ட சங்கத்திற்கு பெப்சியில் இருந்து இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்..” என்று கூறி அந்தக் கடிதத்தை பிரித்துக் காட்டினார். ஆனால் வாசிக்கவில்லை. 

“இன்றைக்கு நேரமில்லாத காரணத்தினால் அவர்களை அழைத்து வரவில்லை. இல்லாவிட்டால் நேரில் அழைத்து வந்து மன்னிப்பு கேட்க வைத்திருப்பேன்..” என்றும் சொன்னார்.

பெப்சியின் செயலாளர் திரு.சிவாவிடம் நாம் இது பற்றி கேட்டபோது, “அவர்களுடைய சங்கத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பெப்சியின் முடிவை அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம். இனி அவர்கள் அதை நடைமுறைப்படுத்திவிட்டு எங்களுக்குத் தெரியப்படுத்துவார்கள்.. அது வந்தவுடன் நாங்கள் உங்களிடம் தெரிவிக்கிறோம்..” என்றார்.

அந்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. ஒரு வேளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சஸ்பெண்ட் என்று இருக்கலாம். ஆனால் நிச்சயம் டிஸ்மிஸ் இருக்காது.. அதற்கு அந்தச் சங்கங்கள் ஒத்துக் கொள்ளாது என்றே நினைக்கிறோம்..!

இத்தோடு இதனைவிட்டுவிடாமல் இனிமேலும் வேறு யாருமே இது போன்று தன்னிச்சையாக அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சினிமா துறைக்குள் தனியாக ஆட்டம் போட பெப்சி அனுமதிக்கக் கூடாது என்றும் கோரிக்கை வைக்கிறோம்.

Our Score