நேற்றைக்கு வெளியாகியிருக்கும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் ‘ஆஹா கல்யாணம்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. “படம் நல்லாயிருக்கு..” என்ற மவுத் டாக்கும் பரவியிருக்கிறது.. படத்தின் அறிமுக இயக்குநர் கோகுல் கிருஷ்ணா, மிகுந்த சந்தோஷத்துடன் பிரமோஷன் வேலைகளைச் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இத்திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான செய்தியொன்று கிடைத்திருக்கிறது.
இத்திரைப்படம் 2010-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘Band Baaja Baaraat’ என்ற இந்திப் படத்தின் தமிழ் ரீமேக். இதன் தெலுங்கு வெர்ஷனும், இதே பெயருடன் நேற்றைக்கு ஆந்திராவில் ரிலீஸாகியிருக்கிறது.
இந்த நிலைமையில் இந்தப் படத்தின் கதையை வைத்து Jabardasth என்ற பெயரில் 2013-ம் வருடம் பிப்ரவரி 22-ம் தேதி ஒரு தெலுங்கு படம் ரிலீஸாகியுள்ளது. இதில் சித்தார்த் ஹீரோவாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். சிம்ரன் கேரக்டரில் நித்யா மேனன் நடித்திருக்கிறார். இந்தப் படம் ஒரிஜினல் வெர்ஷனான, Band Baaja Baaraat படத்தின் அப்பட்டமான காப்பியாம்.. இதைத் தயாரித்திருப்பவர்கள் டாலிவுட்டின் மிகப் பெரிய தயாரிப்பாளர்களான பெல்லம்கொண்டா சுரேஷ்பாபு-கணேஷ்பாபு சகோதரர்கள். இயக்கியிருந்தவர் பி.வி.நந்தினி ரெட்டி என்ற பெண் இயக்குநராம்.
மிக தைரியமாக யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் அனுமதி பெறாமலேயே இந்தக் கதையைப் படமாக்கி அதனை வெற்றிப் படமாகவும் ஆக்கியுள்ளனர். 15 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 30 கோடியை தியேட்டர் வசூலாகவே வசூலித்ததாம். இது போக இந்த தெலுங்கு படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் மற்றும் ஆடியோ ரைட்ஸ் உரிமை 5.25 கோடிகளுக்கு விற்பனையானதாம்..
தங்களது அனுமதியில்லாமல் தங்களது கதையை வைத்து படத்தை எடுத்திருப்பதால் படத்தைத் தயாரித்திருக்கும் சாய் கணேஷ் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் மீது தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ரா வழக்கு தொடுத்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது..
இதில் கூடுதல் சுவாரஸ்யம்..
‘Jabardasth’ தெலுங்கு படம் ரிலீஸான தேதி 2013 பிப்ரவரி 22.
‘ஆஹா கல்யாணம்’ தெலுங்கு படம் ரிலீஸான தேதி 2014 பிப்ரவரி, 21.
இது எப்படி இருக்கு..?