full screen background image

திரைப்பட இயக்குநர் கே.சுபாஷ் காலமானார்

திரைப்பட இயக்குநர் கே.சுபாஷ் காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநரான கே.சுபாஷ் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 57.

பழம் பெரும் இரட்டையர் இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சுவில் மூத்தவரான கிருஷ்ணனின் மகன் இவர்.

director-subash-1

1974-1975-களில் சினிமா துறையில் நுழைய விரும்பி முதலில் எடிட்டிங் துறையில் கால் பதித்திருக்கிறார். இயக்குநர் பஞ்சுவிடமே படத்தொகுப்பு பணியினை கற்றுக் கொண்டிருக்கிறார். அதோடு கூடவே கே.பாலசந்தர், மகேந்திரன், மணிரத்னம் ஆகியோரின் படங்களின் படத்தொகுப்புப் பணியில் பயிற்சி பெற்றிருக்கிறார்.

மணிரத்னத்தின் தொடர்பு கிடைத்தவுடன் அவருடன் ‘பகல் நிலவு’, ‘இதயக் கோவில்’, ‘மெளன ராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.

இதன் பின்பு பல படங்களை இயக்கியிருக்கிறார். ‘வாக்குமூலம்’, ‘பவித்ரா’, ‘நேசம்’, ‘ஏழையின் சிரிப்பில்’, ‘சபாஷ்’, ‘ஒன் டூ த்ரி’ ஆகிய படங்களை தயாரித்து இயக்கியிருக்கிறார்.

மேலும், ‘கலியுகம்’, ‘உத்தமபுருஷன்’, ‘சத்ரியன்’, ‘பிரம்மா’, ‘ஆயுள் கைதி’, ‘பங்காளி’, ‘அபிமன்யூ’, ‘நினைவிருக்கும்வரை’, ‘லவ் மேரேஜ்’ ஆகிய படங்களை எழுதி, இயக்கியிருக்கிறார்.

மேலும் தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் சில படங்களை இயக்கியிருக்கிறார்.

ஷாருக்கானின் புகழ் பெற்ற ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் கதாசிரியர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி திரையுலகின் மிகப் பெரும் இயக்குநர்களான ராஜ்குமார் சந்தோஷி, ரமேஷ் சிப்பி, ரோஹித் ஷெட்டி ஆகியோரின் திரைப்படங்களில் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.

2001-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ‘லவ் மேரேஜ்’தான் தமிழில் இவர் இயக்கிய கடைசி படமாகும்.

சமீப நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

Our Score