சபரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் “EMI மாதத் தவணை“.
இந்தப் படத்தில் கதாநாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், OAK சுந்தர், ‘லொள்ளு சபா’ மனோகர், T.K.S., செந்தி குமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “என் நண்பனே” என்ற இசை ஆல்பத்திற்கு இசையமைத்த ஸ்ரீநாத் பிச்சை இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்களை இயக்குநர் பேரரசு மற்றும் விவேக் இருவரும் எழுதியுள்ளனர்.
ஒளிப்பதிவு – பிரான்சிஸ், விடுதலை படத்தின் எடிட்டர் R. ராமர் இந்த படத்தையும் எடிட் செய்துள்ளார். நடன இயக்கத்தை தீனா, சுரேஷ் ஜீத் இருவரும் செய்துள்ளனர். ஸ்டண்ட் – மிராக்கில் மைக்கேல், தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி. பத்திரிக்கை தொடர்பு – புவன் செல்வராஜ், தயாரிப்பு – மல்லையன்.
ஈ.எம்.ஐ.(EMI) என்றால் தெரியாதவர்களே இந்த உலகத்தில் இருக்க முடியாது. நவீன உலகத்தின் மிகச் சிறந்த வியாபார சூத்திரங்களில் இந்த ஈ.எம்.ஐ.தான் முதன்மையானது.
ஒரு சாதாரண குக்கர் முதல் 120 செண்டிமீட்டர் எல்.சி.டி. டிவி வரையிலும் இப்போது ஈ.எம்.ஐ. என்னும் ஈசி இன்ஸ்டால்மென்ட் அமௌன்ட் என்ற இந்த மாத தவணையில் ஈசியாக கிடைக்கிறது.
கடனைத் திருப்பிக் கட்டும் சக்திக்கு உட்பட்டோர் இந்த ஈ.எம்.ஐ. மூலமாக வாங்கி பலனடைகிறார்கள். கடனைத் திருப்பி கட்டும் சக்தி இல்லாமல் ஒரு ஆர்வக் கோளாறிலும், ஒரு வேகத்திலும் இந்த ஈ.எம்.ஐ.யில் சிக்கிக் கொண்டு தவித்து தங்களுடைய வாழ்க்கையை தொலைத்தவர்களும் நிறைய பேர் உண்டு.
அது மாதிரியான ஒரு அபலைக்காரனின் வாழ்க்கைதான் இந்த ஈ.எம்.ஐ. என்ற திரைப்படம்.
நாயகனாக நடித்திருக்கும் சதாசிவம் சின்னராஜ் மாம்பழத்திலிருந்து ஜூஸ் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் குவாலிட்டி கன்ட்ரோலராக வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலைக்கு சேரும் நாயகி சாய் தன்யாவைப் பார்த்தவுடன் லவ் ஆகிறார்.
இந்தக் காதல் ஜெயிக்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். இந்த நேரத்தில் தன்னுடைய மனைவி தன்னைவிட வசதியான இடத்தில் பிறந்து வளர்ந்ததால் அவருக்கு ஏற்றபடியாக வாழ்க்கை வாழ்வதற்காக சில முயற்சிகளை முன்னெடுக்கிறார் நாயகன் சதாசிவம்.
கல்யாணத்திற்கு முன்பேயே ஈ.எம்.ஐ.யில் புதிதாக ஒரு பைக்கை வாங்குகிறார். அதற்கு மேலும் மேலும் ஒரு ஈ.எம்.ஐ.யில் ஒரு காரும் வாங்கி விட்டார். இப்பொழுது கார், பைக் இரண்டுக்குமே அவர் மாதத் தவணை கட்ட வேண்டிய நிலைமை இருக்கிறது.
இந்த நேரத்தில் அந்த வருடத்தின் மாம்பழ சீசன் முடிந்து விட்டதால் அந்த நிறுவனத்தின் ஓனர் “அடுத்த சீசனில் உன்னை வேலைக்கு கூப்பிடுகிறேன். இப்பொழுது வேலையில்லை. போகலாம்” என்கிறார்.
வேலை பறிபோன உடன் வேறு வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் மூன்று மாதங்களாக ஈ.எம்.ஐ. கட்ட முடியாமல் தவிக்கிறார் சதாசிவம். ஈ.எம்.ஐ. கட்டியாக வேண்டும் என்று காருக்கு கடன் கொடுத்தவர்களும், பைக் வாங்க கடன் கொடுத்தவர்களும் சதாசிவம் வீட்டுக்கு தேடி வந்து அவரை மிரட்டுகிறார்கள்.
சதாசிவம் இந்தக் கடனை அடைப்பதற்கு என்ன செய்தார்? இந்தக் கடன் சுமையிலிருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சதாசிவம் சின்னராஜே இயக்குநராகவும் இருப்பதால் தனக்கு எந்த அளவுக்கு நடிப்பு வருமோ அந்த அளவுக்கு தன்னை முன் நிறுத்தி இந்தப் படத்தை கொண்டு சென்றிருக்கிறார்.
ஒரு பார்வைக்கு பக்கத்து வீட்டுப் பையனை போல எளிமையான தோற்றத்தில் இருப்பது அவருக்கு கிடைத்திருக்கும் ஒரு பலம். அதனை வைத்து இந்தப் படம் முழுவதும் ஒரு நாயகனாகவே நம்மிடையே இடம் பிடித்து விட்டார் நாயகன் சதாசிவம்.
முதல் படம் என்பதால் அவருடைய காதல் நடிப்பு, சோக நடிப்பு, அழுகை நடிப்பு இதையெல்லாம் நம் மனதில் கொள்ளாமல் அவர் சொல்ல வந்த விஷயத்தை மட்டுமே மனதில் கொண்டு அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை முழுமையாக செய்திருக்கிறார் என்று நாம் சொல்லிவிடலாம்.
நாயகியாக நடித்திருக்கும் சாய் தன்யாவிற்கு நடிப்புக்கான மிகப் பெரிய ஸ்கோப் படத்தில் இல்லை என்றாலும் அவருக்கு கிடைத்த இடத்தில் மிகவும் கச்சிதமாக தன்னுடைய இருப்பை நிலைநாட்டும் வகையில் நடித்திருக்கிறார்.
அதுவும் கிளைமாக்ஸ் கட்டத்தில் தன்னுடைய அப்பா வீட்டிற்கு கிளம்புவதாக சொல்லிவிட்டு வீட்டிலிருந்து பேசிக் கொண்டே நடு ரோட்டுக்கு வந்து சண்டையிடும் அந்தக் காட்சியில் நாயகன், நாயகி இருவருமே மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் பிளாக் பாண்டி கடைசிவரையில் அவருடைய கதாபாத்திரத்தை கவனிக்க வைத்திருக்கிறார். செந்தி குமாரி வழக்கம் போல ஒரு சாதாரண அம்மாவாகவே வந்து சென்றிருக்கிறார்.
நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் பேரரசு தன்னால் முடிந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மாதத் தவணை வசூலிக்க வரும் சன் டிவி ஆதவன் அவர் பங்குக்கு ஈ.எம்.ஐ. வசூலிக்க வருபவர்கள் எந்த லட்சணத்தில் இருப்பார்களோ… அந்த லட்சணத்தை தன்னுடைய நடிப்பில் காட்டி இருக்கிறார். மற்றும் உடன் நடித்த மற்றவர்களும் கொஞ்சம் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
படத்தின் துவக்க கட்சியில் இருந்து கடைசிவரையிலும் ஒளிப்பதிவாளர் பிரான்சிஸ் படத்தை ஒரு நல்ல தரமான படமாக கொடுக்க வேண்டும் என்று மெனக்கெட்டு இருக்கிறார்.
படத்தில் மிகவும் குறிப்பிட்டு பேச வேண்டியது படத்தின் இசையைத்தான். இசை அமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சையின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கக் கூடிய ரகம். மிக எளிமையான வார்த்தைகளால் பாடல்கள் ஒலிக்கின்றன.
இப்போதைய காலகட்டத்தில் பலரும் மிக எளிதாக கவர்ச்சி வசனங்களை பேசி நம்முடைய மூளையையும் கொஞ்சம் மதிமயக்கி நம் கையில் பணமே இல்லையென்றாலும் 100 ரூபாய் கொடுத்தாவது, பத்தாயிரம் ரூபாய் பொருளை நாம் தலையில் கட்டி விடுகிறார்கள்.
அதற்கு பிறகு மாதாமாதம் நாம் அவர்களுக்கு அடிமையாக வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறார்கள். அந்த வழியில் அவரவர்க்கு எது தேவையோ அதை மட்டும் வாங்க வேண்டும் .அதோடு வாங்கும் சக்தி நமக்கு இருந்தால்தான் எதையும் வாங்க வேண்டும் ஒரு கடனை அடைத்துவிட்டுத்தான் அடுத்தக் கடனை நாம் தொட வேண்டும். நம்முடைய ஆசை எல்லையில்லாதது. ஆனால், அந்த ஆசையை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இல்லாவிடில் நம்முடைய வாழ்க்கையும் அதல பாதாளத்திற்கு போய்விடும் என்று பல விஷயங்களை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
முழுவதும் பிரச்சாரப் படமாக கொண்டு சென்றால் போரடிக்குமே என்பதற்காக இடையில் கொஞ்சம் காதல், காமெடி, சென்டிமென்ட் என்று பல்வேறு ஊறுகாய்களையும் தொட்டுக் கொள்ளும் வகையில் திரைக்கதையை கச்சிதமாக அமைத்திருக்கிறார். அந்த வகையில் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
அதோடு இல்லாமல் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பொது அறிவை நமக்கு புகட்டும்விதமாக விபத்தில் சிக்கிக் கொள்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரையிலான உடனடியாக மருத்துவ சிகிச்சையை அனைத்து மருத்துவமனைகளும் செய்தாக வேண்டும் என்ற தமிழக அரசின் ஒரு உத்தரவு இருக்கிறது என்பதை இந்த படத்தின் மூலமாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள்.
இந்த நல்ல விஷயத்தை பொது மக்களுக்கு இந்தப் படத்தின் மூலமாக கொடுத்தமைக்காக இயக்குநருக்கு நமது மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் நிச்சயமாக அடுத்த முறை மாதத் தவணையாக எதையாவது வாங்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு முறைக்கு, இரு முறை நிச்சயமாக யோசிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இத்திரைப்படம் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படமாகும்.
RATING : 3 5 / 5