தென்னிந்திய திரைப்பட, சின்னத்திரை பின்னணி குரல் கலைஞர்கள் சங்கத்தில் முறைகேடு குறித்த புகார் மீது நடவடிக்கைக் கோரி அந்தச் சங்கத்தின் உறுப்பினர்களான மயிலை எஸ்.குமார், டி.சிஹிமோல், வி.காளிதாஸ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அவர்கள் தாக்கல் செய்திருந்த மனுவில், “நாங்கள் தென்னிந்திய திரைப்பட, டி.வி. தொடர் கலைஞர்கள் மற்றும் பின்னணி குரல் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறோம், தற்போது எங்களது சங்கத்தின் தலைவராக ராதாரவியும், பொருளாளராக ராஜகிருஷ்ணனும் உள்ளனர்.
சங்கத்தில் ஏராளமான நிதி முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து சங்க உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினாலும், நிர்வாகிகள் பிரச்சினைக்கு தீர்வு காண முன் வருவது இல்லை. வரவு-செலவு கணக்கு புத்தகத்தை உறுப்பினர்கள் பார்வையிட சட்டப்படி எந்த தடையும் இல்லை என்றாலும், அவற்றை பார்வையிட அனுமதிப்பதும் இல்லை.
இதுவரை உறுப்பினர்களின் குடும்பத்துக்கு கல்வி, மருத்துவ, திருமண உதவிகள் செய்தது குறித்த விவரம் கேட்டாலும் தருவது இல்லை, ஆண்டு சந்தாவாக உறுப்பினர்களிடம் ரூ.180 மற்றும் ரூ.200 வசூலித்தாலும், வெறும் ரூ.120 மட்டுமே வரவு வைக்கப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு 2 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய் நன்கொடையாக சங்கம் வசூலித்துள்ளது என்று ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சங்க ஆவணங்களில் 4 லட்சத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற ஏரளாமான நிதி முறைகேடுகள் நடந்துள்ளன.
இது குறித்து கடந்த ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் தொழில் சங்கங்களின் கூடுதல் பதிவாளருக்கு புகார் மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே எங்களது புகார் குறித்து தொழிற் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்…” எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் நேற்றுவிசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தீர்வு காண முடியாது என்பதால், இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள், ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரி முன்பு சமர்ப்பித்து அதனடிப்படையில்தான் தீர்வு காண முடியும் என அறிவுறுத்தினார்.
அதன்படி, மனுதாரர்கள் ஜூன் 11-ம் தேதி மற்றும் நவம்பர் 18-ம் தேதி கொடுத்த புகார் மனுக்களின் அடிப்படையில், இரு தரப்பினர்களும் தரும் ஆதாரங்கள், ஆவணங்களை பரிசீலித்து சட்டப்படி தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தொழிற் சங்கங்களின் கூடுதல் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.