full screen background image

“பாக்யராஜை ஹீரோவாக்கியபோது என்னை பைத்தியமா என்று கேட்டார்கள்” – இயக்குநர் பாரதிராஜா பேச்சு

“பாக்யராஜை ஹீரோவாக்கியபோது என்னை பைத்தியமா என்று கேட்டார்கள்” – இயக்குநர் பாரதிராஜா பேச்சு

டிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் படம் ‘பச்சை விளக்கு’.

புதுமுகங்கள் தீசா, தாரா, ‘அம்மணி’ புகழ் ஸ்ரீமகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, ‘நெல்லை’ சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ‘வேதம் புதிது’ தேவேந்திரன் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பாரதிராஜா திரைப்படக் கல்லூரியில், நேற்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் மொரிஷியஸ் நாட்டின்  முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, ‘இயக்குநர் திலகம்’ கே.பாக்யராஜ், ‘மதுரா டிராவல்ஸ்’ பாலன், மலேசிய எழுத்தாளர் நெல்லையப்பன் நாயக்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

R06A0358

இந்த விழாவில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா பேசும்போது, “இன்று மீடியா மிகப் பெரிதாக வளர்ந்துள்ளது. நாங்கள் படம் எடுத்த காலத்தில் இரண்டு, மூன்று பேர்தான் கேமராக்களோடு வருவார்கள். இன்று மாறனின் இந்தப் ‘பச்சை விளக்கு’ படத்தின் விழாவிற்கு இத்தனை பேர் வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மாறனின் இந்தப் ‘பச்சை விளக்கு’ படம் அரசாங்கம் எடுக்க வேண்டிய படம். பொதுநல கருத்துள்ள படம். மேலும் படத்தில் கமர்சியலும் இருக்கிறது.

இன்று நிறைய பேர் சாலை பயணத்தின்போது பச்சை விளக்கை மதிப்பதில்லை. பச்சை விளக்கு போடும் முன் நாம் சாலையைக் கடந்தால் நாம் ‘மேலே’ போய்ச் சேர்ந்திடுவோம் என்று தெரிவதில்லை. நிதானம் இப்போது மிக, மிக முக்கியம். நிதானம் தவறினால் வாழ்க்கை  ஒரு நொடியில் போய்விடும். நிதானமாகச் சென்றால் நீண்ட நாள் வாழலாம். நீண்ட வருடங்கள் இருக்கலாம். அப்படி ஒரு அழகான படத்தை இயக்கியிருக்கிறார் டாக்டர் மாறன்.

பாக்யராஜ் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  பாக்யராஜ் என்னிடம் உதவி இயக்குநராக இருந்தபோது, அவன் நடிகர், நடிகையருக்கு வசனம் சொல்லிக் கொடுப்பதை நான் தொடர்ந்து கவனித்து வந்தேன். மிகவும் வித்தியாசமாக  சொல்லிக் கொடுப்பான். அதனால்தான் புதிய வார்ப்புகள் படத்தில் அவனையே நாயகனாக நடிக்க வைக்கலாம் என்று தோன்றியது.

கண்ணாடியை மாட்டி அவனை ஹீரோவாக்கினேன். அவன் வாழ்க்கை மாறியது. அவனை ஹீரோவாக்கியபோது சிலர் எனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருச்சா என்று கேட்டார்கள். என் கண்ணில் அவன் கதாநாயகனாகத் தெரிகிறான் என்றேன். எனது கண்களுக்கு பாக்யராஜ் வாத்தியாராகவே தெரிகிறான் என்று சொன்னேன்.

R06A0405

அதன் பிறகு அவன் வளர்ந்தது வேறு. நான் விதை போட்டேன். அவ்வளவுதான். ஆனால், இது போன்று விதை போடுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். என்னுடைய கதைக்கு என் மூஞ்சி. அவன் கதைக்கு அவன் மூஞ்சி. அந்தக் கதாபாத்திரத்திற்கு அழகாக இருக்கிறான் என்று ஜெமினி கணேசனை நடிக்க வைக்க முடியாது என்னிடம் வாதிட்டவர்களிடம் சண்டை போட்டேன்.

இதுபோல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது. டாக்டர் மாறனின் துணிச்சலை நான் பாராட்டுகிறேன். அவரது தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன். ஒவ்வொரு மனிதருக்கும் தன்னம்பிக்கை வேண்டும். அது மாறனிடம் இருக்கிறது. அதை நான் பாராட்டுகிறேன்.

நான் இந்த ‘பச்சை விளக்கு’ படத்தை இன்னும் பார்க்கவில்லை.  இருந்தாலும் முன்னோட்டத்தை பார்த்தபோது ஒரு புத்திசாலித்தனமாக காதலை சொல்லி, விபத்து குறித்தும் சொல்லியிருக்கிறார். வெறுமனே மாத்திரையை மட்டும் கொடுக்க முடியாது. மாத்திரை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுக்கிற மாதிரி ஹியூமர் கலந்து கொடுத்திருக்கிறார்.

இளையராஜாவிடம் எனக்கு பிணக்கு ஏற்படும்போது நான் இந்தியாவில் இருக்கின்ற ஆர்.டி.பரமன் உட்பட எல்லா இசையமைப்பாளர்களிடமும் வேலை செய்திருக்கிறேன். பிறகு இளையராஜாவிடம் வருவேன். இளையராஜாவுக்கும் எனக்கும் சில சமயம் ஆகாமல் இருக்கும். இருந்தாலும் இந்தியாவில் சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா ஒருவர் மட்டுமே.

ராஜாவுக்கு அடுத்து நான் ரொம்ப ரசித்தது தேவேந்திரன் இசையை. ஆனால், அவன் ஏன் பெருசா வரவில்லை என்று தெரியவில்லை. தேவேந்திரனின் இசையமைத்த படத்திற்கு இளையராஜாவை அழைத்துச் சென்று காட்டினேன். அப்போது இளையராஜாவுக்கும் எனக்கும்கூட சண்டை.

பாடலாக இருக்கட்டும், பின்னணி இசையாக இருக்கட்டும் அற்புதமாக இருக்கும். உண்மையா உழைக்கிறவன். எங்கேயோ இருக்க வேண்டியவன். கொஞ்சம் சோம்பேறி. ஆனால், நல்ல கலைஞன்.  அப்பழுக்கு இல்லாதவன்.

இப்போதெல்லாம் ஹியூமர் சென்ஸோடு கதை சொன்னால்தான் ரசிகன் ஒத்துக் கொள்கிறான். சீரியசாக கதை சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டான். இந்த ‘பச்சை விளக்கு’ படம் கமர்சியலாக நிற்கும்” என்று வாழ்த்திப் பேசினார் இயக்குநர் பாரதிராஜா.

R06A0603

‘இயக்குநர் திலகம்’ கே.பாக்யராஜ் பேசும்போது, “இந்தப் படமே ஒரு கலப்படமா இருக்கு. டிராபிக் பற்றிய படமா இருக்கும்னு நினைச்சேன். அப்படி ஆரம்பிச்சு இடைல டூயட்லாம் பாடி ஆடுறாங்க. இன்னைக்கு இருக்குற சினிமாவில் கருத்து சொல்ற மாதிரி படம் எடுக்குறது ரொம்ப கஷ்டம்.

இப்படத்தின் இயக்குநர் மற்றும் ஹீரோ மாறன் படித்த படிப்பை எல்லாம் பார்த்தேன். இப்படி ஒருவர் படமெடுக்க வந்திருப்பது பெரிய விசயம். அவருக்கு என் வாழ்த்துகள். இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் மணிமேகலை அவர்களுக்கும் வாழ்த்துகள்.

நடிகர் திலகம் சிவாஜி நடித்த பழைய ‘பச்சை விளக்கு’ படத்தில்  “ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது”ன்னு  ஒரு பாட்டு வரும். அதுபோல் இப்படத்தின் டீமுக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்…” என்றார்.

R06A0203

இயக்குநர் மாறன் பேசும்போது, “விதி மீறிய பயணமும், விதி மீறிய காதலும் சரியாக இருக்காது என்பதைத்தான் இந்தப் ‘பச்சை விளக்கு’ படம் பேசுகிறது. நம் கலாச்சாரத்தை பேசுக் படமாகவும் இப்படம் இருக்கும்.

நான் திரைத்துறைக்கு புதியவனாக இருந்தாலும் என்னுடன் பணிபுரிந்த அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இப்படத்தில் டெக்னிக்கல் டீம் மொத்த பேரும் ஸ்ட்ராங்காக உழைத்தார்கள். அதற்கு அனைவருக்கும் நன்றி. இப்படத்தின் இசை அமைப்பாளர் மிக அற்புதமாக உழைத்தார்.

இப்போது தியேட்டர்களுக்கு மக்கள் வருவதே அரிதாகிவிட்டது. அதனால் இப்படத்தை பிரச்சாரப் படமாக இல்லாமல் கமர்ஷியல் கலந்து உருவாக்கியிருக்கிறோம். இன்றைய விஞ்ஞானம் மனித குலத்திற்கான வளர்ச்சிக்காகத்தான் இருக்க வேண்டும். அது அழிவுக்காக இருந்துவிடக் கூடாது என்பதையும் இப்படத்தில் பேசியுள்ளோம்…” என்றார்.

Our Score