டப்பிங் யூனியன் விவகாரம் – நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..!

டப்பிங் யூனியன் விவகாரம் – நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..!

பின்னணி கலைஞர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்தது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட டப்பிங் யூனியன் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெ.மதியழகன், சாலிகிராமத்தை சேர்ந்த ஆர்.மகாலட்சுமி, பி.ஆர்.கண்ணன் ஆகியோர் கோர்ட்டு அவமதிப்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், “நாங்கள் தென்னிந்திய திரைப்படம், டி.வி.தொடர் கலைஞர்கள் மற்றும் பின்னணி குரல் கலைஞர்கள் சங்கத்தி உறுப்பினர்களாக உள்ளோம். நாங்கள் பல திரைப்படங்களில் கதாநாயகர்கள், கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளோம்.

இதற்கான சம்பளத்தை திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், தென்னிந்திய திரைப்படம், டி.வி.சீரியல் கலைஞர்கள் மற்றும் பின்னணி குரல் கலைஞர்கள் சங்கத்துக்கு நேரடியாக கொடுத்துவிடுகின்றனர். இந்த சம்பள தொகையில் 10 சதவீதத்தை சங்க நிர்வாகம் பிடித்தம் செய்து, மீதமுள்ள தொகையை எங்களுக்கு வழங்குகிறது.

இதனை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பின்னணி கலைஞர்களின் சம்பளத்தை அவர்களுக்கு நேரடியாக வழங்கவேண்டும். அந்த தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யக்கூடாது என்று கடந்த ஆண்டு மார்ச் 31–ம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை மீறி இன்னும்கூட பின்னணி கலைஞர்களின் சம்பளத்தை சங்கம் மூலமாகவே தயாரிப்பாளர்கள் வழங்குகின்றனர். அந்த சம்பளத்தில் 10 சதவீதத்தை சங்க நிர்வாகமும் பிடித்தம் செய்கிறது.

எனவே, இந்த கோர்ட்டு உத்தரவை அவமதித்த தென்னிந்திய திரைப்படம், டி.வி. சீரியல் கலைஞர்கள் மற்றும் பின்னணி கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பிரகாஷ், தலைவர் கே.ஆர்.செல்வராஜ், தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்று கேட்டிருந்தார்கள்.

நேற்று இந்த மனுவை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் விசாரித்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, திரைப்பட டப்பிங் யூனியன் நிர்வாகிகளான செல்வராஜ், பிரகாஷ் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.