நேற்று மாலை தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் ‘அவன் அவள்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய நடிகர் கருணாஸ் திருட்டு விசிடி தமிழ் சினிமாவை அழித்து வருவதாக குற்றம்சாட்டிப் பேசினார்.
கருணாஸ் பேசும்போது, “திருட்டி விசிடி சினிமாவை அதிகமாக அழித்து கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படம் வெளிவந்து ஐந்து மணி நேரத்தில் கடைகளுக்கு திருட்டு விசிடி வந்து விடுகிறது. ‘கதகளி’ படம் வந்த அடுத்த 3 மணி நேரத்தில் அன்றைக்கு மதியமே அதன் விசிடி வெளியாகிவிட்டது. தமிழகத்தில்தான் திரையரங்கத்தில் எடுக்கப்பட்டதை நாங்கள் கண்டறிந்து சம்பந்தப்பட்ட யூனியன்களிடத்தில் உடனடியாக புகார் அளித்தும் ஒன்றும் பயனில்லை.
பெப்சி, தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் என்று அனைத்திலும் சொல்லியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையில்லையென்றால் என்னதான் செய்வது..?
சென்னை வடபழனியில் போலீஸ் ஸ்டேஷனின் பக்கத்திலேயே ஒரு கடையில் புத்தம் புதிய படங்களின் விசிடிகளை விற்கிறார்கள். அது பற்றி போலீஸில் பல முறை புகார் கொடுத்தாகிவிட்டது. ஒன்றும் பலனில்லை.
வருடத்திற்கு 200 படங்கள் ரிலீஸாகின்றன. 600 கோடி ரூபாய்வரையிலும் இந்த்த் துறையில் பணம் போட்டு புரட்டப்படுகிறது. இந்த நிலைமையில் இதனை அழிப்பதுபோல இந்த திருட்டு விசிடியும் அசுரத்தனமாய் வளர்ச்சியடைந்து வருகிறது.
இதே நிலை நீடித்தால் இன்னும் குறுகிய காலங்களில் தமிழ் சினிமா அழிவதை யாராலும் தடுக்க முடியாது. அதனால் அரசு இந்த திருட்டு விசிடி விற்பணை செய்பவர்களையும். அந்த திருட்டு விசிடி தயாரிக்கும் நெட்வொர்க்கையும் விரைவில் பிடிக்க வேண்டும் இல்லை என்றால் சிறு முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் நொடிந்து போவது உறுதி. இதற்கு தற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.
இத்தனை செய்தும், சொல்லியும், கத்தியும்.. அரசுகளும் செவிசாய்க்கவில்லை.. திரையுலக சங்கங்களும் களத்தில் இறங்கவில்லையென்றால் யாரை குற்றம் சொல்லி என்ன பயன்..?