full screen background image

“ஐ’ திரைப்படத்தை மறு தணிக்கை செய்ய முடியாது..” – சென்னை சென்சார் போர்டு அதிகாரி பேட்டி..!

“ஐ’ திரைப்படத்தை மறு தணிக்கை செய்ய முடியாது..” – சென்னை சென்சார் போர்டு அதிகாரி பேட்டி..!

‘ஐ’ திரைப்படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால், அக்காட்சிகளை திரைப்படத்தில் இருந்து நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நேரத்தில் கதைக்கு தேவைப்பட்டதால் திருநங்கை தொடர்பான காட்சிகளை அனுமதித்தோம் என்றும் ‘ஐ’ திரைப்படத்தை மறு தணிக்கை செய்ய முடியாது என்றும் திரைப்பட தணிக்கை வாரிய மண்டல அதிகாரி வி.பக்கிரிசாமி ‘தினத்தந்தி’க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

bakkirisamy

அவர் இது பற்றி கூறுகையில், “ஐ’ திரைப்படத்தில் ஒரு திருநங்கை முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றார். அவரை கதாநாயகனும் அவருடைய நண்பனும் பாட்டுப் பாடி கிண்டல் செய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.

சமுதாயத்தில் உள்ள ஒரு சிலர் திருநங்கைகளை பார்ப்பது போன்றுதான் படத்தின் கதாநாயகனும் திரைப்படத்தில் பார்க்கிறார். இந்த ஒரு காட்சியை மட்டும் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்துவது சரியான அணுகுமுறையல்ல. படத்தின் கதை அமைப்பிலேயே அப்படி ஒரு காட்சி தேவைப்படுவதால் அதனை அனுமதித்தோம்.

திரைப்பட தேர்வு கமிட்டி, மறு தேர்வு கமிட்டி மற்றும் டெல்லியில் உள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய மேல்முறையீட்டு ஆணையம் உள்ளிட்ட 3 கமிட்டியினர் இந்தப் படத்தை தணிக்கை செய்தனர். தயாரிப்பாளர்கள் மட்டும் அல்லாது தணிக்கை வாரிய குழு உறுப்பினர் அனைவருடைய ஆலோசனைப்படித்தான் இந்த படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது.

i_movie_stills_1

ஒரு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கிய பிறகு எவரும் அதில் குறுக்கிட முடியாது. இருந்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒரு முறை தணிக்கை செய்யப்பட்ட திரைப்படத்தை மீண்டும் வாங்கி மறு தணிக்கை செய்ய மத்திய அரசுக்கு உரிமை கிடையாது. தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம்.

ஒரு முறை திரைப்படத்தை பார்க்கும்போதே, அண்டை நாடுகளின் நல்லுறவு பாதிக்கும் வகையிலும், நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தனிப்பட்ட நபர்கள் அவமதிப்பு போன்ற சமுதாயத்தை பாதிக்கும் வகையிலான காட்சிகள் மற்றும் வசனங்கள் குறிப்பாக ‘நொண்டி’, ‘முடம்’ போன்ற வசனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

‘ஐ’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்படி திருநங்கைகள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களுடைய பிரச்சினை குறித்து திரைப்படத்தின் தயாரிப்பாளரிடம் முறைப்படி தெரிவிக்கப்படும். ஆனால் படத்தில் வரும் காட்சியை நீக்கும்படி தயாரிப்பாளரை நிர்ப்பந்திக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை. அதேபோல் திருநங்கைகளையும் தணிக்கை குழு உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு மண்டல அதிகாரிக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசுதான் உறுப்பினர்களை நியமித்து வருகிறது. அவர்களைத்தான் கேட்க வேண்டும்.

திருநங்கைகளுக்கு ஏற்படும் தனிப்பட்ட பிரச்சினையை போக்க சமுதாயமே சேர்ந்து மாற்ற வேண்டும். அனைவரும் இந்த விஷயத்தில் இணைந்து பாடுபட வேண்டும். மாறாக சினிமாவில் வரும் காட்சிகளை வைத்து முடிவெடுக்க கூடாது. மாறாக காட்சிகளை தடை செய்யுங்கள் என்று கூற கூடாது. திரைப்பட காட்சியை பார்த்து கிண்டல் செய்யும் வக்கிரபுத்தி கொண்டவர்களை போலீசில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதே ஆரோக்கியமான சமுதாயத்துக்கு அழகாகும்.

அதே நேரம் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க தயாரிப்பாளர்களை தணிக்கை வாரியம் நிர்ப்பந்திக்க முடியாது. அதற்கு சட்டத்திலும் இடம் இல்லை. தயாரிப்பாளர்களே முன் வந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்குவதாக இருந்தால், அதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம்.

சமுதாயத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட கோரி எதிர்ப்பு தெரிவிப்பது என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் சமுதாயத்தில் புரட்சிகரமான கருத்துக்களும் தேவைப்படுவதால், புதிய பரிமாணத்துடன் உருவாக்கப்படும் திரைப்படங்களையும், படைப்பாளிகளையும் நாம் தடுத்து விட கூடாது.

சினிமாவில் ஏற்படும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவை நிலுவையில் இருந்து வருகிறது. இருந்தாலும் சினிமாவையே பார்த்துக் கொண்டிருக்காமல் சமுதாய வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும்..” என்று கூறியிருக்கிறார்.

மிஸ்டர் பக்கிரிசாமி ஸார்.. நமக்கு ஒரு சந்தேகம்.

சென்சார் போர்டு உறுப்பினர்கள் சென்சார் சர்டிபிகேட்டுக்காக வரும் தயாரிப்பாளர்களிடமிருந்து லஞ்சம் வாங்குவது போலவும், இன்ன பிற சலுகைகளை கேட்டு பெற்று அதன் பின்னரே லஞ்சத்திற்கு சர்டிபிகேட் கொடுப்பது போலவும் படம் எடுத்து கொண்டு வந்தால் சென்சார் போர்டு இதுவும் சமுதாயத்தில் ஒரு அங்கம்தான் என்று நினைத்து சர்டிபிகேட் தருமா..?

Our Score