பிரிட்டனில் வாழும் இந்திய வசம்சாவளி பெண்மணியான சந்தியா சூரி இயக்கிய ‘சந்தோஷ்’ என்ற திரைப்படத்தை இந்தியாவில் திரையரங்குகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ‘சந்தோஷ்’ திரைப்படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. தவிர, இப்படம் கடந்த வருடம் பல நாடுகளில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளையும் பெற்றது.
இத்திரைப்படத்தை, இந்தியாவில் வெளியிட இயக்குநர் சந்தியா சூரி திட்டமிட்டார். ஆனால், இப்படத்தில் இருக்கும் பல்வேறு வசனங்களையும், காட்சிகளையும் நீக்குமாறு, இந்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) கூறியது. அதற்கு சநதியா மறுக்கவே, படத்தை வெளியிட தணிக்கை வாரியம் தடை விதித்து உள்ளது.
சந்தோஷ் என்கிற பெண்மணியின் வாழ்வின் மூலமாக கதை விரிகிறது. இவரது கணவர் காவல் துறையில் பணியாற்றி இறந்துவிடுகிறார். இதையடுத்து சந்தோஷூக்கு காவல் துறையில் கான்ஸ்டபிள் பணி கிடைக்கிறது.
இந்நிலையில், அப்பகுதியில் மர்மமான முறையில் பட்டியல் இன சிறுமி ஒருத்தி கொலை செய்யப்படுகிறாள். இதை விசாரிக்கும் பொறுப்பு சந்தோசிடம் வருகிறது. விசாரணையில் பாலியல் கொடூரங்கள், சாதிய வன்கொடுமைகள், காவல் துறையில் நடக்கும் சாதிய, அதிகார ஒடுக்குமுறைகளை எல்லாவற்றையும் அறிந்து அதிர்ச்சியடைகிறார் சந்தோஷ். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த சந்தோஷ்படத்தின் கதை.
இந்தியாவில் சாதீய அடக்குமுறை.. அதிகார அடக்குமுறை இரண்டினாலும் ஏற்படும் பாதிப்புகளை படம் விளக்குகிறது.
“இந்த நாட்டில் இரண்டுவிதமான தீண்டாமை இருக்கிறது. ஒன்று இவர்களையெல்லாம் தொடவே கூடாது என்று ஒடுக்குவது மற்றொன்று இவர்களையெல்லாம் தொடவே முடியாது என்று அச்சப்படுவது” என்கிற வசனமே, படத்தின் தன்மையை உணர்த்திவிடும்.
இந்த நிலையில்தான், இந்தியாவில் இப்படம் தடை செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் சந்தியா சூரி, “காவல்துறையை மையமாகக் கொண்ட பல படங்கள் வன்முறையைக் கொண்டாடும்விதத்தில் உருவாகி இருக்கின்றன. ஆனால் எனது படம் வன்முறையைக் கொண்டாடவில்லை. அதற்கு எதிராக நிற்கிறது. இதைத்தான் தடை செய்து உள்ளனர். வெளியிட வேண்டும் என்றால் பல வசனங்கள், காட்சிகளை நீக்க வேண்டும் என்கின்றனர். அப்படிச் செய்தால் படத்தின் ஜீவனே அழிந்துவிடும். உயிரோட்டமான காட்சிகளை நீக்காமல், அதன் சாராம்சம் நீர்த்துப் போகாமல் இந்திய மக்களுக்கான ‘சந்தோஷ்’ படத்தை, இந்திய மக்களிடமே கொண்டு சேர்ப்பேன்” என்று உறுதியுடன் தெரிவித்து இருக்கிறார்.









