‘ஆம்பள’ படத்தின் சக்ஸ்ஸ் பிரஸ் மீட்டில் இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, ‘பாக்ஸ் ஆபீஸ் ஹிட்’ என்று தவறான தகவல்களை மீடியாக்கள் பரப்புவதாக குறைபட்டுக் கொண்டார்.
இயக்குநர் சுந்தர் சி. பேசும்போது, “என்னுடைய செட் இயக்குநர்கள் பலரும் இப்போது பீல்டிலேயே இல்லை. நான் மட்டும் எப்படி இன்னமும் படம் இயக்கிக் கொண்டிருக்கிறேன்னு எல்லாருமே கேட்குறாங்க. அதுக்கு காரணம், நான் இன்றைய இளைஞர்களுக்கு இணையான அளவுக்கு எல்லா விஷயத்துலேயும் அப்டேட்டா இருக்குறதுதான். அப்படி இருக்குறதாலதான் என்னால தொடர்ந்து படமெடுக்க முடியுது.
‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் ரிலீஸானபோது ஒரு இடத்துல சிலர் எனக்கு சால்வை போர்த்தினாங்க. அவங்க யாருன்னே எனக்குத் தெரியலை. ‘நீங்க யார்’ன்னு நான் கேட்டதுக்கு ‘நாங்க எல்லாரும் பிளாக்ல டிக்கெட் விக்குறவங்க. உங்க படம் வந்த பிறகுதான் எங்க வீட்டுல அடுப்பு எரியுது’ன்னு சொன்னாங்க. இதுதான் நிஜமான பாராட்டு. நிஜமான வெற்றி..!
இப்பல்லாம் ஒரு படம் வெற்றிகரமா ஓடுதுங்கறதை பொய்யான புள்ளி விபரத்தை வைச்சு சொல்றாங்க.. சென்னைல மட்டும் இரண்டு தியேட்டர்களில் ஓடும் படத்தை சக்ஸ்ஸ் படம்ன்னு சொல்லக் கூடாது. தமிழ்நாடு முழுக்க சர்வே பண்ணித்தான் சொல்லணும். நிறைய படங்களுக்கு பொய்யான பப்ளிசிட்டியும், தவறுதலான பாக்ஸ் ஆபீஸ் விபரங்களையும் கொடுக்குறதால உண்மையா ஜெயிச்ச படங்களை பத்தி வெளில தெரிய மாட்டேங்குது. ‘ஆம்பள’ படம் தமிழ்நாடு முழுக்க எல்லா தியேட்டர்களிலேயும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். இதுதான் உண்மையான பாக்ஸ் ஆபீஸ் ஹிட்..” என்றார்.
அப்போ இனிமேல் நீங்களே ‘உங்க படம் எந்தெந்த தியேட்டர்ல எத்தனை நாள் ஓடுச்சு.. எவ்வளவு கலெக்சன்..? வரி போக தயாரிப்பாளருக்கு எவ்வளவு கிடைச்சது..? விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்கார்ர்களுக்கும் எவ்வளவு லாபம்..?’ போன்ற தகவல்களை மீடியாக்களுக் பகிரங்கமா கொடுத்திரலாமே..? இப்படி கொடுத்திட்டா மீடியா ஏன் ஸார் பொய்யா எழுதுது..?