ஒரு காமெடியான திருடர்களை வைத்துக் கொண்டு, காமெடியான திரைக்கதையில், காமெடியான இயக்கத்தை வைத்து இந்தப் படத்தை எடுத்து இருக்கிறார்கள்.
லிவிங்ஸ்டனின் பீட்சா கடைகள் வேலை பார்ப்பவர்கள் வைபவ்வும், மணிகண்டா ராஜேஷம். லிவிங்ஸ்டன் தன்னுடைய இளம் வயதில் அனைத்துவித சட்ட விரோத செயல்களையும் செய்தவர். கஞ்சா விற்பனையாளர். அந்த விற்பனையின்போது ஏற்படும் போலீஸ் சோதனையில் ஒரு நாள் வைபவ்வும், மணிகண்ட ராஜேஷூம் சேர்ந்து அவரை காப்பாற்றியிருக்கிறார்கள். அந்தப் பாசத்தினால் வைபவையும் மணிகண்டா ராஜேஷையும் தன் கூடவே வைத்து இவ்வளவு நாட்கள் வளர்த்து வைத்திருக்கிறார்.
தன்னுடைய சட்டவிரோத செயல்கள் மூலம் கிடைத்த பணத்தை வைத்து இப்போது ஒரு பீட்சா கடையை வைத்து நடத்தி வருகிறார் லிவிங்ஸ்டன். இவருடைய மகள் அதுல்யா லண்டனில் மேல் படிப்பு படித்துவிட்டு இப்பொழுதுதான் நாடு திரும்பி இருக்கிறார்.
அதுல்யா மீது வைபவ்வுக்கு ஒரு லவ். அந்த லவ்வை ஒரு கட்டத்தில் அதுல்யாவும் ஏற்றுக் கொள்ள காதலர்களுக்கு லைன் ஓகே ஆகிறது.
இந்த நேரத்தில் லிவிங்ஸ்டனின் நண்பரான இஷாக் ஹூசைனி தன் வீட்டில் இருக்கும் நகை, பணத்திற்கு இன்சூரன்ஸ் செய்திருப்பதால் இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக ஒரு நாடகம் ஆட நினைக்கிறார். அதன்படி தன் வீட்டில் யாராவது ஒருவர் கொள்ளை அடித்துவிட்டு போய்விட்டால் அதை வைத்து நான் இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுக் கொள்வதாக லிவிங்ஸ்டனிடம் சொல்கிறார்.
லிவிங்ஸ்டன் இதற்காக வைபவ் மற்றும் மணிகண்டா ராஜேஷிடம் சொல்லி லிவிங்ஸ்டன் வீட்டை கொள்ளையடிக்க சொல்கிறார். லிவிங்ஸ்டன் சொன்னது போலவே உசைனி வீட்டை கொள்ளையடித்து கிடைத்த பணத்தை தூக்கி கொண்டு வருகிறார்கள் வைபவ்வும், மணிகண்டனும்.
வரும் வழியில் மது மீதான பாசத்தினால் டாஸ்மாக் கடையில் மது அருந்துகிறார்கள் இருவரும். அங்கே நடக்கின்ற ஒரு சண்டை, சச்சரவு, கலவரத்தில் பணத்தை மிஸ் செய்து விடுகிறார்கள்.
இப்போது பணத்தை கொடுக்கவிட்டால் உசைனி தன்னை கொலை செய்து விடுவானே என்று நினைத்து பயப்படும் லிவிங்ஸ்டன் ஹுசைனிடம் கொடுக்க வேண்டிய பணத்திற்காக ஒரு வங்கியை கொள்ளையடித்து அதில் கிடைக்கின்ற பணத்தை வைத்து உசைனியின் கடனை அடைத்துவிடலாம் என்று நினைக்கிறார்.
வங்கியை கொள்ளையடிக்க இவர்களுடன் ஒரு நான்கு முட்டாள் திருடர்களை தேர்வு செய்கிறார்கள். அன்னியன் ரெமோ போல் மல்டிபிள் பெர்சானலிட்டி பிரச்சினையுள்ள ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், காது சுத்தகமாக கேட்காத ஜான் விஜய், குடிகாரனான சுனில் ரெட்டி என்ற இந்த திருடர்கள் கூட்டமும் இவர்களுடன் இணைகிறது.
இவர்களெல்லாம் இணைந்து ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க போகிறார்கள். அந்தக் கொள்ளை திட்டம் வெற்றியடைந்ததா.. தோல்வி அடைந்ததா.. பணம் கிடைத்ததா… இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.
வைபவ் எப்போதும் போல திரைக்கு வெளியில் எப்படி பேசுவாரோ அதே போலவே திரையிலும் பேசிவிட்டு தன்னுடைய வேலையை முடித்ததாக சொல்லிவிட்டு போயிருக்கிறார். இப்படியே எந்த எக்ஸ்பிரஸனும் அதிகமாக காட்டாமல் இயல்பாகவே நடித்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக அடுத்தடுத்த படங்களின் நடிக்க முடியாது என்பதை வைபவ்வுக்கு சொல்லிக் கொள்கிறோம். சட்டில இருக்குறதுதான்யா வரும் என்று அவர் சொன்னால் நமக்கு அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
அதுல்யா அழகாகத்தான் இருக்கிறார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை என்று உறுதியாக மறுத்துவிட்டார். அதனால் அவரை ரசிக்கலாம். பாடல் காட்சிகளில் நளினமாக நடனமாடி இருக்கிறார். கொஞ்சம் நடித்திருக்கிறார். ஏதோ இந்தப் படத்தில் ஒரு நாயகியை பில்லப் செய்வதற்கு அதுல்யாவைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
லிவிங்ஸ்டன், ஹூசைனி மட்டுமே மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் லிவிங்ஸ்டன் தன்னுடைய முகத்தை சுருக்கி, நீட்டி, அதட்டி, உருட்டி என்று பலவித நடிப்புகளையும் காட்டியிருக்கிறார். ஆனந்த்ராஜ் வழக்கம் போல கொஞ்சம் காமெடி கொஞ்சம் வில்லத்தனம் கலந்த தன்னுடைய நடிப்பை இயல்பாக காட்டி இருக்கிறார்.
ஜான் விஜய் சுத்தமாக வேஸ்ட் என்று சொல்லலாம். சுனில் ரெட்டி குடித்து குப்புறப்படுத்துவிட்டார். மொட்டை ராஜேந்திரன் ஏதோ வசனம் பேசி ஏதோ ஒன்றை செய்திருக்கிறார். முகத்திலேயே சிறிதளவு நடிப்பைக் காட்டி அமைதியாகிவிட்டார் மணிகண்ட ராஜேஷ். ஆக மொத்தத்தில் நடிப்பு என்கின்ற வஸ்து இந்தப் படத்தில் ஒண்ணுமே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
இரண்டு, மூன்று இடங்களில் மட்டுமே சிரிப்பை வரவழைத்திருக்கும் இந்தக் காமெடி திரைப்படம் முழு நீள காமெடி திரைப்படமே இல்லை என்று சொல்லலாம்.
இன்னொரு பக்கம் முழு நீள படமாக இந்தப் படத்தை தைரியமாக படம் எடுத்திருக்கும் இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தின் தைரியத்தை நம் மனதார பாராட்ட வேண்டும்.
இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் என்றாலும், பின்னணி இசையில் காதைக் கிழித்துவிட்டார்கள். படம் நெடுகிலும் நல்லதொரு ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஆனால் சண்டைக் காட்சிகளில் தேக்க நிலைதான் கடைசிவரையிலும் தெரிகிறது. இதைவிடவும் சிறப்பான சண்டை காட்சிகளை பல மிடில் கிளாஸ் பட்ஜெட் படங்களில் பார்த்திருக்கிறோம். இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம்.
காமெடி திருடர்கள் என்ற ரீதியில் பல திரைப்படங்கள் இதற்கு முன்பு வந்திருக்கின்றன. வங்கிக் கொள்ளை பற்றியும் பல திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். சவசவ என்ற திரைக்கதையில் நடிக்க வைக்க முடியாத ஒரு இயக்கத்திலும் இந்தப் படத்தை எடுத்திருப்பதால் இந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் சுத்தமாக வீணடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அமரன் படத்தை இயக்கிய இயக்குநரான ராஜேஸ்வரின் மகன் தனது நண்பருடன் இணைந்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இயக்கம் என்றால் கிலோ என்ன விலை என்பது போலவே அனைவரும் நடிக்க வைக்கப்பட்டிருப்பது வேதனையான ஒரு விஷயம்.
ரவுடிகள், கொள்ளைக்காரர்கள், திருடர்கள் போன்ற படங்களையெல்லாம் காமெடியாக எடுத்து காமெடியாக சொதப்பிவிடுவது நம்முடைய இயக்குநர்களின் வழக்கம் அந்த வரிசையில் இந்தப் படமும் மகா சொதப்பலாகி போய் இருக்கிறது.
RATING : 2 / 5









