full screen background image

“விஜய்யை சமாதானப்படுத்தவே அவரைச் சந்தித்தேன்..” – விநியோகஸ்தர் சிங்காரவேலன் விளக்கம்..!

“விஜய்யை சமாதானப்படுத்தவே அவரைச் சந்தித்தேன்..” – விநியோகஸ்தர் சிங்காரவேலன் விளக்கம்..!

‘லிங்கா’ படத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி களேபரம் செய்து கொண்டிருக்கும் அப்படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான சிங்காரவேலன் சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்ததும், விஜய் அளித்த பிரியாணியை டேஸ்ட் பார்த்த செய்தியும், புகைப்படத்துடன் மீடியாவில் பரவ.. வழக்கம்போல அனைத்துவித கதைகளும் வெளியாகிவிட்டன. இப்படியிருக்குமோ..? அப்படியிருக்குமோ..? என்றெல்லாம் செய்திகள் பரவின.

அந்தச் சந்திப்பின்போது, “நான் எங்கண்ணா கொடுக்கக் கூடாதுன்னு சொன்னேன்..?” என்று நடிகர் விஜய் சிங்காரவேலனை கேட்டதாகவும், அதற்கு “அப்படி நான் சொல்லவேயில்லை. யாருடைய பெயரையும் பயன்படுத்தவில்லை. மீடியாக்கள் அவர்களாகவே கற்பனையாக எழுதிவிட்டார்கள்..” என்று நடந்ததைச் சொல்லியிருக்கிறார் சிங்காரவேலன். உடனேயே விஜய்யும் “ஓகே” என்று திருப்திபட்டு விட்டுவிட்டாராம்.

“இந்தப் பிரச்சினை முடியாவிட்டால் தியேட்டர்காரர்கள் எங்களுடைய அடுத்த படங்களைத் திரையிட மாட்டார்கள். எங்களது தொழில் பாதிக்கும். இதனால்தான் இப்படி போராடி வருகிறோம்..” என்றெல்லாம்  சிங்காரவேலன் சொல்ல.. “அதனாலென்ன நான் படம் தர்றேன்.. புலி படத்தை வாங்கி விநியோகம் செய்யுங்களேன்..” என்று சிங்காரவேலனிடம் சொல்லியிருக்கிறார். திருச்சி ஏரியாவுக்கான விற்பனையின்போது சிங்காரவேலனுக்கு முன்னுரிமை கொடுக்கும்படி தனது பி.ஆர்.ஓ.விடம் கூறினாராம் விஜய். அதேபோல் சிங்காரவேலனுடன் உடன் சென்றிருந்த நெல்லை-கன்னியாகுமரி ஏரியா விநியோகஸ்தரான ரூபனுக்கும் .ஓகே. சொல்லியிருக்கிறார் விஜய்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு ரஜினி ரசிகர்கள் மத்தியில் புரியாத புகைச்சல். .தலைவரை இவ்வளவு கேவலமா பேசினவரை விஜய் எப்படி சந்திக்கலாம்..? என்று இப்போது டிவிட்டரில் காரசாரமாக விவாதம் நடத்தி வருகிறார்கள்.

ஒருவேளை விஜய்தான் இந்தப் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி ரஜினியைவிட தான் பெரிய ஆள் என்று இவர்கள் மூலமாக காட்ட விரும்புகிறாரோ என்றெல்லாம் செய்திகள் இறக்கைக் கட்டி பரவ.. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க விரும்பி அங்கே, அன்றைக்கு நடந்தது என்ன என்பது பற்றி விநியோகஸ்தர் சிங்காரவேலனே இன்றைக்கு  தனி அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.

சிங்காரவேலன் தான் வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், “நான் விஜய் சாரை சந்தித்து உண்மைதான். காரணம், ‘லிங்கா’ பிரச்சனையில் எந்தொரு இடத்திலும் விஜய் சாரின் பெயரை நாங்கள் உபயோகிக்கவில்லை. ஆனால், ‘லிங்கா’ பிரச்சனையினுள் நடிகர் விஜய்யை இழுத்து விட்டு செய்திகளை சிலர் வெளியிட்டார்கள். இதனால் நடிகர் விஜய் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் என்னிடம் தெரிவித்தார்.

vijay-briyani-treat

எனவேதான் நான் நடிகர் விஜய்யை சந்தித்து பேசுவதாக அவரிடம் தெரிவித்தேன். அதன்படியே நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக அவர் இருந்த ‘புலி’ படப்பிடிப்புத் தளத்திற்கு நான் சென்றபோது அவர் தனது படக் குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது நடிகர் விஜய்யிடம் ‘நாங்கள் எந்தொரு இடத்திலும் உங்கள் பெயரை உபயோகப்படுத்தவில்லை. ஆனால், தவறான செய்திகள் வெளிவந்துவிட்டது’ என்று அவரிடம் கூறினேன். அவரும் ‘சரி… பரவாயில்லை..’ என்றார்.

விநியோகஸ்தர்களுக்கு மினிமம் கேரன்டி நடிகராக திகழ்பவர் விஜய் மட்டுமே. அவரை முதன்முதலாக சந்தித்ததால் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அந்த படத்தை என்னுடைய வாட்ஸ்-அப்பில் முகப்புப் படமாக வைத்ததுதான் நான் செய்த தவறு. அதை பார்த்துதான் பலரும் மீண்டும் தவறாக எழுதுகிறார்கள்..” என்று சொல்லியிருக்கிறார்.

அதெல்லாம் சரிதான்.. இப்போதும் உள்குத்தாக ஒரு வரியை எழுதியிருக்கிறீர்களே சிங்காரவேலன் ஸார்..?! ‘விநியோகஸ்தர்களுக்கு மினிமம் கியாரண்டி நடிகராக திகழ்பவர் விஜய் மட்டுமே’ என்று சொல்லியிருக்கிறீர்கள். இது எந்த அளவுக்கு உண்மை..?

அனைத்து பெரிய நடிகர்களின் படங்களையெல்லாம் தியேட்டர் அட்வான்ஸ் வாங்காமல், எம்.ஜி. முறைப்படி இல்லாமல்.. அவுட்ரேட்டாகவும் இல்லாமல்.. பெர்சண்டேஜ்படி மட்டுமே தியேட்டரில் ஓட்டிப் பாருங்கள்.. யார், யாரெல்லாம் மினிமம் கியாரண்டிக்கு தகுதியுள்ள நடிகர்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும்..!

Our Score