“திரெளபதி’ – பிற்போக்குத்தனமான திரைப்படம்..” – இயக்குநர் வ.கீரா கண்டனம்..!

“திரெளபதி’ – பிற்போக்குத்தனமான திரைப்படம்..” – இயக்குநர் வ.கீரா கண்டனம்..!

V5 மீடியா, மற்றும் வர்ணலயா ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பெவின்ஸ் பால், விஜயா ராமச்சந்திரன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘எட்டுத் திக்கும் பற’.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, முனீஸ்காந்த், நித்திஷ் வீரா, சாந்தினி, முத்துராமன், சாவந்திகா, சாஜு மோன், ‘சூப்பர் குட்’ சுப்ரமணி, சம்பத் ராம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – வ.கீரா, ஔிப்பதிவு – சிபின் சிவன், இசை – எம்.எஸ்.ஸ்ரீகாந்த், பாடல்கள் – கு.உமாதேவி, சாவீ, படத் தொகுப்பு – சாபு ஜோசப், கலை இயக்கம் – மகேஷ், நடன இயக்கம் – அபிநயஸ்ரீ, சண்டை இயக்கம் – சரவன், மக்கள் தொடர்பு – கோபிநாதன், மணவை புவன், தயாரிப்பு மேற்பார்வை – சிவசங்கர், இணை தயாரிப்பு – எஸ்.பி.முகிலன், தயாரிப்பு – பெவின்ஸ் பால், ராமச்சந்திரன்,  ரிஷி கணேஷ்.

para-movie-stills-8

இத்திரைப்படம் குறித்து இயக்குநர் கீரா பேசும்போது, “இது சாதி வெறிக்கு எதிரான படம். குறிப்பாக ஆணவக் கொலையின் கொடூரத்தை, ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கிறோம். இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வையும் இந்தப் படம் சொல்லியிருக்கிறது.

இப்போது இந்தப் படத்தின் தலைப்பை ‘பற’ என்பதில் இருந்து ‘எட்டுத் திக்கும் பற’ என்று மாற்றியுள்ளோம். இதற்குக் காரணம், ‘பற’ என்றால்கூட, அதைப் ‘பறத்தல்’ என்னும் வினைச் சொல்லாகப் பார்க்காமல், சாதியாகப் பார்ப்பவர்கள்தான் இங்கே அதிகமாக இருக்கிறார்கள் என்பது வருத்தமான உண்மை. அப்படி சிலர் எதிர்க்கவும் செய்தார்கள்.

ஆனால் படத்தில் நாங்கள் முன்னெடுத்திருக்கும் விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளவில்லை. அதே நேரம், தலைப்பு காரணமாக தயாரிப்பாளர்களுக்கும் சில பிரச்சினைகள் ஏற்படும் போல இருந்தது. படமும், அது சொல்லும் செய்தியும்தான் முக்கியம். அது மக்களுக்கும் சென்று சேர வேண்டும். அதற்கான யுக்தியாகத்தான் படத்தின் தலைப்பில் திருத்தம் செய்துள்ளோம்.

IMG_3155

இப்போதெல்லாம் நாடகக் காதல்  என்பதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் என சொல்லப்படுகிறது. அது உண்மையல்ல.. காதல் என்பது மனிதரின் இயற்கையான உணர்வுகளில் ஒன்று. இதில் எப்படி நாடகம் வரும்…? அப்படிச் சொல்வதே முட்டாள்த்தனம். அயோக்கியத்தனம். இது போன்ற கருத்து மனித சமுதாயத்தையே இழிவுபடுத்துகிறது.

இதே நேரம் பள்ளி மாணவிகளிடம் காதலிப்பதுபோல் நடித்து சிலர் ஏமாற்றுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பதின்ம பருவத்தில்.. அதாவது 13 வயது துவக்கத்திலேயே ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில், உள்ளத்தில் பருவ மாறுதல்கள் ஏற்படும். அது இயல்பு. அந்த நேரத்தில் பாலின ஈர்ப்பு ஏற்படுவது இயற்கையான உணர்வுதான். அது எப்படி நாடகமாகும்..?

‘அழகி’ என்ற படத்தில்  ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, 12-ம் வகுப்பில் படிக்கும்போது இருவரும் பார்க்கிறார்கள்.. அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.  அந்த உணர்வை ரசிகர்களுக்கும் கடத்தியதால்தான் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த உணர்வு பொய்யா..? இதற்காக சிறு வயது திருமணங்களை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அந்தப் பருவத்தில் ஏற்படும் உணர்வை கொச்சைப்படுத்தாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.

para-movie-stills-3

இப்போது ‘திரெளபதி’ என்னும் படத்தில் நாடகக் காதலில் ஈடுபடும் இளைஞர்களைக் கொல்ல வேண்டும் என்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம். இவைகளைப் போன்ற பிற்போக்குத்தனமான திரைப்படங்கள் சமுதாயத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தும். இது போன்ற கருத்துக்கள் நம் மனித சமுதாயத்தை கீழ் நோக்கி இழுத்துச் செல்கின்றன.

எங்களது இந்த ‘எட்டுத் திக்கும் பற’ படத்தில், ஒரு அரசியல்வாதியை எதிர்மறையாக சுட்டிக்காட்டும்விதமாக கதாபாத்திரம் உள்ளதாக ஒரு செய்தி வெளியில் பரவி வருகிறது.

இரு தனி நபர்களுக்குள்ளான  காதல் விசயத்தை, எப்படி தமிழ்நாடே அதிரும்படியான விசயமாக்குகிறார்கள்… அதன் மூலம் எப்படி அரசியல் லாபம் அடைகிறார்கள் என்பதை இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரம் மூலமாகச் சொல்லியிருக்கிறோம். அது குறிப்பிட்ட அரசியல் தலைவரை மட்டும் சொல்லவில்லை.. அப்படிப்பட்ட எல்லா அரசியல்வாதிகளையும் சேர்த்துதான் சொல்லியிருக்கிறோம்.

இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படம் பார்க்கும் அனைவரையும் அதிர வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கும் என்று நான் உறுதியாய் நம்புகிறேன்..” என்றார்.

‘எட்டுத் திக்கும் பற’ திரைப்படம் வரும் மார்ச் மாதம்  உலகம் முழுவதும் வெளியாகிறது.

Our Score