full screen background image

C2H திட்டத்தால் திரைப்படத் துறை காப்பாற்றப்படும் – ஒத்துழைக்க கோரி இயக்குநர் சேரன் வேண்டுகோள்..!

C2H திட்டத்தால் திரைப்படத் துறை காப்பாற்றப்படும் – ஒத்துழைக்க கோரி இயக்குநர் சேரன் வேண்டுகோள்..!

இன்றைக்கு ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்கிற படத்தினை திரையிட்டு தனது ‘திரையிடலுடன் டிவிடி விற்பனை’ என்கிற புதிய வர்த்தகத் திட்டத்துடன் களமிறங்க ஆயத்தமாக இருந்த C2H நிறுவனம் தனது வெளியீட்டை சற்று ஒத்திப் போட்டுள்ளதாக நேற்றைக்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அந்நிறுவனத்தின் நிறுவனரும், பிரபல இயக்குநருமான சேரன் அறிவித்தார்.

இன்றைக்கு இன்னமும் C2H திட்டம் பற்றி அறியாமல் அதனை ஏற்க மனமில்லாமல் தவிக்கும் திரையுலகத்தினருக்காக ஒரு நீண்ட, நெடிய உண்மைத் தன்மையுடன் கூடிய ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சேரன்.

அந்த அறிக்கை இதுதான் :

வணக்கம்…

திரையுலகில் இருக்கும் அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த C2H நிறுவனம். எக்காரணம் கொண்டும் இது திரையரங்குகளுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் எதிரானது என கருத வேண்டாம்.

கடந்த 10 வருடங்களாக திரைத்துறையின் வீழ்ச்சிகளும், அடைந்த நஷ்டங்களும் எத்தனை கோடிகள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதேபோல் திரைத்துறையை சார்ந்து இயங்கும் திரையரங்கங்களும் எத்தனையோ சதவிகிதம் குறைந்து ஆயிரக்கணக்கில் இருந்து இப்போது நூற்றுக்கணக்கில் மாறியுள்ளது. இது கடந்த பத்து வருடங்களில் காலம் நமக்கு தந்த தண்டனை…

இந்தச் சூழலில்… வருடா வருடம் திரைப்படங்களின் தயாரிப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு சாதாரண மனிதனுக்குள்ளும் இயக்குநர் கனவும், ஒவ்வொரு வசதி படைத்தவருக்குள்ளும் தயாரிப்பாளர் கனவும் நம்முடைய திரையுலகை நோக்கி படையெடுக்கச் சொல்கிறது.

திரையுலகிற்குள் வரும் அனைவரும் சரியான திட்டமிடல், சினிமாவை பற்றிய போதிய பார்வை இல்லாமல், முதலீடு செய்யும் பணத்தை இழந்து திரையுலகே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்படுவது போலத்தான் நமது திரையுலக உள்கட்டமைப்புகள் இயங்கி கொண்டிருக்கின்றன.

இவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்த்ததில் வருடா வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை, வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை, தோல்வியடைந்த முதலீடுகூட திரும்ப வராத படங்களின் எண்ணிக்கை, வாரா வாரம் 4 படங்கள் என்ற நெருக்கடியில் நல்ல திரைப்படங்களுக்குக்கூட கூட்டம் வராமல் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் போகும் நிலை.

இவை எல்லாவற்றையும் பயன்படுத்தி தயாரிப்பாளர்களின் முதலீட்டை, விநியோகஸ்தர்களின் பங்குத் தொகையை, திரையரங்கின் வருவாயை மொத்தமாக சூறையாடும் ஒரு கும்பலை.. திருட்டு DVD விற்பனையாளர்களை நாம் நம்மையறியாமலேயே, நம் ஒற்றுமையின்மையின் காரணமாகவே வளர்த்து விட்டோம்.

இன்று இந்த கும்பல் திரைப்படம் வெளியான முதல் நாளே நமது திரையரங்கம் முன்பாகவே அப்படத்தின் திருட்டு DVD-யை விற்கும் அளவுக்கு பிசாசு போல வாழ்ந்து தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும், திரையரங்க உரிமையாளர்களையும் சாகடிக்கிறது.

பல கனவுகளோடு முதல் படம் இயக்கும் இயக்குநர்களின் வாழ்க்கை அதோடு நாசமாகிப் போகிறது. இப்படியே பொறுத்துக் கொண்டு எத்தனை நாள்தான் வாழ்வது..? மாற்று வழி என்ற ஒன்றை நம் முன்னோர்கள் உருவாக்காமல் போனதின் விளைவுதான் இது. எல்லா இடங்களிலும் ஒவ்வொரு மாற்றமும் காலத்திற்கேற்றாற்போல ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

நம் திரைத்துறையில்…

பிலிம்                     –        டிஜிட்டல் ஆனது.

புரொஜெக்டர்                 –        QUBE ஆனது

பெரிய திரையரங்கம்      –        MALL ஆனது

இவைகள் வியாபாரத்தைப் பொருத்து, வருவாயைப் பொருத்து, பிரச்சனைகளைப் பொருத்து மாற்றியமைக்கப்பட்டது. அது போலவே இப்போது நாம் இந்த மாற்றத்திற்கும் தயார் ஆக நினைக்கிறோம். இந்த நிலைமையை நம் அனைவருக்கும் சாதகமாக மாற்றிக் கொள்வது என்கிற பொதுநோக்கில் யோசித்தால் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும்.

தயாரிப்பாளர்களுக்கு உள்ள பிரச்சனைகள்

1. படங்களின் உற்பத்தி அதிகம் என்பதால் வியாபாரம் செய்யும் முறையில் உள்ள தடுமாற்றம். முன்பு போல தயாரிக்கப்படும் திரைப்படங்களை சரியான விலைக்கு வாங்கவோ, MG, டெபாசிட் முறையில் வாங்கவோ போதிய டிஸ்ட்ரிபியூட்டர்கள் இல்லை.

2. பெரிய பட்ஜெட் படங்கள் தவிர சமீப காலமாக எந்த விநியோகஸ்தரும் சிறிய படங்களை அல்லது MEDIUM BUDGET படங்களை அவர்களின் பிரச்சனை கருதி வாங்க முன் வரவில்லை. எந்த முன் பணம் கொடுக்கவும் தயாராக இல்லை.

3. முன்புபோல திரையரங்கங்கள்கூட எந்த படங்களுக்கும் டெபாசிட் தொகையோ, MG தொகையோ கொடுக்க முடியாத நிலை.. அதற்கு முன் வரவும் இல்லை… மாறாக சில பெரிய படங்களுக்கு முன் பணம் கொடுத்து நஷ்டமடைந்திருக்கிறார்கள்.

4. 2 கோடி, 3 கோடி என்ற முதலீட்டு அளவிலான சிறிய படங்களும், 4 கோடி, 8 கோடி என்ற மீடியம் படங்களையும் எடுத்து அதை எந்த வியாபாரமும் செய்ய முடியாத நிலையில் எப்படி ஒரு திரைப்படத்தை வெளியிட முடியும் என்கிற அபாயம்.. அதனால் 450-க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகாமல் தேங்கிக் கிடக்கின்றன.

5. இதிலும் சில தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து விட்டோமே, என்ன செய்யப் போகிறோம் என தெரியாத நிலையில் மீண்டும் விளம்பரங்கள், திரையரங்கங்கள் என எல்லாவற்றிற்கும் முதலீடு செய்து திரைப்படத்தை வெளியிட்டு கையை கடித்துக் கொண்டு நிற்கிறார்கள். இவர்களின் அறியாமையால் அவர்களின் குடும்பமும்கூட நடுத்தெருவில் நிற்கிறது.

6. ஒரு திரைப்படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு படம் மிகப் பெரிய தோல்வி அடைந்ததும் பணத்தை திரும்பக் கேட்டு போராட வழி இருக்கிறது. அதைப் போல தயாரிப்பாளர்களுக்கு கதாநாயகர்களிடமோ, இயக்குநரிடமோ, தொழில் நுட்பக் கலைஞர்களிடமோ தான் முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்கும் நிலை இல்லாததால் நஷ்டம் நஷ்டமே…

7. அதையும் தாண்டி இவ்வாறான சிக்கல்களுக்கு இடையில் ஒரு திரைப்படத்தை வெளியிடும் போது பாதுகாப்பற்ற நிலை…

(i) படம் திரையிட்ட முதல் நாளே அதன் திருட்டு DVD வெளிவருகிறது.

(ii) முதல் நாள் முதல் காட்சியே கூட்டம் வராமல் போனால் படம் தூக்கப்படுகிறது.

(iii) சில நல்ல படங்கள் ஒடுவதற்கான வாய்ப்பு இருந்தும், மவுத் டாக் பரவும் முன்பே திரையரங்கின் வாடகை, வசூல் கட்டுபடியாகாது என்று நினைத்து அத்திரைப்படம் திரையரங்கை விட்டு தூக்கப்படுகிறது.

(iv) திரைப்படங்களின் தயாரிப்பு அதிகம் என்பதால் திரையரங்கம் எல்லா திரைப்படங்களுக்கும் வேண்டிய காட்சிகளை பிரித்து கொடுக்கும்போது, முக்கிய நகரங்களில்கூட எந்த அரங்கில் என்ன படம், எந்த காட்சி ஓடுகிறது என்பது மக்களுக்குத் திட்டவட்டமாக தெரிய வாய்ப்பில்லாமல் போகிறது. அதனால் மக்கள் திரையரங்கம் வரும்போது எந்தப் படம் ஓடுகிறதோ அதை பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதால் மக்கள் திரையரங்கத்தைத் தேடி வரும் வாய்ப்பு குறைகிறது.

(v) டிக்கெட் விலை அதிகம் என்பதைவிட எந்த படத்திற்கு எவ்வளவு விற்பார்கள் என்ற தெளிவான நிலை இல்லாததால் மக்கள் டிக்கெட் விலையையும், நேரத்தையும் கருத்தில் கொண்டு திரையரங்கம் வர யோசிக்கிறார்கள்.

(vi) திரைப்படங்களுக்கு முன்பெல்லாம் டிவி ரைட்ஸ் என்று ஏதோ ஒரு வகையில் பெரிய அளவுக்கு வருமானம் இருந்தது. இப்போது அவர்களும் பெரிய அளவில் திரைப்படங்களை வாங்குவதில்லை, பெரிய படங்களை தவிர…

சரி… திரையரங்கில் ஓடினால் வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்கள் மீண்டும் முதலீடு செய்து, மேலே சொன்ன பிரச்சனைகள் இருந்தபோதும் கஷ்டப்பட்டு ரிலீஸ் செய்து அங்கேயும் நஷ்டப்படும் போதும் மொத்தமும் இழப்பாகிறது. இப்போது டிவி உரிமைகளையும் யாரும் வாங்க முன் வருவதில்லை.

(vii) நல்ல படங்கள், தரமான படங்களை எல்லாம் ஒரு கட்டுக்குள் கொண்டு வர முடியாத மேற்சொன்ன சூழல்கள் உள்ளபோது தயாரிப்பாளர்கள் வேறு வழியை நாடுவதை யாரும் தடுக்க முடியாது. அந்த இடத்துக்கு தள்ளப்படும்போதே அதற்கான மாற்று வழியும் உண்டாகிறது.

8. அந்த மாற்று வழிகளை எப்படி எல்லாரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தயாரிப்பாளர்களை பயனடையச் செய்யலாம் என்று நினைத்து தீர்மானித்ததுதான் இந்த C2H திட்டம்.

9. திரையரங்கங்களில் படம் பார்ப்பவர்கள் திரையரங்கில் பார்க்கத்தான் செய்வார்கள். அதே நேரம் பெரிய திரைப்படமாக இருந்தாலும் படம் சரியில்லை என்றால் திரையரங்கிற்கு வரும் கூட்டம் நின்றுவிடுகிறது. ஆகவே பெரிய நடிகர், சிறிய நடிகர் என்றாலும், திருட்டு DVD வந்தாலும் திரையரங்க வசூலை யாரும் தடுத்து விடவோ, குறைத்து விடவோ முடியாது என்பதே சரியானது.

10. PK என்ற இந்திப் படம் சென்னையில் திரையிட்ட MALL-களில் நிறைய வசூல் செய்திருக்கிறது. திருட்டு DVD இருக்கும்போது இது எப்படி சாத்தியம் என யோசித்தால், நகரங்களில் மட்டுமே இது சாத்தியமாகிறது. எனவே திருட்டு DVD-யால் திரையரங்கங்களின் வசூல் குறையும் என்ற காரணம் முற்றிலும் தவறானது.

11. திருட்டு DVD மூலம் வரும் வருவாயை முறைப்படுத்தி C2H வருமானம் மூலம் கிடைக்க வழி செய்யலாம் என்ற நல்ல சிந்தனையை DVD-க்களால் திரையரங்கம் அழிந்துவிடும் என்ற தவறான எண்ணங்களால் தயாரிப்பாளர்களை மேலும் நஷ்டப்படுத்த வேண்டாம்.

12. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘கத்தி’, ‘கும்கி’, ‘பிசாசு’, ‘PK’ (HINDI), ‘அரண்மனை’, ‘வெள்ளக்காரதுரை’ போன்ற பெரிய, சிறிய படங்கள்கூட திருட்டு DVD வந்தும் மிகப் பிரமாதமாக வசூலில் சாதனை செய்தன. அப்படியிருப்பின் DVD-க்களால் திரையரங்கங்களுக்கு வருமானம் வராது என்று கூறுவது பொய்தானே..? திரைப்படங்கள் நன்றாக இருந்தால் திரையரங்கிற்கு மக்கள் வருவதை யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை.

13. சமீபத்தில் வெளியான மிகப் பெரிய திரைப்படங்கள் அதிக விலையாலும், படம் சரியில்லாமல் தோல்வியை தழுவியதும் எல்லோருக்கும் தெரியும். அதற்கு திருட்டு DVD-யை மட்டுமே காரணம் காட்டிவிட முடியாது என்பதையும் நாம் அறிவோம்.

14. எனவே விநியோகஸ்தர்களின் நிலைமையும் சரியாக இல்லாமல், படத்தினை வாங்குவதற்கு யோசிக்கும் நிலையில், திரையரங்கங்களும் டெபாசிட்டோ அல்லது MG-யோ தர முடியாத சூழலில் திரைப்படங்களை எல்லா நிலையிலும் வெளியிட முன் வருவதும், தயாரிப்பாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்ப பெற நினைப்பதும் நியாயம்தானே.

ஆகையால்தான், இந்த திரைத்துறையின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கும் திருட்டு DVD ஆதிக்கத்தின் ஒழிப்புக்காக கடந்த 10 வருடங்களில் எத்தனையோ முறை பேரணிகள், உண்ணாவிரதங்கள் இருந்து அரசாங்கத்திடமும், காவல் துறையிடமும் மனுக்கள் பல கொடுத்து வருகிறோம்.

எந்தவித மாற்றங்களும், எந்தவித முன்னேற்றங்களும் ஏற்படாத நிலையில் நானும் ஒரு இயக்குநராக, என்னை திரைத்துறையில் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிக்காக சினிமா எனக்கு கொடுத்த அடையாளத்தை (FACE VALUE) பயன்படுத்தி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் அலைந்து முறையான DVD-க்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக 156 விநியோகஸ்தர்களையும், 5000 டீலர்களையும் ஒருங்கிணைத்து CINEMA TO HOME என்ற இந்த நிறுவனத்தை துவங்கியுள்ளேன்.

அது இன்று எல்லோருக்கும் பரிட்சையப்பட்ட… புதிய திரைப்படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு நன்கு தெரிந்த… ஒரு நல்ல நிறுவனமாக உருவாகியிருக்கிறது.

இந்த C2H NETWORK-ஐ என்னை வளர்த்து உருவாக்கிய இந்த திரைத்துறைக்காக பயன்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

இன்றைய முடிவுகளே நாளைய திரைத்துறையின் மறுமலர்ச்சிக்கான துவக்கம் என்பதை மனதில் கொண்டு திரையுலகம் முடிவு செய்ய வேண்டும்.

நன்றியுடன்

சேரன்

 

Our Score