full screen background image

இந்தித் திணிப்பு – காவி மயம் – எதேச்சதிகார போக்கு : சிறு தயாரிப்பாளர்களை துன்புறுத்தும் ‘சென்சார் போர்டு’..!

இந்தித் திணிப்பு – காவி மயம் – எதேச்சதிகார போக்கு : சிறு தயாரிப்பாளர்களை துன்புறுத்தும் ‘சென்சார் போர்டு’..!

‘விடிவெள்ளி வென்ச்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் ‘துப்பார்க்கு துப்பாய’ என்ற திரைப்படத்தை தயாரிப்பாளர் ஜானகி தருமராசன் தயாரித்துள்ளார்.

மலேசியாவின் பிரபல நடிகரான விகடகவி மகேந்திரன், ‘ஜோடி நம்பர் ஒன்’ ஆனந்தி, ரியா போன்றோர் இதில் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படத்துக்கு கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ ராஜராஜன்.

song-3-8

இந்த திரைப்படம் அண்மையில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. தணிக்கைத் துறையினர், ‘இத்திரைப்படம் அனைவரும் பார்க்க ஏற்றது’ என்பதை குறிக்கும்வகையில் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

இந்த நேரத்தில் இந்த திரைப்படத்தின் இயக்குநரான ராஜ ராஜராஜன் தணிக்கைத் துறையினர் மீது பரபரப்பு புகார்களைகூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை இது :

எங்களது ‘துப்பார்க்கு துப்பாய’ திரைப்படத்தை சில தினங்களுக்கு முன், தணிக்கைக் குழுவினருக்காக முன்னோட்ட அரங்கு ஒன்றில் திரையிட்டுக் காட்டினோம். தணிக்கை வாரியத்தின் மண்டல துணை அலுவலர் தலைமையில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 உறுப்பினர்கள் படத்தைப் பார்த்தனர்.

பின்னர், ‘U’ சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால், மூன்று இடங்களில் ஒலி நிறுத்தம் அதாவது ‘மியூட்’ செய்ய வேண்டுமென்று நிபந்தனை விதித்தனர்.

அதில் முதல் இடம், ‘காண்டு’ என்ற சொல். படத்தின் ஒரு காட்சியில், கதாநாயகன் தனது நண்பரிடம் தன்னை கோபப்படுத்த வேண்டாம் என்பதை குறிக்கும் வகையில், வழக்கத்தில் உள்ள சொல்லான ‘காண்டாக்காதே’ என்பார்.

அந்த ‘காண்டு’ என்ற சொல்லின் ஒலியை நீக்க வேண்டும் என்றனர். ‘ஏன்..?’ என்று கேட்டதற்கு, ‘காண்டு’என்ற சொல் ‘இந்தி’ மொழியில் ‘பிட்டம்’ என்று குறிக்குமென விளக்கம் சொன்ன தணிக்கை அதிகாரிகள், இந்திக்காரர்கள் பார்த்தால் தவறாகி விடும் என்பதால் அந்தச் சொல்லை நீக்க வேண்டும் என்றனர்.

‘காண்டு’ என்பது தமிழில் கோபம், துன்பம் போன்ற பொருளைத்தான் தரும் என்று விளக்கிய நாங்கள், ‘காண்டா மணி’, ‘காண்டா மிருகம்’ போன்ற சொற்கள் தமிழில் வழக்கத்தில் இருப்பதைச் சுட்டிக் காட்டினோம். அது மட்டுமின்றி, அருணாச்சல பிரதேசத்தின் தற்போதைய முதலமைச்சரின் பெயர் ‘பெமா காண்டு’ என்பதையும், அவரது தந்தையார் ‘டார்ஜி காண்டு’வும் முதலமைச்சராக இருந்தவரே என்பதையும் குறிப்பிட்டோம்.

பூ என்பதை வட மொழியில் ‘ஃபூல்’ என்று சொல்வார்கள். அச்சொல் தமிழ்நாட்டில் கொச்சை வழக்கில் பிழையான பொருள் தரும். இந்தி படங்கள் தமிழ்நாட்டில் வெளியிடப்படுகின்றன என்பதால், இந்தி படங்கள் அனைத்திலும் அந்தச் சொல்லை தணிக்கை செய்ய வேண்டும் என்று கூறுதல் முறையா என்றும் வினவினோம். எங்கள் வாதத்தை எள்ளளவும் செவிமடுக்காமல், ‘அந்தச் சொல்லை நீக்கிவிட்டு போங்களேன்’ என்று பிடிவாதமான நிலைப்பாட்டை எடுத்தனர் தணிக்கைக் குழுவினர்.

அடுத்தது, ‘செருப்பால’ என்ற சொல். படத்தின் ஒரு காட்சியில் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முனையும் ஒருவனை எச்சரிக்கும் வகையில், நாயகி ‘செருப்பால அடிப்பேன்’ என்பார். இதில் வரும் ‘செருப்பால’ என்ற சொல்லை நீக்க வேண்டும் என்றனர்.

திரைத்துறையில் இதற்கு முன்வந்த எத்தனையோ படங்களில் ‘செருப்பால அடிப்பேன்’ என்ற சொல் வந்திருப்பதை சுட்டிக் காட்டினோம். அதை ஏற்க மறுத்த தணிக்கைத் துறையினர், தங்களுக்கு வந்திருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒரு பெண் ஒரு ஆணை பொது இடத்தில் தரக்குறைவாக பேசக் கூடாது என்றனர்.

இது ஆணாதிக்கம் என்பதையும் தமக்கு எதிரான தவறுகளை தட்டிக் கேட்கும் உரிமை பெண்ணுக்கு உண்டு என்பதையும் சுட்டிக் காட்டினோம். எமது வாதம் அவர்கள் செவியை எட்டவில்லை. அவர்களுக்கு வந்திருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பதையாவது விளக்கமாகச் சொல்லச் சொன்னால், அதற்கும் பதிலில்லை. காரணம், அப்படி புதிய வழிகாட்டுதல் எதுவுமே இல்லை.

மூன்றாவது, படத்தில் சாமியார் ஒருவரின் சீடர் வருவார். அதிகாலை வேளையில், காலைக் கடன் முடிப்பதற்காகச் செல்லும் அவரை, கதாநாயகன் வழி மறித்துப் பேசுவான். அப்போது அந்த சீடர் ‘காற்றை’ வெளிப்படுத்துவார். நகைச்சுவைக்காக அந்த காட்சி வைக்கப்பட்டிருந்தது. இதை ஆட்சேபித்த தணிக்கைக் குழுவினர், ‘காவி உடை அணிந்த ஒருவர் எப்படி காற்று வெளியேற்றலாம்..?’ என்றனர். ‘அந்தக் காற்று வெளியேற்றும் சப்தத்தை நீக்க வேண்டும்’ என்றனர்.

இதற்கு முன் பல படங்களில் காற்று வெளியேற்றும் காட்சிகள் இருப்பதை சுட்டிக் காட்டினோம். காற்று வெளியாவது இயற்கையானதே என்றும் சொன்னோம். ஆனால், காவி உடை அணிந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக அந்த ஒலி வரக்கூடாது என்றார்கள்.

‘ஏழையின் சொல் அம்பலமேறாது’ என்பர். எங்கள் வாதம் ஏற்கப்படாமல், மூன்று காட்சிகளிலும் ஒலியை நீக்கி விட்டுத்தான் தணிக்கைச் சான்றிதழை பெற்றுக் கொண்டோம். தணிக்கைத் துறையினரின் செயல்பாடுகள் அர்த்தமற்ற வகையிலும், அத்துமீறும் வகையிலும் இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இவற்றை தெரிவிக்கிறோம்.

எத்தனையோ பிரச்சினைகளை மீறி திரைப்படங்கள் எடுக்கிறோம். அவற்றை வெளியிடுவதற்குள் சொல்லொணா சிக்கல்களை எதிர்கொள்கிறோம். இவை அனைத்தையும் பொறுப்பதற்குக் காரணம், இது ஒரு வர்த்தகம் என்பது மட்டுமல்ல. திரைத்துறையின் மீதுள்ள எங்கள் காதலும்தான்.

பெரிய முதலீட்டு படங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று எதையுமே யோசிக்காமல் ‘U’ சான்றிதழ் தரும் தணிக்கைத் துறையினர், சிறு முதலீட்டுப் படங்களின்பால் குரூர முகத்தைக் காட்டுவது என்ன நியாயம்..?

எந்தக் கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கிறதோ, அவர்களின் கட்சிக்காரர்கள்தான் தணிக்கை வாரியத்தில் இடம் பெறுகிறார்கள். தங்களின் இந்தித் திணிப்பு, காவி மயமாக்கல் போன்ற கொள்கைகளை, சிறு முதலீட்டு படங்களின் மீது காட்டுவது எதேச்சதிகார போக்கின்றி வேறென்ன..?

தணிக்கைத் துறையினர் சொன்ன அர்த்தமற்ற திருத்தங்களை மீண்டும் செய்வதற்கு, ஒலிக் கூடம் போன்றவற்றுக்கு தேவையின்றி கூடுதல் செலவுகள் செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. உங்களின் பெரிய அண்ணன் மனோபாவத்தைக் காட்ட நாங்கள் எதற்காக இழப்பை சந்திக்க வேண்டும்..?

தணிக்கை குழுவில் இருப்பவர்கள், இந்திக்கு கொடி பிடிப்பது எப்படி சரியாகும்..? இன்றைக்கு ஏதோ ஒரு சொல்லை இந்தி என்பார்கள். நாளை ஒவ்வொன்றிலும் இந்தியை புகுத்த முயலுவார்கள். தற்போது நடைமுறையில் உள்ள இந்திக்கு வயது, வெறும் 300 ஆண்டுகளே. இந்தியின் ஒட்டு மொத்த வரலாறே ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு மேல் கிடையாது.

அப்படி இருக்கும் ஒரு மொழிக்காக, உலகின் முதல் இனம் வாழும் பகுதியில் கச்சை கட்டிக் கொண்டு கொடி பிடிப்பது அறிவுடையார் செயலா..? யாரை திருப்திப்படுத்த இத்தகைய சிறுமைச் செயல்கள்..?

காவி அணிந்தவர் காற்று வெளியேற்றினால் இந்துக்கள் அனைவரும் அருவருத்து, மதம் மாறி விடுவார்களா..? பெரிய முதலீட்டுப் படங்கள் என்பதால், ஒரு ஆடவன் பெண்ணை துரத்தி, விரட்டிச் செல்வதை மகிழ்வோடு அனுமதிக்கும் தணிக்கைக் குழுவினர், சிறு முதலீட்டுப் படங்களில், தனக்கு எதிராக அத்துமீறும் ஒருவனை பெண் ஒருத்தி எச்சரித்தலை, அநாகரீகம் என்பார்களா?

எங்கள் திரைப்படத்தில் புகை மற்றும் மது அருந்தும் காட்சிகளை அறவே கிடையாது. ஒருபெண்ணை விரட்டிச் சென்று துன்புறுத்தும் காட்சிகளை ஊக்குவிக்கவில்லை. மாறாக, பெண்களுக்கு ஆதரவான நற்கருத்துகளை இடம் பெறச் செய்திருக்கிறோம். இது பொறுக்கவில்லையா தணிக்கைத் துறைக்கு..?

உள்ளடக்கத்தைப் பார்க்காமல், படத்தின் முதலீட்டு அளவை பார்ப்பது தணிக்கைத் துறைக்கு அழகா..? அல்லது, தேவையா..? முதலீட்டின் அடிப்படையில் அளவுகோல் பயன்படுத்த தணிக்கை வாரியமென்ன வர்த்தக அமைப்பா? அல்லது, அரசு நிறுவனமா..?

சிறு முதலீட்டு படம் என்பதால், தணிக்கை செய்வதற்கு எங்களிடம் மட்டும் குறைந்த கட்டணமா வசூலிக்கிறீர்கள்..? பிறகு ஏன் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை..?

எமக்கு மட்டும் அல்ல. சிறு முதலீட்டு திரைப்படங்கள் பலவற்றுக்கும் இப்படி நிறைய சிக்கல்கள் தரப்படுகின்றன என்பதை கேள்விப்படுகிறோம்.

தணிக்கை வாரியத்தின் போக்கு இதே ரீதியில் தொடருமானால், ‘ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்’ என்று கருதப்படும் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களை ஒன்று திரட்டி  நீதித் துறையை நாடுவதுடன், அறவழியில் எமது எதிர்ப்பை பல்வேறு மட்டங்களில் வெளிப்படுத்தும் நிலைக்கும் தள்ளப்படுவோம் என்பதை மட்டும் இப்போதைக்கு தெரிவித்துக்  கொள்ளுகிறேன்…”

இவ்வாறு அந்த அறிக்கையில் ‘துப்பார்க்கு துப்பாய’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

 

Our Score