full screen background image

“இளையராஜாவின் இசையைத்தான் காப்பியடிக்கிறேன்..” – இசையமைப்பாளர் பிரேம்ஜியின் ஓப்பன் டாக்..!

“இளையராஜாவின் இசையைத்தான் காப்பியடிக்கிறேன்..” – இசையமைப்பாளர் பிரேம்ஜியின் ஓப்பன் டாக்..!

டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ் பட நிறுவனம் தயாரித்த ‘என்னமோ நடக்குது’ படத்தின் வெற்றியை தொடர்ந்து.  ‘அச்சமின்றி’ என்ற படத்தை தயாரிப்பாளர் வி.வினோத்குமார் தயாரித்து வருகிறார்.

விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே, சமுத்திரக்கனி, ராதாரவி நடிப்பில் இயக்குநர் ராஜபாண்டி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அச்சமின்றி’ படத்தின்  இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

dsc_4493

விழாவில் விஜய் வசந்தின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் பிரிவின் தலைவருமான H.வசந்தகுமார், தயாரிப்பாளர் வினோத்குமார், நடிகர் விஜய்வசந்த், நடிகர்கள் பிரேம்ஜி, பிரேம், கவிஞர் யுகபாரதி, இயக்குநர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வெங்கட்பிரபு, நடிகர் பொன்வண்ணன், கிருஷ்ணா, மிர்ச்சி சிவா, வைபவ், தயாரிப்பாளர் கே.சுவாமிநாதன், தனஞ்செயன், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ். நடிகர் சௌந்தர், நடிகர் கும்கி அஸ்வின், சித்தார்த் விபின், இயக்குநர் மஞ்சப்பை ராகவன், நடிகர் நிதின் சத்யா, வசனகர்த்தா ராதாகிருஷ்ணா, நடிகை ரோகினி, உடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், நடிகர் அரவிந்த் ஆகாஷ், எடிட்டர் பிரவீன் கே.எல், அஜய் மாஸ்டர், கலை இயக்குனர் சரவணன், ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், விஜி சதீஷ், இயக்குநர் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். 

விழாவில் நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசும்போது, “இயக்குநர் ராஜபாண்டி தனது முதல் படமான ‘என்னமோ நடக்குது’ படத்திலும் என்னை நடிக்க வைத்தார். இந்த படத்தில் வழக்கமான எனது நடிப்பை மாற்றி இதுவரை நான் ஏற்று நடிக்காத கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

img_0322

இப்படிப்பட்ட வேடத்தில் நடிக்கிற பாக்கியம் எல்லா நடிகைகளுக்கும் கிடைக்காது. எனக்கு கிடைத்தது. இந்த படத்தில் எப்படிப்பட்ட வேடத்தில் நடித்திருக்கிறேன் என்பதை வெளியே சொல்லக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.  ஆனால் படம் வெளி வந்ததும் நான் மாறுபட்டு சிறப்பாக நடித்திருக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரிய வரும்.

ராஜபாண்டி திறமையான இயக்குநர். இன்னும் பெரிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக அவர் உயர வேண்டும். அவருக்கு இருக்கும் ஆற்றலுக்கு நிச்சயம் அது நடக்கும்..” என்றார்.

விழாவில் நடிகர் பொன்வண்ணன் பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநர் ராஜபாண்டியை எனக்கு கடந்த பத்தாண்டுகளாக தெரியும். நல்ல மனிதர். சிறந்த இயக்குநரும்கூட.

img_0344

ஒரு படத்தில் நடிக்க வரும் நடிகர்கள், நடிகையர்களை தங்களது இயல்பு நிலைகளில் இருந்து மாற்றி கதைக்கேற்ற கதாப்பாத்திரங்களாக கதைக்குள் கொண்டுபோய் நடிக்க வைப்பது எல்லா இயக்குநனர்களாலும் முடியாது. அந்த ஆற்றல் இயக்குனர் ராஜ்பாண்டியிடம் இருக்கிறது. இவர் நிச்சயம் பெரிய இயக்குநராக வருவார்..” என்றார்.

விழாவில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “இயக்குநர் ராஜபாண்டி என்னை போலவே பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்தவர். எனக்கு ஜூனியர். இவர் ஏற்கனவே எடுத்த படமும், இந்த படமும் இவரை பெரிய இயக்குனராக காட்டுகிறது.

dsc_4508

இன்றைய சூழ்நிலையில் சினிமாவிற்கு வசந்த்குமார் அண்ணாச்சி போன்ற தயாரிப்பாளர்கள் தேவை. அவர்களைப் போன்ற தயாரிப்பாளர்களால்தான் ஒரு படத்தை சிறப்பாக எடுத்து முடித்து உலகம் முழுவதும் கொண்டுபோய் சேர்க்க முடியும். இன்று படம் எடுப்பது சுலபமாக இருக்கிறது. அதை திரையரங்குக்கு கொண்டு போய் சேர்ப்பது தான் போராட்டமாக இருக்கிறது. அதை இவரை போன்ற தயாரிப்பாளர்களால்தான் செய்ய முடியும்.  

இன்றைய சூழ்நிலையில் நேர்மையாக முன்னேற்றம் அடைந்தவர்களால்தான் தங்களது சொத்து விபரத்தை அறிவிக்க முடியும். அதை அண்ணாச்சி அறிவித்திருக்கிறார்.  இவரது மகன்களான விஜய் வசந்தை ஹீரோவாகவும் வினோத்குமாரை தயாரிப்பாளராகவும் உயர்த்தியிருக்கிறார்.

இந்த படம் வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் உயர்ந்த நிலை உருவாக வேண்டும். இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார்.  பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. இவர் நடிகராகவும் இருக்கிறார். இரண்டிலும் மேலும், மேலும் உயர்ந்து நல்ல பெரும் புகழும் பெற வேண்டும்.

இந்த படத்தின் இன்விடேஷன் பாரதியாரின் மீசையை போன்ற வடிவத்தில் இருந்தது, ‘அச்சமின்றி’ என்ற எழுத்தும் பாரதியாரின் கையெழுத்தை பிரதிபலிக்கின்ற வகையில் அமைத்திருக்கிறார்கள். இதிலிருந்து டைரக்டர் எதாவது வித்தியாசம் செய்ய வேண்டும் என்பதை விரும்புகிறார் என்பது தெரிகிறது…” என்றார்.

விழாவில் படத்தின் இசையமைப்பாளர் பிரேம்ஜி பேசும்போது, “விஜய் வசந்த் ஹீரோவாகவும், வினோத்குமார் தயாரிப்பாளராகவும் ஒரு படம் எடுக்க போகிறோம் என்று சொல்லும்போதே நான்தான்  அந்த படத்திற்கு இசையமைப்பேன் என்று சொல்லிவிட்டேன். அவர்களும் ஒத்துக் கொண்டார்கள். அவர்கள் எடுத்த இரண்டு படத்திற்கும் நான்தான் இசையமைத்தேன். இனி அவர்கள் எடுக்க போகும் படங்களுக்கும் நான்தான் இசையமைப்பேன். இது எங்களுக்குள் வாய் வார்த்தையில் போட்டுக் கொண்ட ஒப்பந்தம்.

img_0349

என்னுடைய இசையில் வெளிவந்த பாடல்களை நான் காப்பியடித்து போட்டிருக்கிறேன்  என்று பலர் பேசிக் கொன்டிருக்கிறார்கள். ஆமாம் நான் காப்பியடித்துதான் போட்டு வருகிறேன். எனது பெரியப்பாவான இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களைத்தான் மாற்றி, மாற்றி போட்டுக் கொண்டிருக்கிறேன். வேறு யாரோ ஒருவருடைய இசையில் வெளிவந்த பாடல்களையும் நான் திருடவில்லை. எங்கள் குடும்ப சொத்தான இளையராஜாவின் இசையிலிருந்துதான் திருடிப் போடுகிறேன். எல்லோருமே அவருடைய இசையிலிருந்துதான் மாற்றி பாடல்களை போடுகிறார்கள்.. நான் எடுத்து போடக் கூடாதா…?

என்னிடம் இயக்குநர்கள் இளையராஜாவின் இசை போன்ற இனிமையான ட்யூன் போட்டு தர வேண்டும் என்கிறார்கள். நான் அவரைப் போன்று டியூன் போட முடியாது. அவரைப் போன்று டிரெஸ் மட்டும்தான் போட்டுக் காட்ட முடியும்.

சொன்னபடி ஒரு நாள் வெள்ளை ஜிப்பா, வேஷ்டி போட்டுக் கொண்டு ருத்ராட்ச மாலைகளையும் மாற்றிக்கொண்டு ஆர்மோனியப் பெட்டியுடன் போஸ் கொடுத்தேன். அதை போஸ்டர் அடித்து எல்லா இடங்களிலும் ஒட்டினார்கள்.  பெரியப்பா வீட்டு வாசலிலும் ஒட்டிவிட்டார்கள்.

பெரியப்பா கூப்பிட்டு பேசினார்.. ‘என்னடா என்னை போல் டிரெஸ் போட்டு கிண்டல் பன்றியா..?’ என்று கேட்டார். அதற்கு நான் ‘இல்லை பெரியப்பா… உங்களைப் போல இசையமைக்க சொன்னார்கள். அது என்னால் முடியாது, வேண்டுமானால் அவரைப் போல டிரெஸ் போட்டு போஸ் கொடுக்கிறேன் என்று சொன்னேன். அதைதான் போஸ்டர் போட்டு ஒட்டிவிட்டார்கள்..’ என்று சொன்னேன் என்றார் பிரேம்ஜி.

img_0331

விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசும்போது, “பிரேம்ஜி உண்மையாகவே திறமைசாலி. அவனுக்குள் இசையாற்றல் இருக்கிறது. இசை எங்க குடும்பத்தின் ரத்தத்தில் இருக்கிறது. அதுதான் அவனுக்குள் இருந்து வெளிவருகிறது. பிரேம்ஜி நான் இசையமைத்த பாடல்களுக்கு என்னுடன் பணியாற்றி இருக்கிறான். அவன் இசையமைக்கிறான், நடிக்கிறான் இதில் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்து என்றேன். அதற்கு அவன் என்னை அதிகமாக நடிக்க தான் கூப்பிடுகிறார்கள் என்றான். எது உனக்கு வருகிறதோ, விருப்பமாக இருக்கிறதோ அதில் அதிகமாக கவனம் செலுத்து. அப்பொழுதுதான் நீ வெற்றி பெற முடியும் என்று சொன்னேன்…” என்றார்.

பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, “இந்த படத்தில் எல்லா பாடல்களையும் நான்தான் எழுதியிருக்கிறேன். இயக்குநர் ராஜபாண்டி சமூக அக்கறை கொண்டவர். அவரது படங்கள் நல்ல கருத்துக்களை சொல்லக் கூடியதாக இருக்கிறது. நிச்சயம் அவர் ஒரு பெரிய இயக்குநராக வருவார். இந்த படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் சம்பளத்தை அளந்துதான் தருகிறார். விஜய் வசந்த் இயல்பான நடிப்பாற்றல் கொண்டவர். நிச்சயம் அவருக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது…” என்றார்.

img_0347

தயாரிப்பாளர் வினோத்குமார் பேசும்போது, “இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு நல்ல முறையில் ஒத்துழைத்தார்கள்.  படம் சிறப்பாக வந்திருக்கிறது. பாடல்களை சூப்பர் ஹிட்டாகும் வகையில் பிரேம்ஜி இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். இயக்குநர் ராஜபாண்டி சோஷியல் மேசேஜ் உள்ள ஒரு கதையை சொன்னார். எனக்கு பிடித்திருந்தது. அதைத்தான் ‘அச்சமின்றி’ படமாக எடுத்திருக்கிறோம். எங்களுடைய எல்லா படங்களையும் அண்ணன் வெங்கட் பிரபுதான் துவைக்கி வைத்திருக்கிறார். அனைத்திலும் கலந்து கொண்டிருகிறார்…” என்றார் தயாரிப்பாளர் வினோத்குமார்.

படத்தின் நாயகன் விஜய் வசந்த் பேசும்போது, “இயக்குநர் ராஜபாண்டி படத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார். அவர் திறமையான இயக்குனர். என்னை வைத்து படம் எடுக்க பணம் கொடுத்த அப்பாவிற்கும்,  தயாரித்த தம்பிக்கும் நன்றி. இந்த படம் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுக்கும். வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி..” என்றார்.

img_0337

விழாவில் நடிகை ரோகிணி பேசும்போது, “இப்பொழுது நான் அதிகமாக தெலுங்கு படங்களில்தான் நடித்து வருகிறேன். நல்ல கதையுள்ள படம் கிடைத்தால் தமிழில் நடிப்பது என்ற முடிவில் இருந்தேன். இப்பொழுதான் இந்தப் படத்தில் அது கிடைத்திருக்கிறது.

ராஜபாண்டி திறமையான இயக்குநர். என்னுடன் சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன் சிறந்த கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நிச்சயம் இந்த படம் மிகப் பெரிய வெற்றியடையும்..” என்று வாழ்த்தினார்.

img_0351

விழாவில் இயக்குனர் வெங்கட் பிரபு பேசும்போது, “சென்னை 28 படத்திலிருந்து நாங்களும், விஜய் வசந்த், வினோத்குமாரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை போன்று நண்பர்களாக இருக்கிறோம். அதனால்தான் சென்னை 28 படக் குழுவினர் அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டிருகிறோம். பிரேம்ஜி, இந்தப் படத்தை எடுக்கலாம் என்று தயாரிப்பாளர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே ‘நான்தான் இசையமைப்பாளர்’ என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டான்.

‘பிரேம்ஜி வெளியார் படங்களுக்கெல்லாம் இசையமைக்கிறான். உங்கள் படத்திற்கு மட்டும் இசையமைக்கவில்லையே..?’ என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். நான் அவனிடம் ‘நீ என் படத்தில் நடிப்பதாக இருந்தால், இசையமைக்க முடியாது.. இசையமைப்பதாக இருந்தால் நடிக்க முடியாது. உனக்கு எது வேணும்ன்னு…’ கேட்டேன். அவனும், ‘உன் படத்தில் நடிகனாகவே இருந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டான். இந்தப் படம் சிறப்பாக வந்திருக்கிறது. நிச்சயம் வெற்றி பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்…” என்று கூறி வாழ்த்தினார்.

Our Score