பழைய வண்ணாரப் பேட்டையில் நடந்த உண்மைக் கதைதான் படமே..!

பழைய வண்ணாரப் பேட்டையில் நடந்த உண்மைக் கதைதான் படமே..!

கிருஷ்ணா டாக்கீஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்க, அனாமிகா பிக்சர்ஸ் வி.எஸ்.இளையா வெளியிடும் திரைப்படம் ‘பழைய வண்ணாரப் பேட்டை.’

இந்த படத்தில் பிரஜன் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக அஷ்மிதா நடித்துள்ளார். மற்றும் ரிச்சர்ட், நிஷாந்த், கருணாஸ், பாடகர் வேல்முருகன், காஜல், கானாபாலா, சேசு, மணிமாறன், ஆதித்யா, பரணி, கூல் சுரேஷ், ஜெயசூர்யா, ஜெயராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு  – பாருக், இசை – ஜூபின், எடிட்டிங் – எஸ்.தேவராஜ், கலை – பி.எ.ஆனந்த்,  சண்டை பயிற்சி – மிரட்டல் செல்வா, நடனம் – ஜானி, தயாரிப்பு – எம்.பிரகாஷ், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – மோகன்.ஜி.

படம் பற்றி இயக்குநர் மோகன்.ஜி பேசும்போது, “இதுவொரு அரசியல், கிரைம், திரில்லர் கலந்த படம். சென்னையில், பழைய வண்ணாரப் பேட்டை பகுதியில் வசிக்கும் ஹீரோ பிரஜனின் நண்பன் எதிர்பாராதவிதமாக ஒரு கொலை சம்பவத்தில் குற்றவாளியாகிறான்.

அந்த கொலைக்கு பின்னால் அரசியல் சதி இருப்பதை கண்டு பிடிக்கிறார் பிரஜன். இந்த வழக்கில் இருந்து தனது நண்பனை அவர் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே பழைய வண்ணாரப் பேட்டையில்தான். அங்கே நான் பார்த்து விஷயங்களில் உருவானதுதான் இந்த படம். எங்க ஏரியாவில் எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ, அதையே இப்போது படமாக்கியிருக்கிறேன். உலகம் முழுவதும் எங்க ஏரியா பிரபலமாக வேண்டும் என்று நினைத்துதான் இந்த படத்தின் தலைப்பை ‘பழைய வண்ணாரப் பேட்டை’ என்றே வைத்துள்ளேன்…” என்றார்.

“இந்தப் படத்தில் நட்புக்கு ஒரு மரியாதையும், சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தும் இருந்தது. அதனால்தான் இந்த படத்தை நான் வெளியிடுகிறேன்…” என்றார் அனாமிகா பிக்சர்ஸ் இளையா.வி.எஸ்.

இந்த படத்தில் ஜுபின் இசையில் வேல்முருகன் பாடிய ‘உன்னத்தான் நெனக்கையில ராத்திரி தூக்கமில்ல’ என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளது குறிப்படத்தக்கது.

Our Score