‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’ என புதுமுகங்களோடு தனது பயணத்தை தொடங்கியவர் பிரபு சாலமன். இப்போது தனுஷை வைத்து பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் இருந்த அவரை சந்தித்தோம்…
தொடர்ச்சியாக புதுமுகங்களை வைத்து படம் எடுத்த நீங்கள், இப்போது தனுஷ் என்கிற மாஸ் நடிகரிடம் சென்றது ஏன்..?
சில கதைகளின் களம் புதுமுகங்களுக்கு ஏற்றதாக இருக்கும். சில கதைகளில் அனுபவம் மிக்கவர்கள் தேவைப்படும். இப்போது நான் இயக்கும் படத்திற்கு கதாப்பாத்திரத்தை தாங்கி, பிரதிபலிக்க ஒரு அனுபவசாலி தேவைப்பட்டார். அதற்காகத்தான் தனுஷ்.
பிரபலங்களுடன் பணியாற்றும்போது சில காம்ப்ரமைஸ் செய்ய வேண்டி இருக்குமே..?
உண்மைதான். ஆனால் என் பாணி வேறு. சின்ன, சின்ன காம்ப்ரமைஸ்கள் மென்மையான அணுகுமுறையை உருவாக்கும். இந்தப் படத்தில் அதற்குக்கூட எனக்கு சந்தர்ப்பம் அமையவில்லை.
தனுஷை இந்தப் படத்திற்காக கடந்த 2014-ம் வருட டிசம்பர் 28-ம் தேதி. கிருஸ்துமஸை கொண்டாடிவிட்டு சந்தித்தேன்.. ‘ஒரு படம் செய்யலாமா?’ என்றேன் உடனேயே தயங்காமல், ‘எப்பன்னு சொல்லுங்க.. வர்றேன்..’ என்றார். கதைகூட கேட்காமல் 2015 ஜூன் 1-ம் தேதி முதல் 60 நாட்கள் ஒரே ஷெட்யூலில் தேதிகளை கொடுத்தார்.
ஷூட்டிங் ஆரம்பித்து பத்து நாட்கள்வரை படத்தின் கதை என்ன என்பதே அவருக்கு தெரியாது. அவரது காதாபாத்திரத்தை பற்றி மட்டுமே சொல்லி இருந்தேன். அதற்கு பிறகுதான் முழு கதையையும் சொன்னேன். அதை உள்வாங்கிக் கொண்டார். ஒரு புதுமுகம் மாதிரி அருமையாக நடித்துக் கொடுத்தார். என்ன எடுக்கிறோம் என்று மானிட்டர்கூட பார்க்க மாட்டார். 70, 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயில் மீது உயிரை பணயம் வைத்து ஓடுவது, ஸ்டண்ட் செய்வது என்று தூள் கிளப்பி இருக்கிறார்.
தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிப்பது பற்றி..?
அவர் இப்போது சக்சஸ் பயணத்தில் இருக்கிறார். நடிகராக மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றிருக்கிறார். ஹாலிவுட்டில் போய் நடித்து அங்கும் அவர் வெற்றி பெற வேண்டும். கமர்ஷியலாகவும் யோசிக்கிறார், ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ மாதிரி சமுதாயத்திற்காகவும் யோசிக்கிறார். பாராட்டப்பட வேண்டியவர் தனுஷ்.
அடுத்தும் பிரபல நடிகர்கள்தான் உங்களது இலக்கா ..?
இந்த படம் முடிந்து வெளியாகிறவரை அடுத்த படத்தைப் பற்றி யோசிக்கிற ஐடியாவே இல்லை. எனது தயாரிப்பில் ‘சாட்டை’ புகழ் அன்பழகன் இயக்குகிற ‘ரூபாய்’ படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான வேலைகள் நிறைய இருக்கு.. இப்போதைக்கு இதில் மட்டுமே எனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன்..” என்றார் பிரபு சாலமன்.











