ஒருவர் சாதாரண நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு மாறிய பின்பு முதலில் மறக்க நினைப்பது அவர்களுடைய சாதாரண நிலையிலான வாழ்க்கையை. அதைப் பற்றி அதிகம் பேச மாட்டார்கள். திரையுலகில் பலர் பேசுவதை பார்த்தால் பிறந்ததில் இருந்தே இப்படித்தான் இருந்ததுபோல இருக்கும். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தாங்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களைச் சொல்லி அதற்கான பலனாகத்தான் இன்றைக்கு இந்த உயரத்தைத் தொட்டிருக்கிறோம் என்பார்கள். இதில் பாண்டிராஜும் ஒருவர்..
அவருடைய பால்ய கால வாழ்க்கையைப் பற்றி சமீபத்திய ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அதில் தான் ஒரு மருந்து கடையில் வேலை பார்த்ததையும் மறைக்காமல் சொல்லியிருக்கார்.
“நான் தஞ்சாவூரில் இருந்த நேரம் அண்ணனுக்கு கல்யாணம் நடந்தது. திருமணத்திற்கு வந்த திரும்பவும் ஊருக்குப் போகவில்லை. அண்ணியின் அண்ணன் சேலத்தில் ஒரு மருந்து கடை வைத்திருந்தார். அண்ணி கேட்டுக் கொண்டதற்காக அந்த மருந்து கடையில் வேலை செய்ய என்னை சேலத்திற்கு அனுப்பினார்கள் எனது குடும்பத்தினர்.
வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே தலையைச் சொறிந்து கொண்டு ஒருவர் வந்து, “ஸார்… அதை எடுங்க ஸார்..” என்றார். “எது ஸார்..?” எனக் கேட்டதற்கு “அட… அதுதான் ஸார்..” என்றார். மீண்டும் நான் புரியாமல். “அது என்றால் எது ஸார்..?” என்றேன்.. அவர் கொஞ்சம் கோபத்துடன், “யோவ்.. வேலைக்கு புதுசா.. காண்டம் எடுய்யா..” என்று கண்ணடித்துச் சொன்னார்.. ‘அது’ என்கிற வார்த்தை, மருந்து கடைகளில் காண்டத்திற்கான ‘Code Word’ என்பது எனக்குத் தெரியவில்லை.. அன்றைக்கு எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது.
உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் சினிமா எடுக்கும் கனவில் இருக்கும் ஒருவனுக்குக் காண்டம் விற்கும் நிலை வந்தால் எப்படி இருக்கும் என்று என் மீது எனக்கே காறித் துப்பலாம் போலிருந்தது.. இருந்தாலும் நிஜ வாழ்க்கை பயமுறுத்த சில நாட்கள் தொடர்ந்து அங்கேயே வேலை செய்தேன்..” என்று கூறியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
பரவாயில்லை.. விடுங்கண்ணே. காண்டம் விற்பதென்ன சமூகக் கேடானா விஷயமா..? உண்மையில் அதுதானே சமூகத்திற்கான உன்னதமான உதவி.. இந்த நாட்டுக்காக நீங்க செய்திருக்கும் உதவி இது.. கையைக் கொடுங்க.. பாராட்டுறோம்..!
இதுவே இப்படின்னா.. சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி சென்னை எக்மோர் ரயில்வே டிராக்ல கஞ்சா வித்தேன்னு இயக்குநர் ஷங்கர் சொல்லியிருந்தாரே.. அதுக்கு என்னன்னு சொல்றது..?
நேற்றைய கசப்புதான் இன்றைய இனிப்பாக இருக்கும் உழைத்தவர்களுக்கு..!