தமிழ்த் திரையுலக குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ் இப்போது முதல் முறையாக மலையாள சினிமாவில் நடிக்கப் போகிறார். அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் அடுத்து இயக்கப் போகும் மலையாளப் படமான ‘பெருச்சாழி’ என்ற படத்தில்தான் டெல்லி கணேஷ் மல்லுவுட்டில் அறிமுகமாகப் போகிறாராம்.
தமிழில் இதுவரையிலும் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் டெல்லி கணேஷ் 1974-ல் இருந்தே தமிழ்ச் சினிமாக்களில் நடித்து வருகிறார். கே.பாலசந்தர் இயக்கிய ‘பட்டணப் பிரவேசம்’ படத்தில்தான் இவர் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கு, கன்னடம் என்று சில படங்களில் நடித்திருந்தாலும் மலையாளத்துக்கு இதுதான் முதல் படமாம்.
‘பெருச்சாழி’ மலையாளப் படத்தை விஜயபாபு, சன்ட்ரா தாமஸ் இருவரும் தயாரிக்கிறார்கள். அருண் வைத்தியநாதன் இயக்கும் முதல் மலையாளப் படமும் இதுதான். இதில் முகேஷ், விஜயபாபு, அஜூ வர்கீஸ், சன்ட்ரா தாமஸ், ராகினி நன்ந்வாணி ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படம் முழுக்க, முழுக்க அமெரிக்காவில்தான் படமாக்கப்படவுள்ளதாம்..
இயக்குநர் அருண் இதில் யாரை கோர்த்துவிடப் போகிறாரோ தெரியவில்லை.. ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்திற்காக சினேகா, பிரசன்னாவை ஒரு மாதத்திற்கும் மேல் அமெரிக்காவில் தங்க வைத்த நேரத்தில்தான் அவர்கள் இருவருக்குமிடையில் காதல் பிறந்து இப்போது கல்யாணத்தில் முடிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.