சினிமா தலைப்புக்காக தயாரி்ப்பாளரை மிரட்டும் மர்ம நபர்கள்

சினிமா தலைப்புக்காக தயாரி்ப்பாளரை மிரட்டும் மர்ம நபர்கள்

திரைப்படத் தயாரிப்பாளரான கே.பிச்சாண்டி தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘தமிழ் ராக்கர்ஸ்’.

இந்தத் தலைப்பினை தயாரிப்பாளர் பிச்சாண்டி முறைப்படி தான் உறுப்பினராக இருக்கும் ‘கில்டு’ அமைப்பிலும் பதிவு செய்திருக்கிறார்.

ஆனாலும் திடீரென்று இந்தத் தலைப்பை வைத்து படம் எடுக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் பிச்சாண்டிக்கு, முகம் தெரியாத நபர்களிடம் இருந்து மிரட்டல்கள் வருகிறதாம்.

இது குறித்து ‘கில்டு’ அமைப்பின் தலைவரான ஜாக்குவார் தங்கம் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, “எங்களது சங்கத்தின் சக தயாரிப்பாளரான கே.பிச்சாண்டி எங்களது சங்கமான ‘கில்டு’ அமைப்பில் ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என்ற தலைப்பை பதிவு செய்திருக்கிறார்.

நாங்கள், தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய வர்த்தக சபை ஆகிய சங்கங்களை முறையாக விசாரித்து, அவர்களின் ஒப்புதலுக்கு பிறகுதான் எங்களது ‘கில்டு’(GUILD) அமைப்பின் சார்பாக அந்தத் தலைப்பினை பதிவு செய்துள்ளோம்.

தற்போது முழு திரைப்படத்தையும் முடித்து, தணிக்கையையும் முடித்து… அதன் சான்றிதழையும் தயாரிப்பாளர் கே.பிச்சாண்டி பெற்றுவிட்டார்.

இந்த நிலையில், தயாரிப்பாளர் பிச்சாண்டிக்கு மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அதேபோல், தயாரிப்பாளர் வாகனத்தில் செல்லும்போதும் குறுக்கிட்ட சிலர், அவரிடம் படத்தின் தலைப்பை மாற்றும்படி மிரட்டியுள்ளனர். தயாரிப்பாளரின் நண்பரான சரவணனையும் இது தொடர்பாக மிரட்டியுள்ளனர்.

மத்திய அரசு அங்கீகரித்த தணிக்கை சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படத்தின் தலைப்பை மாற்றும்படி சொல்ல அவர்கள் யார்..? அப்படியே அந்த தலைப்பில் எதாவது பிரச்சனை என்றால், அது குறித்து சங்கத்தில் புகார் அளிக்கலாம். அதை விட்டுவிட்டு தயாரிப்பாளரை தனிப்பட்ட முறையில் மிரட்டுவது சரியல்ல.

இனியும் அவர்களின் மிரட்டல் தொடர்ந்தால், காவல் துறையில் சங்கம் சார்பாக புகார் அளிப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், மிரட்டல் விடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, தமிழ் ராக்கர்ஸ்’ திரைப்படத்தை வெளியிட தயாரிப்பாளருக்கு எங்களது சங்கம் எப்போதும் துணை நிற்கும்..” என்றார்.

இதெல்லாம் சரிதான். ஆனால் மிரட்டியவர்கள் யார்.. அவர்களின் பெயர் என்ன.. எந்த ஊரைச் சேர்ந்தவர்கள். இந்தத் தலைப்புக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்.. இது பற்றி காவல்துறையில் புகார் தரப்பட்டுள்ளதா.. இல்லையெனில் ஏன் தரவில்லை.. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லாமல் ஒரு தவிர்த்திருக்கிறார் ஜாகுவார் தங்கம்.

ஒருவேளை படத்தின் விளம்பரத்திற்காக செய்யப்படும் ஸ்டண்டா..?

Our Score