full screen background image

வடிவேலுவுக்கு இயக்குநர் வ.கெளதமன் ஆதரவு..!

வடிவேலுவுக்கு இயக்குநர் வ.கெளதமன் ஆதரவு..!

‘தெனாலிராமன்’ படத்திற்கு தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பாக நடிகர் வடிவேலுவின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தினார்கள் சிலர்.

இதனை எதிர்த்து திரையுலகில் இருந்து சீமான் மட்டுமே வடிவேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். இப்போது திரைப்பட இயக்குநர் வ.கெளதமனும் குரல் கொடுத்திருக்கிறார்.

அவரது அறிக்கை இது :

TAMIL

“நகைச்சுவையின் உச்சமான தமிழ் கலைஞன் வடிவேலு, அப்படிப்பட்ட ஒருவரை தமிழ் மண்ணில், அதுவும் அவரது வீட்டிற்கே வந்து ஒரு பெரும் கூட்டத்துடன் மிரட்டிவிட்டு சென்றிருப்பது மிகவும் வேதனையளிப்பது மட்டுமின்றி மானமுள்ள ஒவ்வொரு தமிழனையும் சீண்டிப் பார்க்கும் செயலாகும்.

தமிழினம் இந்த மண்ணில் சாதி, மதம், மொழி, இனம் கடந்து அனைத்து கலைஞர்களையும், சாதனையாளர்களையும், சான்றோர்களையும் போற்றி பாதுகாத்த இனம். மாற்றாரை வாழ வைத்த இனம் மட்டுமல்ல, ஆள வைத்த இனமும்கூட.

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தினர் தமிழர்கள் அல்லாது பிற மாநிலத்தவர்கள் அல்லது பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்களே கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் இதுவரை நாங்கள் பிரித்துப் பார்க்காமல் ஒரே குடும்பமாக கூடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தெனாலிராமன் பட விவகாரத்தில் வடிவேலுவிடம் அத்துமீறியவர்களின் செயல்பாடுகளை நினைத்துப் பார்க்கும்போது எங்கே இதற்கெல்லலாம் வேட்டு வைத்துவிடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. வடிவேலு அவர்கள் இனம், மொழி பார்க்காமல் அனைவரையும் சிரிக்கவைத்த ஒரு மகா கலைஞன்.

அதனை விடுத்து இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதை வடிவேலுவிடம் மட்டுமல்ல தமிழ் மண்ணில் தனிப்பட்ட ஒரு தமிழனிடமோ அல்லது ஒட்டு மொத்த தமிழனத்தையோ உரசிப் பார்க்கும் நிகழ்வாக கருதி அதற்கேற்ற பின்விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆகவேண்டும் என்பதை கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.”

– இவ்வாறு இயக்குநர் கெளதமன் தெரிவித்துள்ளார்.

ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என்று இனம் படத்திற்காக வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கிய இயக்குநர்கள் சங்கம், இந்தப் படத்தின் எதிர்ப்பு குறித்து இதுவரையிலும் ஒரு குரல்கூட கொடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது..!

‘இனம்’ திரைப்படம் லிங்குசாமியின் தயாரிப்பு என்பதாலேயே இயக்குநர் சங்கம் குரல் கொடுத்ததாக திரையுலகில் பலரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். அது உண்மையோ என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது..

இந்த ‘தெனாலிராமன்’ படத்தை எங்களுக்கு போட்டுக் காண்பித்துவிட்டு பின்புதான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தமிழரல்லாத ஒரு குழு கரைச்சல் கொடுத்துக் கொண்டிருப்பதை இயக்குநர்கள் சங்கம் எப்படி கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்கிறது என்பதுதான் புரியவில்லை..

சம்பந்தப்பட்ட தெலுங்கு அமைப்புகள் தமிழக கவர்னர் ரோசையாவிடம் இது பற்றி புகார் தெரிவித்திருக்கிறார்களாம்.. ஆனால் அவர் இது பற்றி எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லையாம்.

படம் வரும் 18-ம் தேதி ரிலீஸ் உறுதி என்பதால் அன்றைய நேரத்தில் எதிர்ப்புகள் எப்படியெல்லாம் வரும் என்பது தெரியாமல் இருந்தாலும், திடீரென்று கிடைத்திருக்கும் இந்த ப்ரீ பப்ளிசிட்டி படத்திற்கு பிளஸ் பாயிண்ட்டாகவே இருக்கிறது..!

Our Score