சிவகார்த்திகேயன் பொருத்தமான வேடம் செய்ய வேண்டும்-முருகதாஸ் அட்வைஸ்..!

சிவகார்த்திகேயன் பொருத்தமான வேடம் செய்ய வேண்டும்-முருகதாஸ் அட்வைஸ்..!

‘மான் கராத்தே’ படம் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் தயாரிப்பாளரை திருப்திபடுத்தும் அளவுக்கு வசூல் விவரங்கள் வந்து கொண்டிருப்பதால் விமர்சனங்களை பற்றி அவர்கள் யாரும் கவலைப்படவில்லை..! இந்தப் படம் முதல் 3 நாட்களிலேயே 12 கோடியை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனி கிடைக்கவிருப்பதெல்லாம் லம்பமான லாபம்தான்..!

இது போன்ற பெரிய படங்களுக்கு விளம்பரம்தான் முக்கியம் என்பதால் பலவித வழிகளிலும் விளம்பரம் செய்து குவித்துவிட்டார்கள். சிவகார்த்திகேயனுக்கு இப்போதும் இருக்கும் கிரேஸ் குறையவில்லை என்பதை இந்தப் படமும் செய்து காட்டிவிட்டது..

ஸோ.. அடுத்தது என்ன..? சக்ஸஸ் பிரஸ் மீட்தானே..! அதையும் வைத்துவிட்டார்கள்..!

நேற்று மதியம் கிரீன்பார்க் ஹோட்டில் நடந்த சக்ஸஸ் பிரஸ் மீட் நிகழ்ச்சிக்கு ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார், நடிகர் சதீஷ், இசையமைப்பாளர் அனிருத், கதாசிரியரும் தயாரிப்பாளருமான ஏ.ஆர்.முருகதாஸ், இன்னொரு தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், ஹீரோயின் ஹன்ஸிகா மோத்வானி, ஹீரோ சிவகார்த்திகேயன், இயக்குநர் திருக்குமரன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்..!

பேசிய அனைவருமே சிவகார்த்திகேயனும், இயக்குநரையும் வெகுவாக பாராட்டிவிட்டுப் போனார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமே சிவகார்த்திகேயனுக்கு கொஞ்சம் இலவச அட்வைஸையும் வீசிவிட்டுப் போனார்.

“இனிமேல் சிவகார்த்திகேயன் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது அவருக்கு போதுமான வெற்றியல்ல. அவர் போக வேண்டிய தூரம் இன்னமும் நிறைய இருக்கிறது.. அந்தப் பாதையில் செல்ல மிகவும் கவனம் தேவை.  அவருக்குப் பொருத்தமான வேடத்தையே சிவகார்த்திகேயன் ஏற்க வேண்டும்…” என்றெல்லாம் முருகதாஸ் அடக்கத்துடன சொன்னார்.

இதே அடக்கத்துடன் பேசிய சிவகார்த்திகேயன், “முருகதாஸ் ஸார் சொன்னதை நான் ஏத்துக்குறேன்.. இனிமேலும் எனக்குத் தகுந்த வேடம்.. என்னால முடியிற வேடத்தை மட்டுமே செஞ்சு.. என்னோட ரசிகர்களை.. தியேட்டருக்கு என்னைப் பார்க்க வர்றங்களை கண்டிப்பா திருப்திபடுத்துற மாதிரியான படங்களை கொடுப்பேன்..” என்றார்.

ஹன்ஸிகாவும் வந்திருப்பதால் நிறைய கேள்விகள் கேட்கப்படலாம் என்று எதிர்பார்த்தால், வெளியில் காத்திருந்த பக்கோடோாவும் ஐஸ்கிரீமும் மீடியாக்களை வென்றுவிட்டன. ஒரு கேள்விகூட கேட்கப்படாமல் கூட்டம் கலைந்தது..!

இனிமேல் என்ன கேட்டு என்ன ஆகப் போகுது என்கிற விரக்திதான்..!

Our Score