நன்றி சொல்லுதல் என்பது நம் கலாச்சாரத்தின் இன்றி அமையாத அம்சமாகும். ‘நிபுணன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் உமேஷ் பேசும்போது, “ஊடகங்களின் கருத்தும், மக்களின் கருத்தும் ஒன்றி போனது, இந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய அடித்தளமாகும்…” என்றார்.
இந்த விழாவில் பேசிய இயக்குநர் அருண் வைத்தியநாதன், “அர்ஜுன் சாரின் 150-வது படத்தை இயக்கியது எனக்கு மிக, மிக பெருமை. ‘நிபுணன்’ கதை எழுதும்போதே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. இந்த படத்தில் என்னுடன் பணி புரிந்த அனைத்து நடிக, நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
அரசியல் படங்களை இயக்கவும் ஆசையாகத்தான் உள்ளது. கதையும் தயாராகவே எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அதனை இயக்கி வெளியிட்டால் நான் திரும்பவும் அமெரிக்காவிலேயே போய் செட்டிலாக வேண்டியதுதான். இருந்தாலும் நிச்சயமாக ஒரு சூழல் வரும்போது அந்த அரசியல் படத்தை இயக்கி வெளியிடுவேன்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற கிளைக் கதையின் மூலமாக நான் சொல்லியிருப்பது என்னவென்றால் குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் தங்களது நேரத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக செலவிட வேண்டும். வெறுமனே அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு கடமை முடிந்த்து என்று ஒதுங்கிக் கொள்ளக் கூடாது என்பதைத்தான் இந்தப் படத்தின் மூலமாகச் சொல்லியிருக்கிறேன்..” என்றார்.
நடிகர் அர்ஜூன் பேசும்போது, “நன்றி அறிவிப்புக்கு என்று ஒரு விழாவை நடத்தி இருப்பதற்காக இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த 150 பட பயணத்தில் என்னுடன் பணி புரிந்த அத்தனை திரை கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கதை வடிவத்தில் இருந்த இந்த அற்புதத்தை திரை வடிவத்தில் கொண்டு வந்தமைக்கு இயக்குநர் அருண் வைத்தியநாதனுக்கு நன்றி.
ஒரு காலத்தில் என்னுடைய அனைத்து படங்களும் பிளாப் ஆகின. படங்களே என்னிடத்தில் இல்லை. எந்த்த் தயாரிப்பாளரும் என்னைத் தேடி வரவில்லை. இந்த நேரத்தில்தான் என்னை நானே பிரமோட் செய்து கொள்ளத்தான் சேவகன் படத்தை தயாரித்து, இயக்கினேன். அது கடவுள் புண்ணியத்தில் வெற்றியடையவே தொடர்ந்து படங்களை இயக்கினேன். இனியும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிச்சயமாக படங்களை இயக்குவேன்..” என்றார்.