“நான் குடித்துவிட்டுத் தகராறு செய்தேனா..?” – மறுக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்

“நான் குடித்துவிட்டுத் தகராறு செய்தேனா..?” – மறுக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் வாடகைக்கு குடியிருக்கும் குடியிருப்பில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்வதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் வாக்குவாதம் செய்வது தொடர்பான வீடியோக்களும் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘தான் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடவில்லை’ என நடிகர் விஷ்ணு விஷாலும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில், கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் விஷ்ணு விஷால் வசித்து வருகிறார். விஷ்ணு விஷால் தினமும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவதாக அந்தக் குடியிருப்பில் இருக்கும் குடியிருப்போர் சங்கத்தின் செயலாளரான ரங்கபாபு என்பவர் கூடுதல் காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகார் காவல் நிலையத்திற்கும் அனுப்பப்பட்டது.

அந்தப் புகாரில், ”2021 ஜனவரி 23 ஆம் தேதி அதிகாலையில், பிளாட்ஸ் 2-ஏ மற்றும் 2-பி ஆகியவற்றிலிருந்து சத்தமான இசையைக் கேட்டு விழித்தோம். இதைப் பற்றி திரு. விஷ்ணு விஷாலிடம் தெரிவிக்க நான் மாடிக்குச் சென்றேன்.

ஆனால் 2-A மற்றும் 2-B-ன் குடியிருப்பாளர்கள் கதவைத் திறக்கத் தவறிவிட்டனர், நேரம் செல்ல செல்ல இசையின் சத்தமானது. அதனால் செக்யூரிட்டியிடம் சொன்னேன். அவர்கள் அங்கு சென்ற போதும் இசையை நிறுத்தவில்லை.

இதனால் சிறிது நேரம் நிமிடங்களுக்குப் பிறகு, 100-க்கு அழைத்தேன். அப்போதுதான் மூன்றாவது மாடியில் வசிக்கும் ஒரு சக குடியிருப்பாளரும், இரண்டாவது மாடியிலிருந்து வரும் அந்த சத்தத்தால் கலக்கமடைந்தது என் கவனத்திற்கு வந்தது.

அவரும் 100-க்கு அழைத்திருந்த காரணத்தால் அங்கு 2 காவலர்கள் வந்தனர். அவர்களுடன் நானும் மாடிக்குச் சென்றேன். அப்போது குடித்திருந்த விஷ்ணு விஷாலிடமிருந்து தகாத வார்த்தைகள் வந்து விழுந்தது.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான ரமேஷ் குட்வாலாவின் மகன் விஷ்ணு விஷால், தனது பிரபல மன நிலையில் மட்டுமல்ல, சட்டத்தின் மீதான அவரது பிடிப்பையும் குறிக்கும் வகையில் வார்த்தைகளை உச்சரித்தார். காவல்துறையினர் முன்னிலையில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள், தான் என்ன செய்தாலும் சட்டம் எதுவும் செய்யாது என்ற அவரது நம்பிக்கையைக் காட்டியது.

பொதுமக்களுக்கு தொல்லை தரும் இத்தகைய சம்பவங்கள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. முன்னதாக, புத்தாண்டின் போது அவர்கள் நடத்தும் பார்ட்டியைப் பற்றி நாங்கள் அறிந்த பிறகு, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டோம். அதனால் பின்னர் அது நிறுத்தப்பட்டது.

நான் இதய அறுவை சிகிச்சைக்கு உட்பட்டுள்ளேன், எனக்கு பேரக் குழந்தையும் இருக்கிறாள். மேலேயுள்ள பிளாட்டுகளிலிருந்து வரும் உரத்த இசையின் காரணமாகவோ அல்லது நடு இரவில் வரும் தெரியாத நபர்களாலோ மீண்டும் மீண்டும் எழுந்திருக்கிறாள்.

இது போன்ற செயல்களினால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு குடும்பங்கள் உள்ளன. இது சம்பந்தமாக அவர்கள் ஏற்கனவே மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளனர். நாங்கள் எங்கள் குடும்பங்களுடன் நிம்மதியாக வாழ விரும்புகிறோம்,

ஆனால் பார்ட்டி நடத்துவதும், பொது இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதும், எங்களது மன அமைதியை உலுக்கியுள்ளன. தெரியாத நபர்களின் வருகை மற்றும் வெளியேற்றம், குடியிருப்பு சொத்துக்களை தவறாக பயன்படுத்துதல் மற்றும் பொருட்களை தொடர்ந்து ஏற்றுதல் மற்றும் இறக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய, வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

எங்கள் புகாரின் தீவிர தன்மையை உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்…” என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் என பலர் அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வரும் நிலையில், மற்றவர்களுக்குத் தொந்தரவு செய்யும் வகையில்  நடிகர் விஷ்ணு விஷால் செயல்பட்டதாக அவர் மீது புகார் எழுந்ததை அடுத்து உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

போலீசார் விசாரித்தபோது அவர்கள் முன்னிலையிலேயே புகார் கொடுத்தவரிடம் விஷ்ணு விஷால் தகராறில் ஈடுபடும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளம் மூலம் விளக்கம் அளித்துள்ளார். “நான் அடுத்த படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உடற் பயிற்சி செய்து வருகிறேன். மேலும் நான் டயட்டில் இருந்து வருகிறேன். இந்த நிலையில் நான் எப்படி மது அருந்துவேன்…? புகார் சொல்வதற்கும் ஒரு லாஜிக் வேண்டாமா…?

இந்த குடியிருப்பில் இருந்து என்னை காலி செய்ய வேண்டும் என்பதற்காக அந்த தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் என் மீது அபாண்டமான குற்றச்சாட்டை கூறுகின்றனர்.

ஒரு சினிமாக்காரன் என்ற வகையில் சினிமா தொடர்பான நபர்கள் தினமும் என்னை சந்திக்க வந்து கொண்டிருப்பதால் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த குடியிருப்பில் இருந்து என்னை காலி செய்ய அவர்கள் இதுபோன்ற புகார்களை தெரிவித்துள்ளனர்…” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Our Score