full screen background image

டார்க் ஜெயண்ட் –  சினிமா விமர்சனம்

டார்க் ஜெயண்ட் –  சினிமா விமர்சனம்

ஒரு சாதாரண குடும்பக் கதையில் திகில், சஸ்பென்ஸ், திரில்லர், அமானுஷ்யம் கலந்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தனது மனைவி மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார் நாயகன் ஆதர்ஷ். அவருக்கு இப்போது இருக்கும் ஒரே பிரச்சனை கடன்தான். இந்தக் கடனிலிருந்து தப்பிக்கிறதுக்காக அவர் பெரும் போராட்டமே நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் கோவையிலிருந்து ஒருவர் ஆதர்ஷை தொலைபேசியில் அழைத்து ஒரு விஷயத்தை சொல்கிறார். கோயம்புத்தூர் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு தாத்தா, தன்னுடைய கோடான கோடி சொத்துக்களை தன்னுடைய பேரன், பேத்திக்கு கொடுக்க இருப்பதாக சொல்கிறார்.

“அந்த தாத்தாவிடம் வந்து பேரன் என்று சொல்லி சொத்துக்களை நீ பெற்றுக் கொள்ளலாமே” என்று ஒரு குற்றச் செயலை செய்ய தூண்டி விடுகிறார்.

இப்போதைக்கு கடனை அடைக்க வேண்டுமே என்கிற காரணத்திற்காக இந்தத் திட்டத்திற்கு ஒத்துக் கொள்ளும் ஆதர்ஷ் கோவைக்கு வருகிறார். அங்கே கிராமத்தில் படுத்த படுக்கையாக இருக்கிறார் தாத்தா அவரைப் பார்த்துக் கொள்ளும்விதமாக அந்த வீட்டிலேயே தங்க முடிவெடுக்கிறார் ஆதர்ஷ்.

இந்த நேரத்தில்தான் அந்த வீட்டில் அவரே எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கின்றன. பணம் வேண்டுமே என்பதற்காக வருகின்ற செய்திகளை எல்லாம் எதிர்கொள்கிறார் ஆதர்ஷ்

ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் இருக்கும் தாத்தாவும், அவருக்கு போன் செய்து கிராமத்துக்கு வரவழைத்த அந்த நபரும் ஏற்கனவே இறந்து விட்டார்கள் என்ற உண்மை அவருக்கு தெரிகிறது.

இப்போது தன்னை இங்கே வருமாறு அழைத்த்தன் காரணம் என்ன? தான் இப்படி இந்த தாத்தாவின் வீட்டில் தஞ்சம் புக வேண்டிய அவசியம் என்ன? என்பதையெல்லாம் ஆதர்ஷ் தேட துவங்குகிறார். இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் அவரையே திகிலாக்குகிறது.

இதன் பின்பு என்ன நடக்கிறது? அவரை சுற்றி நடக்கும் அந்த அமானுஷ்ய சம்பவங்களின் காரணகர்த்தா யார்? ஆதர்ஷ் அதை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இதற்கு முன்பு சில படங்களில் நடித்திருக்கும் ஹீரோ ஆதர்ஷ், இந்த முறை சஸ்பென்ஸ், திரில்லர், திகில் கலந்த அமானுஷ்ய கதையில் நடித்திருக்கிறார்.

பார்ப்பதற்கு ரவுடி போன்ற தோற்றத்தில் இருந்தாலும் படத்தின் மையக் கருவான கடன் பிரச்சனைகள் சிக்கி தவிக்கும் ஒரு சராசரி இளைஞனாகவும்… அந்த கொடூரமான பேய் அவருடைய உடலில் புகுந்த பின்பு தன்னிலை மந்து அவர் செய்வதெல்லாம் அடாவடிதான். அந்த அட்ராசிட்டியை சுய நினைவுக்கு வந்த பிறகு நினைத்துப் பார்த்து கலக்கமடைவது என்று சில பல நடிப்புகளை தன்னால் முடிந்த அளவுக்கு கொடுத்திருக்கிறார்.

ஆதர்ஷின் மனைவியாக நடித்திருக்கும் ஜோவிகா லிவிங்ஸ்டன் குடும்பப் பெண் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இவரும் தன் கணவருடன் சேர்ந்து அந்த அமானுஷ்யங்களை எதிர்கொள்ளும் நேரத்தில் பதற்றமும், பயமும் கலந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

படத்தின் மையக் கருவான் கேரக்டரில் நடித்திருக்கும் அருவி மதன், சோனியா அகர்வால் இருவருமே சில காட்சிகள் என்றாலும் கவனிக்க வைத்திருக்கிறார்கள். ஆதர்ஷின் தங்கையாக நடித்தவரும் சிறப்பாக நடித்து இவர் யார் என்ற கேள்வியை ரசிகர்களிடத்தில் கேட்க வைத்திருக்கிறார்.

மேலும் ஆதர்ஷின் நண்பனாக நடித்திருக்கும் அமுதவாணன், போலீஸ் இன்ஸ்பெக்டராக  நடித்தவர், சிறப்பு தோற்றத்தில் சாமியாராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ் மற்றும் லிவிங்ஸ்டன் இவர்களும் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இது போன்ற பேய், பிசாசு, சாத்தான், அமானுஷ்ய திரைப்படங்களில்  திகில் காட்சிகளை எப்படி திரையில் காட்ட வேண்டுமோ அதை எல்லாம் அப்படியே செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சங்கீத்மணி கோபால்.

இசையமைத்திருக்கும் விக்னேஷ் ராஜா தன்னுடைய பின்னணி இசையினால் இந்தப் படத்துக்கு ஒரு கூடுதலான ஒரு பயத்தை கொடுத்திருக்கிறார்.

புகைப்படங்களுக்கே உரித்தான வகையில் காட்சிகளை பயமுறுத்தும் வகையில் படத் தொகுப்பாளர் திருச்செல்வம், இந்தப் படத்தின் படத் தொகுப்புப் பணியை செய்திருக்கிறார்.

இறுதியில் அந்த சைத்தானின் வருகையைக் காட்டும்போது ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், மேக்கப் கலைஞர்கள், அனிமேஷன் செய்தவர்கள் என்ற அத்தனை பேருமே மிகச் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் கிஷான் தான் சொல்ல நினைத்ததை தன்னால் முடிந்தளவுக்குச் சொல்லியிருக்கிறார். படத்தில் பெரும்பாலான காட்சிகள் ஒரு வீட்டுக்குள்ளேயே நடப்பதாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவிதமான கோணங்களில் படமாக்கி அடுத்து எங்கே குண்டு வைக்கப் போகிறார்கள் என்று நம்மை கேட்க வைப்பதுபோல காட்சிகளை பரப்பரப்பாக இயக்கியிருக்கிறார்.

திகில் படங்களுக்கே உரித்தான கதை என்பதால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிவதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய சறுக்கல்.

திரைக்கதையில் இன்னமும் கொஞ்சம் அழுத்தமான டிவிஸ்ட் கலந்த திரைக்கதையை கொடுத்திருக்கலாம். இயக்குநர் இன்னும் கொஞ்சம் திரைக்கதைக்கும், இயக்கத்திற்கும் மெனக்கெட்டிருக்கலாம்.

டார்க் ஜெயன்ட்’ என்று பெயர் வைத்து அதற்கு ஏற்றார்போல் கன்டென்ட் படத்தில் இருப்பதாக இயக்குநர் சொன்னாலும், படம் ஓரளவுக்குத்தான் நமக்கு திருப்தியை கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை.

RATING : 2.5 / 5

Our Score