full screen background image

‘டமால் டுமீல்’ தமிழ்ப் படம், தாய்லாந்து நாட்டு படத்தின் காப்பி..!

‘டமால் டுமீல்’ தமிழ்ப் படம், தாய்லாந்து நாட்டு படத்தின் காப்பி..!

என்னத்த சொல்றது..?

ஒரு படம் நல்லாயில்லைன்னு ரசிகர்கள் நிராகரித்த பின்பும், ‘திருட்டு விசிடின்னாலதான் படம் ஓடலை’ன்னு கூசாம பொய் சொல்லிக்கிட்டே இருக்காங்க சினிமாக்காரங்க.. இதுல இவங்களே திருட்டு டிவிடில வெளிநாட்டு படத்தைப் பார்த்துட்டு அதை காப்பி செஞ்சு தமிழாக்கம் பண்ணி.. அந்தப் படத்தை திருட்டு சிடில பார்க்காதீங்கன்னு நம்ம மக்களுக்கே அறிவுரை சொல்றாங்க.. நாட்டு நிலைமை இப்படித்தான் இருக்கு..!

சமீபத்தில் தமிழில் வெளிவந்த பல அடிதடி, கமர்ஷியல் படங்களும் வெளிநாட்டுப் படங்களின் பின்னணி கொண்டவையாகவே வருவதாக உலக சினிமாவின் தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து புகார் சொல்லியபடியே வருகிறார்கள்.

சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்று இப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் ‘யாமிருக்க பயமே’ படத்தின் அடிப்படை கதையும் ஒரு தென் கொரியப் படத்தின் கதைதான்..

இப்போது இ்ன்னுமொரு படத்தின் கதையும் அம்பலமாகியுள்ளது. சென்ற மாதம் வெளிவந்த ‘டமால் டுமீல்’ படமும் அட்டர்காப்பி என்று சொல்லப்படும் வகையைச் சேர்ந்தது என்று உலக சினிமாவின் தமிழ் ரசிகர்கள், தற்போது தகவல் தெரிவித்துள்ளார்கள்.

1999-ம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் அந்நாட்டு மொழியான ‘தாய்’ மொழியில் வெளியான Ruang Talok 69 என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்பது இந்தப் படத்தின் கதையை முழுமையாகப் படித்துப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது.

தாய்லாந்து படத்தில் ஹீரோயின்தான் மெயின் கேரக்டர்.. தமிழில் இதனை ஹீரோவின் கதையாக மாற்றிவிட்டார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.. உங்களுக்கு சந்தேகமிருந்தால் இந்த லின்க்கிற்குச் சென்று ‘தாய்’ படத்தின் கதையைப் படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்..

சிறந்த வெளிநாட்டு படங்களை அதன் கதை கெடாமல் நமக்குக் கொடுக்க நினைப்பதில் தவறில்லைதான். ஆனால் சொல்லிவிட்டு செய்யலாமே..? முறைப்படி அனுமதி பெற்றுவிட்டு படமாக்கலாமே..? அதுவும் முடியாவிட்டால், அந்தப் படைப்பாளிகளுக்கும் ஒரு மரியாதை தரும்விதமாக படத்தின் இறுதியில் ‘இதன் இன்ஸ்பிரேஷன் அல்லது காப்பி’ என்று உண்மையை ஒத்துக் கொள்வதுதானே நியாயம்..? ஒரு படைப்பாளிக்கு, இன்னொரு படைப்பாளியே இப்படியொரு அநியாயத்தைச் செய்யலாமா..?

இந்தப் படங்களெல்லாம் வெளிநாட்டு திரைப்பட விழாக்களுக்குச் செல்லும்போது மூலப் படத்தைப் பார்த்தவர்கள் இதனைப் பார்த்தால் நமது தமிழ்ப் படங்களையும், நமது தமிழ்நாட்டையும் பற்றி என்ன நினைப்பார்கள்..? தமிழ்ச் சினிமாவின் இந்தக் காப்பியடி சித்து வேலை என்றைக்கு நிறுத்தப்படுகிறதோ, அன்றைக்குத்தான் தமிழ்ச் சினிமாவிற்கு நல்ல பெயரும் கிடைக்கும்..!

Our Score