full screen background image

“மயிர்’ என்ற வார்த்தையில் என்ன ‘கெட்ட மயிர்’ இருக்கு..?” இயக்குநர் பார்த்திபனின் கேள்வி..!

“மயிர்’ என்ற வார்த்தையில் என்ன ‘கெட்ட மயிர்’ இருக்கு..?” இயக்குநர் பார்த்திபனின் கேள்வி..!

‘மயிறு’ என்பது மனிதர்களுக்கு தனி அடையாளமானதுதான்.. ஆனால் ‘மயிர்’ என்ற வார்த்தையை கோபத்தில் எதிராளியின் மீது வீசப்படும் அம்பாகவே தமிழகம் எதிர்கொண்டு வருகிறது..

‘அவனென்ன பெரிய மயிரா..?’ என்ற கேள்வியே ஒருவரை அவமானப்படுத்தும்விதமானதாகவே இங்கே கருதப்படுகிறது. அதே சமயம் ‘மயிரே போச்சுன்னு போயிக்கிட்டேயிருப்பேன்’ என்று தன்னம்பிக்கையின் அடையாளமாகவும் இங்கே சொல்லப்படுகிறது. ‘உதிர்ந்த மயிர்’ என்ற வார்த்தை தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது.

இப்படிப்பட்ட ‘மயிர்’ என்கிற வார்த்தை புதுமைப்பித்தனான இயக்குநர் ஆர்.பார்த்திபன் இயக்கியிருக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. இது பற்றி இன்று நடந்த பிரஸ் மீட்டில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

“மயிர் என்பது சாதாரண வார்த்தைதான்.. அது கெட்ட வார்த்தையில்லை.. கோபத்துல எல்லாரும் சொல்றதுதான்.. யாரும் அதை யூஸ் பண்ணாதவங்க இல்லை.. இந்தப் படத்துல ஒரு காரணத்தோட அதனை யூஸ் பண்ணியிருக்கேன். திருவள்ளுவர்கூட இந்த வார்த்தையை குறள்ல பயன்படுத்தியிருக்கார்.. ‘மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்…’ என்ற குறளே இருக்கே..? அதுனால இது ஒண்ணும் தப்பில்லை..” என்றார் பார்த்திபன்..!

“சென்சாரில் இது தப்புமா…?” என்ற கேள்விக்கு, “அதுக்காகத்தானே இதை இங்கயே பேசுறேன்..  பார்த்துக்கலாம்.. அந்த வார்த்தை சொல்லு்ம்போதே, பின்னாடியே குடிப்பழக்கத்துக்கு போடுற லோகோ மாதிரி பின்னணில அந்தக் குறளும் தெரியும்..” என்றார் பார்த்திபன்..

ஆனாலும் இது போன்ற un parliament words-ஐ காரணமில்லாமல் பயன்படுத்தினால் அது படத்தின் தன்மையைக் குறைக்கும் என்பது வித்தக இயக்குநரான பார்த்திபனுக்கு தெரியாததல்ல.

 இப்படித்தான் தமிழ்ச் சினிமா, தமிழ் இளைஞர்களுக்கெல்லாம் தேவையில்லாத வார்த்தைகளையெல்லாம் சிறு வயதிலேயே கற்றுக் கொடுத்துவிடுகிறது..! பின்பு தமிழ்ச் சமுதாயம்தான் அதனை வட்டியோடு வாங்கிக் கட்டிக் கொள்கிறது..!

இந்த ‘மயி்ர்’ என்ற வார்த்தை படத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துதான் இயக்குநர் பார்த்திபனுக்கு மண்டகப்படியின் அளவு கூட, குறையக் கிடைக்கும்..!

Our Score