full screen background image

பெருசு – சினிமா விமர்சனம்

பெருசு – சினிமா விமர்சனம்

நடிகர், நடிகைகள் :

வைபவ் துரைக்கண்ணு
சுனில் சாமிகண்ணு​
நிஹாரிகா சாந்தி
சாந்தினி ராணி
ரமா எதிர் வீட்டுப்பெண்
கார்த்திகேயன் சாமியார்
பால சரவணன் அமீன்
முனிஷ்காந்த் சிங்காரம் சித்தப்பா
ரெடின் கிங்ஸ்லி ஆட்டோ டிரைவர்
விடிவி கணேஷ் மருத்துவர்
கருணாகரன்ஃப்ரீசர் கடை உரிமையாளர்
சுவாமிநாதன் பழைய நண்பர்
தனம் அம்மா
தீபா சுந்தரி
கஜராஜ் விஏஓ
அலெக்சிஸ் ஹலாஸ்யம்
சுபத்ரா ராபர்ட் வனிதாமணி
டீனேஜ் பையன் ஜீவா பாலச்சந்திரன்

படக் குழுவினர் :

இயக்குர் இளங்கோ ராம்
தயாரிப்பு ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டுடியோஸ்
தயாரிப்பாளர் கார்த்திகேயன்.எஸ்
ஒளிப்பதிவு சத்யா திலகம்
படத்தொகுப்பு சூரிய குமரகுரு
இசை அருண் ராஜ்
பத்திரிக்கை தொடர்பு  சுரேஷ் சந்திரா, அப்துல்..நாசர்

சினிமா என்பது ஒரு மாஸ் மீடியா. மக்களுக்கானது. மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லித் தருவதற்காக நம்முடைய மூதாதையர்கள் ஆரம்பித்த ஒரு கலை வடிவம்.

கூத்துக் கலை, நாடகக் கலை என்று பரிணாமித்து இப்போது சினிமா கலையாக வந்து நின்றிருக்கும் இந்த சினிமா துறையை சீரழிப்பதற்காகவே சில திரைப்படங்கள் ஒவ்வொரு வருடமும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இந்த ஆண்டு வந்திருக்கும் படம்தான் இந்த பெருசு’.

மனதில் நடப்பதை எல்லாம் வெளியில் பேசிவிட முடியாது. சொல்லிவிட முடியாது. மனம் ஒரு குப்பை தொட்டி. அந்த குப்பை தொட்டிக்குள் இருக்கின்ற அழுக்குகளை நாம்தான் வேரோடு அழிக்க வேண்டும். ஆனால் உள்ளுக்குள் இருக்கும் அந்த கெட்ட விஷயங்களை வெளியில் எடுத்து அனைவரிடமும் பகிர்வோம் என்று நினைத்துதான் இந்தப் படத்தின் இயக்குநரான இளங்கோ ராம் இந்தப் படத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

சென்ற வருடமே சிங்கள மொழியில் இதே இயக்குநர் இயக்கி வெளிவந்த படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த பெருசு திரைப்படம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரத்தநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹாலஸ்யம் என்ற அலெக்ஸ். மிகவும் வயது முதிர்ந்தவரான இவர் பார்ப்பதற்கு அமைதியானவராக இருந்தாலும் உள்ளுக்குள் பாலியல் வேட்கையுடனும் இருப்பவர்.

ஆற்று படித்துறையில் குளித்துக் கொண்டிருக்கும் பெண்களை மறைந்து நின்று ரசித்துப் பார்க்கும் சின்ன வயசு விடலை பசங்களின் எண்ணமும் இவரிடத்தில் இருக்கிறது.

இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகி அதில் ஒரு மகனுக்கு இரண்டு பேரப் பிள்ளைகளும் பிறந்து அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருக்கும் நிலைமையிலும் இவருக்கு இன்னொரு பெண் தேவையாக இருக்க சுபத்ரா ராபட்டை சின்ன வீடாக வைத்து அங்கேயும் அடிக்கடி சென்று வந்து கொண்டிருக்கிறார்.

வயதானவர்களுக்கு உரித்தான அந்த பாலியல் வேட்கையின் தாமதமும், எழுச்சியின்மையும் இவரையும் தாக்கி இருப்பதால் அதற்கு மருந்தாக ஊக்க மாத்திரைகளை அவ்வப்போது பயன்படுத்தி வருகிறார்.

அப்படி ஒரு ஊக்க மாத்திரையை நேற்று முன்தினம் இரவில் அவர் பயன்படுத்தியிருக்க அது காலையில் இன்னமும் வீரியம் குறையாமல் அப்படியே இருந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் காலையில் தொலைக்காட்சியில் பாடல் கேட்டபடியே சாய்ந்திருந்தவர்.. அப்படியே மரணித்து விட்டார் ஆனால் அவருடைய ஆணுறுப்பு மரணிக்கவில்லை. நேற்று இரவு சாப்பிட்ட அந்த மாத்திரையின் தாக்கம் அப்படியே இருப்பதால், அது அப்படியே செங்குத்தாய் தலைநிமிர்ந்து நிற்கிறது.

இதைப் பார்க்கும் அவருடைய குடும்பத்தினர் ஒட்டு மொத்தமாய் பதறுகிறார்கள். அலறுகிறார்கள். இப்பொழுது ஊரைக் கூட்டி அப்பாவின் மரணம் பற்றிச் சொன்னால் இந்த அசிங்கம் ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிந்து விடுமே என்பதற்காக இதை தடுப்பதற்காக.. இதை மறைப்பதற்காக என்னென்னமோ செய்து பார்க்கிறார்கள். ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை.

தற்காலிகமாக அவரை படுக்க வைப்பதற்கு பதிலாக உட்கார வைத்து சமாளிக்கிறார்கள். ஆனால் மாலை போட வருபவர்களில் ஒரு சிலர் சந்தேகப்பட்டு இதில் ஏதோ சதி இருப்பதாக நினைத்து அவருடைய குடும்பத்தினரை திட்ட ஆரம்பிக்கிறார்கள்.

தன்னுடைய அப்பாவின் மானத்தை காப்பாற்றுவதற்காக பிள்ளைகளும், மனைவியும் போராட கடைசியாக என்னதான் நடக்கிறது அதை எப்படி மறைத்தார்கள் அவருடைய இறுதிச் சடங்கு எப்படி நடந்தது இதுதான் இந்த படத்தின் கதை.

இப்படி ஒரு போல்டான கதையை தமிழ் சினிமா இதுவரையில் கண்டிராதது. ஆனால் இப்படி ஒரு நடந்தால் இப்படி இருக்கும் என்று நினைத்து இந்த படத்தை கொடுத்திருக்கிறாராம் இயக்குநர் இளங்கோ ராம்.

பாவம் அவர்களுடைய பிரச்சனை அவருக்கு. நாட்டில் எத்தனையோ கதைகள் எடுக்கப்பட்ட எடுக்கப்பட வேண்டிய கதைகள் இருக்க இந்த மனிதருக்கு இதுதான் இப்போதைக்கு மிகப் பெரிய பிரச்சனையா..

காமெடியாகவே இருக்கட்டும்.. காமெடி திரைப்படங்களுக்கே எத்தனையோ கதைகள் காத்திருக்கின்றன.. அதையெல்லாம் எடுத்திருக்கலாம்.. ஆனால், அதையெல்லாம் தவிர்த்துவிட்டு இப்படி ஒரு கேவலமான சிந்தனையோடு, கேவலமான ஒரு திரைப்படத்தை எடுத்து வைத்திருக்கும் இந்த இயக்குநரை எந்தவிதத்திலும் பாராட்டுவதற்கு நமக்கு மனசில்லை.

ஆனாலும் தமிழ் சினிமாவின் இந்தாண்டுக்கான விமர்சனப் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக இந்தப் படத்தின் கதையை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால்தான் இந்தர் கதையை இப்படி பதிவு செய்திருக்கிறோம்.

மற்றபடி, இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் ஒளிப்பதிவு மற்றும் தொழில் நுட்பம் எப்படி இருந்தது.. எப்படி நடித்திருக்கிறார்கள்படத்தில் காமெடி இருந்ததா.. இல்லையா.. என்பதையெல்லாம் சொல்லி இந்தப் படத்திற்கு ஒரு சதவீதம்கூட மரியாதையை கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.

எனவே இந்தப் படம் வந்தது தெரியாமல்.. போனது தெரியாமல் போகட்டும் என்று விட்டுவிட்டு அடுத்த வேலையை பார்ப்போம். அதுதான் நம்முடைய மனதுக்கும். நம்முடைய குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ் சினிமாவிற்கும் நல்லது.

Our Score