மலையாள நடிகர் சங்கத்தில் திடீர் புகைச்சல் – நடிகை பார்வதி ராஜினாமா..!

மலையாள நடிகர் சங்கத்தில் திடீர் புகைச்சல் – நடிகை பார்வதி ராஜினாமா..!

மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பில் திடீர் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஒரு பிரபலமான நடிகை கடத்தப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு அந்த ‘அம்மா’ அமைப்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன.

பாதிக்கப்பட்ட நடிகைக்கு ‘அம்மா’ அமைப்பு உதவவில்லை என்றும், குற்றஞ்சாட்டப்பட்ட நடிகருக்கு ஆதரவாகவே ‘அம்மா’ அமைப்பு ஆதரவாக இருப்பதாகச் சொல்லி நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கால், ரேவதி, பத்மபப்ரியா போன்றோர் குரல் எழுப்பினார்கள்.

இதனையொட்டி அந்தப் பாதிக்கப்பட்ட நடிகையும், ரீமா கல்லிங்கால் மற்றும் ரம்யா நம்பீசன் மூவரும் அந்தச் சங்கத்தில் இருந்து விலகிவிட்டனர். ஆனால் பார்வதியும், ரேவதியும் அந்தச் சங்கத்தில் தொடர்ந்து இருந்தனர்.

இந்த நேரத்தில் ‘அம்மா’ அமைப்பின் நலத் திட்ட உதவிகளுக்கு நிதி திரட்டும் பொருட்டு ஒரு திரைப்படத்தை தயாரிக்கப் போவதாக ‘அம்மா’ அமைப்பு சமீபத்தில் முடிவு செய்தது. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் டி.கே.ராஜீவ் குமார் இயக்கப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.

இந்தப் படத்தை 2008-ம் வருடம் ‘அம்மா’ அமைப்பு தனது நிலத் திட்ட உதவிகளுக்காக உருவாக்கிய ‘டுவென்ட்டி டுவென்ட்டி’ படத்தின் அடுத்த பாகமாகக் கொண்டு வரப் போவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இது பற்றி ‘அம்மா’ அமைப்பின் பொதுச் செயலாளரான எடவலா பாபுவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது “செய்தி உண்மைதான்..” என்று ஒத்துக் கொண்டார். மேலும், "அந்தப் படத்தில் பாதிக்கப்பட்ட நடிகையும் நடிப்பாரா..?" என்ற கேள்விக்கு.. "அவர் இப்போது எங்களது சங்கத்தில் உறுப்பினராகவே இல்லை. அவரை எப்படி நாங்கள் நடிக்க வைக்க முடியும்.? அதோடு அவர் முதல் பாகத்திலேயே இறந்துவிட்டார். இறந்தவரை எப்படி அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தில் உயிருடன் கொண்டு வர முடியும்..?" என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதைக் கேட்டவுடன் கொதிப்பான பிரபல மலையாள நடிகையான பார்வதி தான் ‘அம்மா’ அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். அந்தச் செய்தியில், "2018-ம் ஆண்டிலேயே, எனது நண்பர்கள் ‘அம்மா’விலிருந்து ராஜினாமா செய்தபோது, ​​குறைந்த ஒரு சிலராவது இந்த அமைப்பினுள் தொடர்ந்து பணியாற்றி அதை சரி செய்ய உதவ வேண்டும் என்று நினைத்துதான் நான் அந்தச் சங்கத்திலேயே தொடர்ந்தேன்.

ஆனால், ‘அம்மா’ அமைப்பின் பொதுச் செயலாளர் இப்போது பேசுவதைப் பார்த்த பிறகு, இந்தச் சங்கத்திற்குள் எதையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை நான் கைவிட்டுவிட்டேன்.

இந்த அமைப்பால் மோசமாக கைவிடப்பட்டு, அதன் விளைவாக அதிலிருந்து விலகிய ஒரு பெண் உறுப்பினரைப் பற்றி முற்றிலும் வெறுக்கத்தக்க வகையில், மோசமான கருத்தினை வெளியிட்டிருக்கிறார். அது அவரது குரோத மனப்பான்மையைக் காட்டுகிறது,

நான் பாபுவுக்காகப் பெரிதும் பரிதாபப்படுகிறேன். ஊடகங்கள் இந்த கருத்தைப் பற்றி விவாதிக்கத் தொடங்கும்போது, ​​அவருடைய சகாக்கள் பலரும் அவரைத்தான் ஆதரிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை அவர்கள் எப்போதும் கையாண்ட விதம் காரணமாக நான் இதைப் பற்றி உறுதியாக இருக்கிறேன்.

ஆகவே, நான் உடனடியாக ‘அம்மா’ அமைப்பிலிருந்து ராஜினாமா செய்கிறேன்.  மேலும், இதேபோல் திரு. எடவேலா பாபுவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோருகிறேன். மற்ற மனசாட்சியுள்ள உறுப்பினர்களும் இதைக் கோருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.. இந்தக் கோரிக்கைக்கு கை கொடுக்க யார் முன் வருவார்கள் என்பதைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

உறுப்பினர்களின் நலன் என்ற பெயரில் மனசாட்சிக்கு விரோதமாக நடக்கும் இவர்களைப் பற்றி அனைத்து உறுப்பினர்களும் நினைத்துப் பார்க்க வேண்டும்…" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி திரும்பவும் எடவேலா பாபுவிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது, "நான் சொன்னதற்கு அவர்கள் ஒரு புதிய அர்த்தத்தைக் கண்டால் அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது. டுவெண்ட்டி டுவெண்ட்டி இரண்டாம் பாகத்தில் அவர் நடிப்பாரா என்று என்னிடம் கேட்கப்பட்டது. முதல் பாகத்தில் இறந்த ஒருவர் எப்படி இரண்டாம் பாகத்தில் உயிருடன் வர முடியும்.. என்றுதான் நான் சொன்னேன். திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் இறந்துவிட்டது என்பதை நான் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் நான் சொன்னதன் அர்த்தம் அதுதான். கேள்விகள் கூர்மையானவை, எனது பதில்கள் சுருக்கமானவை.

மேலும், அந்த நடிகை இப்போது அம்மா அமைப்பின் உறுப்பினர் அல்ல என்று நான் கூறியிருந்தேன். எனவே, எங்களது அம்மா அமைப்பில் தற்போது இருக்கும் 400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடமிருந்து சுமார் 40 கலைஞர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் எங்களது முதல் வேலை.. எங்களது சங்க கலைஞர்களுக்குத்தான் முதல் முன்னுரிமை. அதன் பிறகுதான், நாங்கள் மற்ற நடிகர்களைப் பார்ப்போம்…" என்று பதிலளித்திருக்கிறார்.

"உங்களை ராஜினாமா செய்யும்படி பார்வதி சொல்லியிருக்கிறாரே...?" என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "அதிகமான அமைப்பு உறுப்பினர்கள் ராஜினாமா செய்யுமாறு கோரினால் நான் செய்வேன். ஒரேயொரு பார்வதி கேட்டார் என்பதற்காக நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்..?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.