இயக்குநர் முருகானந்தம் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘கபாலி டாக்கீஸ்’

இயக்குநர் முருகானந்தம் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘கபாலி டாக்கீஸ்’

இயக்குநர் பாலாவின் தம்பியான சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படத்தின் பெயர் ‘கபாலி டாக்கீஸ்’.

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். இவர், விஷ்ணு விஷால், கேத்தரின் தெரேசா, சூரி இவர்களுடன் கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த ‘கதாநாயகன்’ படத்தின் இயக்குநராவார். ஏற்கனவே இவர் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘மரகத நாணயம்’ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக மேக்னா ஹெலன் நடத்திருக்கிறார். மேலும் கே.பாக்யராஜ், ஜி.எம்.குமார், இமான் அண்ணாச்சி, சார்லி, மதன் பாப், டான்சர் டியாங்கனா, பி.எல்.தேனப்பன். வேலு பிரபாகரன், வர்ஷன், நவீன், ராஜ்குமார், சக்ரி, ஷீலா, சாய்பிரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கலை இயக்கம் – ஜெயசீலன், முனி கிருஷ்ணன், நடன இயக்கம் – ராதிகா, சங்கர், சண்டை இயக்கம் - தவசி ராஜ், பாடல்கள் - சினேகன், மதுர கவி, தமிழ் இயலன், விஜயசாகர், படத் தொகுப்பு - ராஜேஷ் கண்ணா, இசை - சபேஷ் – முரளி, இணை தயாரிப்பு - ஆர்.சுரேஷ்குமார், தயாரிப்பு நிறுவனம் - மெளலி பிக்சர்ஸ், தயாரிப்பாளர் - பி.சந்திரமெளலி, கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் – ரவி சீனிவாசன்.

இயக்குநர் ரவி சீனிவாசன், ஜி.எம்.குமார், வேலு பிரபாகரன் உட்பட முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் ரவி சீனிவாசன் பேசும்போது, "அண்ணன், அண்ணி, அவர்களின் மகள் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் நாயகன் முருகானந்தம். ஒரு கட்டத்தில் அண்ணன் இறந்து விடுகிறார்.

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு வலம் வந்த முருகானந்தத்திற்கு அண்ணனின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அதிலிருந்து மீண்டு தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் தடம் பதித்து சாதிக்க நினைக்கிறான்.

பல தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொல்லி இயக்குநர் வாய்ப்பு கேட்டு அலைகிறான். கிடைக்கவில்லை. இந்த நிலையில் முருகானந்தம் தன் பால்ய நண்பனை சந்திக்கிறான். இவன் நிலை உணர்ந்து ‘உனக்கு நானே வாய்ப்பு தருகிறேன்’ என்று கூறி முருகானந்தத்தை இயக்குநராக ஒப்பந்தம் செய்து படத்தைத் தயாரிக்கிறான். படம் முடிவடைந்தது.

எந்த நண்பன் இவனுக்காக படத்தை தயாரித்தானோ அவன் மூலமே முருகானந்தத்திற்கு பேரிடி விழுகிறது. பல அதிர்ச்சிகளையும், பேரிடர்களையும் சந்தித்து திரை உலக வாழ்க்கையிலும், நிஜ வாழ்க்கையிலும் முருகானந்தம் வென்றானா..? என்பதை வெகுஜனங்கள் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான பொழுது போக்கும் அம்சங்கள் நிறைந்த படமாக இயக்கி உள்ளேன்.

குறிப்பாக 1980-ல் ஆரம்பிக்கும் கதை 2020-ல் முடியுமாறு திரைக்கதை அமைத்துள்ளேன். இந்தப் படம் முழுக்க முழுக்க சென்னையில் மந்தைவெளி மற்றும் மைலாப்பூர் பகுதிகளில் படமாக்கி உள்ளேன். அன்றைய சென்னை எப்படி இன்று உருமாறி உள்ளது என்பதனையும் அழகாகப் படம் பிடித்துள்ளேன்.

என் வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களின் அடிப்படையில்தான் காட்சிகளை அமைத்து இருக்கிறேன். சினிமாவை நேசித்து சுவாசிக்கும் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்...” என்றார்

“படத்தை விரைவில் வெளிக்கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது. மக்கள் தங்கள் கவலை மறந்து குடும்பத்தோடு ரசிக்கும் படமாக இருக்கும்.." என்கிறார் தயாரிப்பாளர் பி.சந்திரமெளலி.