full screen background image

‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படத்திற்கு எதிராக கோர்ட்டில் மனு

‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படத்திற்கு எதிராக கோர்ட்டில் மனு

வரும் வெள்ளியன்று ரிலீஸாகவுள்ள நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் திரைப்படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் படத்திற்கு தடை விதிக்கக் கோரி ஒரு சினிமா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தின் படியேறியிருக்கிறது.

எம்.எஸ்.கே.பிலிம் புரொடக்ஷன் நிறுவனத்தின் நிர்வாகி பி.நாகராஜ் இந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “லியோ விஷன் நிறுவனத்தின் உரிமையாளர் வி.எஸ்.ராஜ்குமார், ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் வெளிநாடுகளின் வினியோக உரிமையை என்னுடைய நிறுவனத்துக்கு வழங்குவதாக தயாரிப்பாளர் கூறியதை தொடர்ந்து, கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி ஒப்பந்தம் செய்துகொண்டேன். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், வெளிநாட்டு வினியோக உரிமைக்கு 21 லட்சம் ரூபாய் நான் கொடுக்க வேண்டும். அதன்படி, ரூ.7 லட்சத்தை முன்தொகையாக கொடுத்துவிட்டேன். மீதமுள்ள தொகையை படம் வெளியாவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் வழங்க வேண்டும்.

இந்த நிலையில், இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் முழுவதும் முடிந்துவிட்டது. இந்த படத்தை விரைவில் வெளியிடப் போவதாக பத்திரிகைகளுக்கு தயாரிப்பாளர் விளம்பரம் செய்துள்ளார். இதையடுத்து பல முறை அந்த தயாரிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்தும், அவர் பேசவில்லை.

என்னிடம் முன் பணத்தை பெற்றுக் கொண்டு, அந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை எனக்கு வழங்காமல் உள்ளனர். எனவே, ‘நாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்..” என்று கோரியிருக்கிறார்.

இந்த மனு நீதிபதி கே.ரவிசந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.சிவராமன் ஆஜராகி வாதிட்டார். பின்னர், மனு மீதான விசாரணையை நாளை வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நாளைய விசாரணையில்தான் இந்தப் படம் ரிலீஸாகுமா? ஆகாதா? என்பது தெரியும்..!

Our Score