“தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்தான் படப்பிடிப்புகளில் பணியாற்ற முடியும்”-பெப்சி தலைவர் செல்வமணி அறிவிப்பு

“தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்தான் படப்பிடிப்புகளில் பணியாற்ற முடியும்”-பெப்சி தலைவர் செல்வமணி அறிவிப்பு

“இந்த கொரோனா லாக்டவுன்-2-ம் பகுதியும் முடிவடைந்து நாடு சகஜ நிலைமைக்குத் திரும்பிய பிறகு சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகள் நடத்த அனுமதி கிடைத்தாலும்.. படப்பிடிப்புகளில் பணியாற்ற வரும் பெப்சி தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்..” என்று பெப்சி அமைப்பின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றைக்கு வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்தாண்டு கொரோனாவால் திரைப்படத் தொழிலாளர்கள் பாதிப்படு அடைந்ததைவிடவும், இந்தாண்டு மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளனர்.

தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்துள்ளனர். நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்களில் நிறைய பேர் கடந்தாண்டு லாக் டவுன் காலக்கட்டத்திலேயே பெப்சி தொழிலாளர்களுக்கு நிறைய பண உதவிகளைச் செய்திருந்தனர். மீண்டும் இப்போது அவர்களிடம் வற்புறுத்திக் கேட்க தயக்கமாக இருக்கிறது. அப்படியிருந்தும் சிலர் நாங்கள் கேட்காமலேயே தொழிலாளர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

திரைப்பட நல வாரியம் மூலமாக தமிழக அரசு உதவித் தொகை வழங்கும் என்றும் கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்படும்போது படப்பிடிப்புகளுக்கும் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம். அப்படி கிடைக்கும்பட்சத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை நாங்கள் நிச்சயமாக செயல்படுத்துவோம்.

பெப்சி தொழிலாளர்கள் அனைவரும் இந்த லாக்டவுன் இடைவெளி காலத்தில் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இனி அடுத்தக் கட்ட படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள். எனவே, படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தொழிலாளர்கள் இப்போதே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Our Score