full screen background image

தமிழ்ச் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களின் பட்டியல்..!

தமிழ்ச் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களின் பட்டியல்..!

தமிழ் சினிமா உலகில் இன்று முன்னணியில் இருக்கும் கதாநாயகர்கள் நடிக்கும், நடிக்கவிருக்கும் படங்களின் பட்டியல் இதோ :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் :

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன்  தயாரிக்கும் ‘அண்ணாத்த’  படத்தில்தான்  ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி இப்போது நடித்து வருகிறார். 

மீனா, குஷ்பு. கீர்த்தி சுரேஷ் என்று பல கதாநாயகிகள் நடிக்கும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரகாஷ் ராஜ், ரஜனியுடன் இணையும் இந்த படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃபும்  நடிக்கிறார்.

ரஜினி படத்துக்கு முதல் முறையாக டி,இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் மறைந்த பாடும் குயில்’ எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரஜினிக்காக அட்டகாசமான டைட்டில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களை விவேகா-மணி அமுதவன் எழுதியுள்ளார்கள்.

அஜீத் கதாநாயகனாக நடிக்க ‘வீரம்’, ‘விஸ்வாசம்’ என்று தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் சிவா இயக்கம் செய்யும் இந்தப் படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத் தொகுப்பு செய்திருக்கிறார்.

இந்தப் படத்தினுடைய படப்பிடிப்பு ஏறக்குறைய 90 சதவீதம் முடிந்துவிட்டது.  இந்த மாதக் கடைசி வாரத்தில் இந்த படத்தின் டப்பிங்  பணிகள் ஆரம்பமாகும் என்று ‘அண்ணாத்த’ படக் குழுவினர் சொல்கிறார்கள்.

உலக நாயகன்  கமல்ஹாசன் :

கமல்ஹாசன் இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்-2’. மற்றும் கமல்ஹாஸனின் சொந்தத் தயாரிப்பான ‘விக்ரம்’ திரைப்படம்.

2017-ம் வருடம் ‘பிக்பாஸ்’ முதல் சீசனின்போதே இந்தப் படம் பற்றிய முதல் அறிவிப்பு வெளியானது. அப்போது இந்தப் படத்தைத்  தயாரிக்க இருந்தவர் பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளரான ‘தில்’ ராஜூ. அதற்குப் பிறகு 2018-ம் ஆண்டில்  கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதியன்று இந்தப் படத்தை  லைகா நிறுவனம் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகின.

2018-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதியன்று  துவங்குவதாக இருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ம் தேதியன்று தொடங்கியது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பிப்ரவரி  மாதம் 11-ம் தேதியன்று துவங்கியது. 

சென்னைக்கு அருகில் உள்ள ஈ.வி.பி. ஸ்டுடியோவில் பல பிரம்மாண்டமான அரங்குகளை  அமைத்து ஷூட்டிங் நடத்தினார்கள்.  இதற்கிடையில் 2020-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதியன்று  இரவு  அந்த படப்பிடிப்பு அரங்கில் நிகழ்ந்த ஒரு விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து கொரொனா பாதிப்பில் மொத்த படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதால் இந்தியன்-2’ படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டது.

இப்போது ஷங்கர் பிரபல தெலுங்குப் பட கதாநாயகனான ராம் சரண் நடிக்கின்ற ஒரு தெலுங்கு படத்தையும், ஹிந்தியில் ஒரு படத்தையும் இயக்க ஒப்புக் கொண்டுள்ளதால் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் கொஞ்சம் தள்ளி போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

‘இந்தியன்-2’ படத்தில்  கமலஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, சித்தார்த், டெல்லி கணேஷ் போன்றோரும் நடிக்கிறார்கள்.

ஷங்கரின் கதைக்கு ஜெயமோகன்-கபிலன் வைரமுத்து-லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து திரைக்கதை – வசனம் எழுதுகிறார்கள். இப்பாடத்தின் ஒளிப்பதிவினை ரத்னவேலு மேற்கொள்கிறார்.  அனிருத் இசையமைக்கிறார். இவர் இசையமைக்கும் முதல் கமல்ஹாசன் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தயாரிப்பவர் சுபாஷ்கரன்-அல்லிராஜா.

கமல்ஹாசன் நடிக்கின்ற மற்றொரு திரைப்படம் ‘விக்ரம்’. கார்த்தி கதாநாயகனாக நடித்த ‘கைதி’, விஜய் கதாநாயகனாக நடித்த ‘மாஸ்டர்’ ஆகிய இரு மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசனுக்கு சொந்தமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தியன்-2’ படத்தை தொடர்ந்து அனிருத் இசையமைக்கும் கமல்ஹாசனின் இரண்டாவது திரைப்படமாக ‘விக்ரம்’ அமைந்துள்ளது.

அஜீத் :

கார்த்தி கதாநாயகனாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் வெளியானவுடன் அஜீத்தை சந்தித்த இயக்குநர்  ஹெச்.வினோத்.  அவர் சொன்ன கதையின் நாயகன் பாத்திரம் ஒரு ஆன்டி ஹீரோ மாதிரி இருந்ததால், அஜீத்தை அந்தக் கதை ஈர்க்கவில்லை .இருப்பினும் வினோத்தின் இயக்கும் திறமை மீது அஜித்துக்கு அசாத்திய நம்பிக்கை இருந்ததால் அவருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்று எண்ணிய  அவர்  அமிதாப்பச்சன் நடித்து இந்தியில் வெளியான ‘பிங்க்’ திரைப்படத்தின் தமிழாக்கத்தை இயக்குமாறு வினோத்திடம் கேட்டுக் கொண்டார்.

அஜித் கதாநாயகனாக நடிக்க ‘நேர் கொண்ட பார்வை’ என்ற பெயரில் உருவாகி வெளியான அந்த திரைப்படம், வித்தியாசமான திரைப்படம் என்று பாராட்டுதலைப் பெற்றது மட்டுமின்றி, வெற்றிப் படமாகவும் அமைந்தது.

நேர் கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பின்போது அஜித்துக்கு வினோத் சொன்ன  கதைதான் ‘வலிமை’. அந்தக் கதை அஜித்துக்கு மிகவும் பிடித்த இருந்த காரணத்தினால் உடனடியாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த ‘வலிமை’ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

தொடர் கதையாக ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பின்போது வினோத் சொன்ன இன்னொரு கதையும் அஜித்துக்கு பிடித்த இருந்த காரணத்தினால், அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குகிற வாய்ப்பு வினோத்திற்கு கிடைத்திருக்கிறது. ஆனால், இந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்றுவரையில் அறிவிக்கப்படவில்லை.

விஜய் :

விமர்சகர்களின் ஒட்டு மொத்த பாராட்டையும், மிகப் பெரிய வசூலையும் வாரிக் குவித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற படத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்.

சென்னையில் தொடக்க விழா நடைபெற்ற இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்றது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இத்திரைப்படத்தில் யோகி பாபு முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

இந்தப் படத்தை தொடர்ந்து ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி ராமநாராயணன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன என்றாலும் இது குறித்து விஜய் தரப்பிலிருந்தோ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் தரப்பிலிருந்தோ உறுதி செய்யப்பட்ட தகவல் இன்றுவரை வெளியாகவில்லை.

சூர்யா :

சூரரைப் போற்று’ படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியை குவித்த சூர்யா அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரித்து  வருகின்ற புதிய படத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இந்தப் படத்தில் முதன் முறையாக சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடி வாசல்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் சூர்யா, இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் ஜோதிகா நாயகியாக நடிக்கின்ற புதிய படம் ஒன்றில் வக்கீல் வேடத்தில் கவுரவ வேடத்தில்  நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படங்கள் தவிர நடிகர் மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராக்கெட்டரி தி நம்பி effect’ படத்தில் ஒரு சிறிய கௌரவப் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார் சூர்யா.

தனுஷ் :

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மட்டுமின்றி எல்லோருடைய பாராட்டுதல்களையும் பெற்றது.

அந்தப் படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்திலும் ஒய் நாட் பிலிம்ஸ் சசிகாந்த்தின் தயாரிப்பிலும் தனுஷ் நடித்துள்ள ‘ஜெகமே தந்திரம்’ திரைப்படம் அடுத்த மாதம் ‘நெட் பிளிக்ஸ்’ ஓ‌டி‌டி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்த இரு படங்களைத்  தொடர்ந்து ஆனந்த் எல்.ராயின் இயக்கத்தில் ‘அட்ரங்கி ரே’ என்ற இந்திப் படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். அக்ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளவர் ஏ.ஆர்.ரகுமான்.

மேலும், ஐந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தனுஷ் கதாநாயகனாக நடிக்க மூன்று  தமிழ்ப் படங்களை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. அதில் ஒரு  படத்தை ‘நரகாசுரன்’ படத்தை இயக்கியுள்ள கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும்  இப்படத்திற்கான  கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை பிரபல பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார்.

இந்தப் படம்  நீங்கலாக ‘மாரி-2’ படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் ஒரு படத்தையும், ‘ராட்சசன்’ வெற்றிப் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கின்ற ஒரு படத்தையும், சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதில் பாலாஜி மோகன் இயக்குகின்ற படத்துடைய முதற்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.

இந்த படங்களை அடுத்து  செல்வராகவனின் இயக்கத்தில் இரு படங்களில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். அதில் ஒரு படம் செல்வராகவனின் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின்  இரண்டாவது பாகமாக உருவாக இருக்கிறது.

தனுஷுடன் இணைந்து செல்வராகவன் பணியாற்ற உள்ள இன்னொரு படத்துக்கு ‘நானே வருவேன்’ என்று பெயரிட்டுள்ளார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து ‘கர்ணன்’ படத்தை  இயக்கிய மாரி செல்வராஜோடு  மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தவிர ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ள தனுஷ் தற்போது அமெரிக்காவில் தங்கியிருந்து ‘The Grey Man’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து வருகிறார்.

விக்ரம் :

துருவ நட்சத்திரம்’, ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ்  இயக்கத்தில் உருவாகின்ற புதிய படம் ஆகிய நான்கு படங்களில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார் விக்ரம்.

இந்த நான்கு படங்களில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்து விட்டது. இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கின்றன.

விக்ரமுடன் ரிது வர்மா,  ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்குகின்ற ‘கோப்ரா’ படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, கே.எஸ்.ரவிக்குமார், பத்மப்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படப்பிடிப்பு பெரும் பகுதி முடிவடைந்துவிட்டது.

மணிரத்னத்தின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவாகும் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘ஆதித்த கரிகாலன்‘ வேடத்தில் நடிக்கிறார் விக்ரம்.

இப்படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதத்துக்கு மேலாக முடிவடைந்துவிட்டது. கொரோனாவின் பாதிப்பு காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த மூன்று படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன்னுடைய மகனான துருவ்  விக்ரமுடன், இணைந்து விக்ரம் நடிக்கின்ற படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பவர் சிம்ரன். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இந்தப் படத்தினுடைய படப்பிடிப்பும் 50 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது.

ஜெயம் ரவி :

பொன்னியின் செல்வன்’, ‘ஜன கன மன’ மற்றும் ‘ஆண்டனி பாக்யராஜ்’ இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ஆகிய 3 படங்களில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி.

மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘அருள்மொழி வர்மன்’ கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஜெயம் ரவி, இயக்குநர் அகமதுவின் இயக்கத்தில் ‘ஜன கன மன’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த இரு படங்கள் தவிர சுஜாதா விஜயகுமார் அடுத்து தயாரிக்க உள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜெயம் ரவி. இந்தப் படத்தை ஆண்டனி பாக்யராஜ் என்கின்ற புதிய இயக்குநர் இயக்கவிருக்கிறார்.

விஷால் :

எனிமி’, ‘துப்பறிவாளன்-2’ மற்றும் அறிமுக இயக்குநரான சரவணன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு படம் என்று 4 படங்களில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார் விஷால்.

இந்தப் படங்களில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ் ஆகிய இருவரும் முக்கியமான வேடங்களில்  நடித்துள்ளனர்.

விஷாலின் சொந்தப் படமான ‘துப்பறிவாளன்-2’ படத்தை முதலில் இயக்கியவர் இயக்குநர் மிஷ்கின். விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்தை இயக்கும் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டுள்ளார் விஷால். அந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் லண்டனில் நடக்க வேண்டும் என்பதாலும் அங்கே இப்போது படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை என்பதாலும் ‘துப்பறிவாளன்-2’ படத்தின் படப்பிடிப்பு இப்போது தடைப்பட்டு இருக்கிறது.

அறிமுக இயக்குநரான சரவணன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கும் விஷால், அந்தப் படத்தில் டிம்பிள் ஹாயத்தி உடன் ஜோடி சேர இருக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு இசை அமைப்பவர் யுவன் சங்கர் ராஜா.

அடங்க மறு’ படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ள விஷாலின் புதிய படத்தை தயாரிக்க இருப்பவர் கதிரேசன். இந்தப் படத்தில் நடிக்கின்ற மற்ற நடிகர், நடிகைகள் பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

கார்த்தி :

சுல்தான்’ படத்தை தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’, ‘சர்தார்’ ஆகிய இரு படங்களில் கார்த்தி நடித்து  வருகிறார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தி ஏற்று இருப்பது வந்தியத் தேவனின் வேடம்.

புரட்சித் தலைவர்’ எம்ஜிஆர், ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் ஆகியோர் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட வேடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் ஜோடியாக ராஷி கண்ணா, ராஜீஷா விஜயன் ஆகிய இருவரும் நடிக்கும் இந்த ‘சர்தார்’ படத்தில் இளவரசு, முனிஸ்காந்த் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பை ஜி.வி.பிரகாஷ் குமார் ஏற்க பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயன் :

கோலமாவு கோகிலா’ என்ற வெற்றி படத்தை தந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் ‘டாக்டர்’.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் ராஜேஷ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

ரம்ஜான் தினத்தன்று வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்த  சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டதால் இந்தப் படத்தின் வெளியீடு இப்போது தள்ளிப் போய் உள்ளது.

டாக்டர்’ படத்தை தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ வெற்றிப் படத்தை தந்த ரவிக்குமாரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவடையும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு படங்களை அடுத்து சிவகார்த்திகேயன் லைகா பட நிறுவனம் தயாரிக்கும் ‘Don’ படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருண் மோகன் நடிக்க எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தினுடைய முதல்  கட்டப் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றது.

விஜய் சேதுபதி :

இன்றுள்ள தமிழ்  சினிமா கதாநாயகர்களில் மிக அதிகமான படங்களில் நடித்துக் கொண்டு இருக்கின்ற கதாநாயகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டுமே.

அவர் நடித்து முடித்துள்ள இடம் பொருள் ஏவல்’, ‘துக்ளக் தர்பார்’, ‘கடைசி விவசாயி’, ‘மாமனிதன்’, ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ மற்றும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படமான ‘19-1-A’, ‘அனபெல் சுப்ரமணியம்’ ஆகிய 8 திரைப்படங்கள் வெள்ளித் திரையை சந்திப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

அதே நேரத்தில் இப்போது ‘காற்று வாக்கில் ரெண்டு காதல்’, ‘விடுதலை’, ‘மும்பை கார்’, ‘காந்தி டாக்ஸ்’, ‘முகிழ்’ போன்ற படங்களிலும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் உருவாகும் ‘காற்றுவாக்கில் ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கின்றனர். அனிருத்தின் இசையில் உருவாகின்ற இந்தப் படத்தை நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு சொந்தமான ‘ரவுடி பிக்சர்ஸ்’ உடன் இணைந்து தயாரிக்கிறார் லலித் குமார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘விடுதலை’. நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஏற்று நடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்துக்கு இசை அமைப்பவர் ‘இசை ஞானி’ இளையராஜா.

விஜய் சேதுபதியின் தயாரிப்பில் கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் படம் ‘முகிழ்’. இந்தப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பவர் ரெஜினா கெஸன்ட்ரா.

இந்தப் படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துக்கொண்டிருக்கும் இரு இந்திப் படங்கள் ‘மும்பை கார்’ மற்றும் ‘காந்தி டாக்ஸ்’.

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகின்ற ‘மும்பை கார்’ படத்தை தயாரிப்பவர் பிரபல மலையாள பட விநியோகஸ்தரான ஷிபு.

விஜய் சேதுபதி நடிக்கின்ற இன்னொரு இந்திப் படமான ‘காந்தி டாக்ஸ்’ படத்தை இயக்குபவர் பாண்டுரங்கன் பலேகர்.

எஸ்.டி.ஆர். என்கிற சிம்பு :

மஹா’, ‘மாநாடு’, ‘பத்துத் தல’, மற்றும் கௌதம் வாசுதேவ மேனனின் இயக்கத்தில் இரண்டு படங்கள் என்று ஐந்து படங்களில் இப்போது நடித்து கொண்டிருக்கிறார் சிம்பு.

சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகின்ற ‘மாநாடு’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பஞ்சு சுப்பு, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர் என்று மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பவர் கல்யாணி பிரியதர்ஷன். தன்னுடைய முன்னாள் காதலியான ஹன்சிகாவுடன் இணைந்து ‘மஹா’ படத்தில் நடித்திருக்கிறார் சிம்பு.

தம்பி ராமையா கருணாகரன் நந்திதா பிரியா ஆனந்த் ஆகியோரும் நடித்திருக்கும் இந்தப் படத்தினை ஜிப்ரான் இசையமைக்க ஜமீல் இயக்குகிறார்.

பிரபல பட தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணாவின் இயக்கத்தில்  தயாரிக்கின்ற படம்தான் ‘பத்து தல’.

சிம்புவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கின்ற இந்தப் படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த இரண்டு படங்களில் ஒரு படத்துக்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்று கவித்துவமான ஒரு பெயரை சூட்டி இருக்கிறார் கௌதம் வாசுதேவ மேனன். இசையமைக்க இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.

பிரசாந்த் :

இந்தியில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றப் படமான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் பதிப்பில் பிரசாந்த் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். கார்த்திக்கும், சிம்ரனும் நடிக்கும் இந்த படத்தை இயக்குபவர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன்.

ஜீவா :

பல வெற்றிப் படங்களைத் தந்த ஜீவா ‘மேதாவி’ மற்றும் ‘83’ ஆகிய இரு படங்களில் இப்போது கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

பிரபுதேவா :

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள பிரபுதேவா தமிழில் ‘பொன் மாணிக்கவேல்’, ‘தேள்’, ‘யங் மங் சங்’, ‘ஊமை விழிகள்’, ‘பகீரா’ ஆகிய ஐந்து படங்களில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படங்கள் தவிர அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பிள்ளை தயாரிக்கின்ற 2 புதிய படங்களில் இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆர்யா :

அரண்மனை-3’, ‘சார்பட்டா பரம்பரை’ ஆகிய இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்கும் ஆர்யா, விஷால் கதாநாயகனாக நடிக்கும் ‘எனிமி’ படத்தில் வில்லனாகவும் நடிக்கிறார்.

சுந்தர்.சி-யின் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கின்ற ‘அரண்மனை-3’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்டது.

வெளியீட்டுக்காக காத்திருக்கும் அந்தப் படத்தில் ஆர்யாவுடன், ராசி கண்ணா ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், மனோபாலா, யோகி பாபு, கோவை சரளா ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மையில் மறைந்த நடிகர் விவேக்கும் இந்தப் படத்தில் முக்கியமான பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் துஷாரா விஜயன்.

கலையரசன், காளி வெங்கட், ஜான் விஜய் ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

சசிகுமார் :

ராமராஜனுக்கு அடுத்தபடியாக கிராம நாயகனாக வலம் வருகின்ற சசிகுமார் நடித்து முடித்து வெள்ளித் திரையைக் காண ‘ராஜ வம்சம்’, ‘எம்.ஜி.ஆர். மகன்’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ ஆகிய படங்கள் காத்திருக்கின்றன

இப்போது ‘பகைவனுக்கு அருள்வாய்’ உட்பட நான்கு புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சசிகுமார்.

விஜய் ஆண்டனி :

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனான விஜய் ஆண்டனி நடிப்பில் திரைக்கு வர காத்திருக்கும் படங்கள் ‘தமிழரசன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘காக்கி’, ‘அக்னிச் சிறகுகள்’ ஆகிய நான்கு படங்களாகும்.

இப்போது ‘பிச்சைக்காரன்-2’ உட்பட 2 புதிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.

விக்ரம் பிரபு :

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான ‘கும்கி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமான விக்ரம் பிரபு, தற்போது ‘பொன்னியின் செல்வன்’, ‘டாணாக்காரன்’, ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படங்களில் இப்போது நடித்து வருகிறார்.

பிரபுவுக்கு ஜோடியான அஞ்சலி நாயர் நடிக்கும் ‘டாணாக்காரன்’ படத்தை இயக்குபவர் தமிழ்.

பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிப்பவர் வாணி போஜன். மஹதி ஸ்வரா இசையமைக்கும் இந்தப் படத்தை கார்த்திக் சவுத்ரி இயக்குகிறார்.

அதர்வா :

கண்ணனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தள்ளிப் போகாதே’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள அதர்வா, இப்போது புதியதாக 2 படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

யோகி பாபு :

நகைச்சுவை நடிகராக எண்ணற்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் யோகி பாபு ‘மண்டேலா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆறு படங்களில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

அருண் விஜய் :

அருண் விஜய் நடித்து முடித்துள்ள மூன்று படங்கள் ‘பாக்சர்’, ‘சினம்’, மற்றும் ‘பார்டர்’. இப்போது பிரபல இயக்குநரான ஹரியின் இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் அருண் விஜய், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கின்ற ‘அக்னி சிறகுகள்’ படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் :

விஜய் சேதுபதிக்கு அடுத்தபடியாக அதிகமான படங்களில் நடிப்பவர் என்ற பெருமை ஜி.வி.பிரகாஷுக்கு சொந்தமானது.

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ‘ஐங்கரன்’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘ஜெயில்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்தப் படங்கள் தவிர ‘4-ஜி’, ‘காதலைத் தேடி நித்யானந்தா’, ‘காதலிக்க யாருமில்லை’, ‘பேச்சுலர்’, ‘டிராப் சிட்டி’ ஆகிய ஐந்து படங்களில் ஜி.வி.பிரகாஷ் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஹிப் ஹாப் ஆதி :

இயக்குநர் சுந்தர்.சி-யால் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஹிப் ஹாப்’ ஆதி, அதன் பின்னர் சுந்தர்.சி-யின் தயாரிப்பில் உருவான ‘மீசையை முறுக்கு’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும், இயக்குநராகவும், கதாசிரியராகவும் அறிமுகமானார்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ ஆகிய இரு படங்களில் நடித்த ஆதி இப்போது ‘சிவகுமாரின் சபதம்’, ‘அன்பறிவு’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் சத்ய ஜோதி பட நிறுவனம் தயாரிக்கிறது.

ஆதி கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள ‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார்.

புதிய இயக்குநரான அஸ்வின் ராம் இயக்கும் ‘அன்பறிவு’ படத்தில் ஆதிக்கு ஜோடியாக ஜோடியாக காஷ்மீரா பரதேசி நடிக்கிறார்.

சந்தானம் :

நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக பதவி உயர்வு பெற்று இருக்கும் சந்தானம் நடித்து முடித்துள்ள படங்கள் ‘டிக்கிலோனா’, ‘சர்வர் சுந்தரம்’, ‘சபாபதி’.

இந்த மூன்று படங்களில் ‘டிக்கிலோனா’தான் முதலில் வெளியாகும் என்று தெரிகிறது.

ஹரீஷ் கல்யாண் :

சிந்து சமவெளி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமான ஹரீஷ் கல்யாண், ‘கசடதபற’ மற்றும் ‘ஓ மணப்பெண்ணே’ ஆகிய இரு திரைப்படங்களில் இப்போது நடித்து வருகிறார்.

ஆர்.ஜே. பாலாஜி :

எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய இரு படங்களில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றுள்ள ஆர்.ஜே.பாலாஜி அடுத்து தயாரிக்கின்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ஆக்கமாக உருவாகும் இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடிப்பவர் அபர்ணா பாலமுரளி.

Our Score