“கடலோரக் கவிதைகள் படத்தின்போது இளையராஜாவுடன் ஏற்பட்ட மோதல்” – விளக்குகிறார் பாரதிராஜா..!

“கடலோரக் கவிதைகள் படத்தின்போது இளையராஜாவுடன் ஏற்பட்ட மோதல்” – விளக்குகிறார் பாரதிராஜா..!

‘கடலோரக் கவிதைகள்’ படத்தின் பின்னணி இசை கோர்ப்புப் பணியின்போது ‘இசைஞானி’ இளையராஜாவுடன் ஏற்பட்ட மோதல் குறித்து இப்போது தனது யூடியூப் தளத்தில் பேசியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

அவர் இது குறித்துப் பேசும்போது, “கடலோரக் கவிதைகள்’ படத்துக்கு ரீரெக்கார்டிங் வேலை ஆரம்பிச்சது.. ஒவ்வொரு ரீலா இளையராஜா பின்னணி இசையை அமைச்சுக்கிட்டே வந்தான். 5-வது ரீலை பார்த்தான். பார்த்து முடிச்சதும், “இதை கடைசியா பார்த்துக்கலாம். அடுத்ததை போடுங்க…” என்றான்.  

கடைசீல 12 ரீலுக்கும் பின்னணி இசையைப் போட்ட அப்புறம்தான் அந்த 5-வது ரீலை எடுத்தான். அதுல நிறைய சீன்ஸ்ஸை கட் டூ சீன்ஸா வைச்சிருந்தேன். டீச்சர் தாஸ்கிட்ட “எனக்கு சங்கு வேணும்”ன்னு கேப்பாங்க. உடனேயே தாஸ் கடலுக்குள்ள ஓடி மூழ்கித் தேடுவான். கைல வலம்புரி சங்கு கிடைக்கும். அதைக் கொண்டு வந்து டீச்சர்கிட்ட கொடுப்பான்.

டீச்சர் அது வலம்புரி சங்குன்னு தெரியாமலேயே “இது என்ன இவ்வளவு பெரிசா..?” என்று கேட்பார். “டீச்சர்.. இது வலம்புரி சங்கு…” என்று தாஸ் சொன்னவுடன் அதைத் தன் காதில் வைத்துக் கேட்பார் டீச்சர்.. அப்போது டீச்சரின் காதில் தாஸின் இதயத் துடிப்பும், காதலுக்கான ஓசையும், இசையும் விழுகணும். இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.

ஆனால் ராஜா “இதுக்கு என்ன மியூஸிக் போடுறது..?” என்று கேட்டான். “இதயம் விடும் மூச்சுக் காத்து அதுல கேட்கணும்…” என்றேன். “யோவ்.. அதுல வெறும் காத்துதான்யா வரும்…” என்றான் இளையராஜா. எனக்குக் கோபம் வந்திருச்சு. “நீ அந்த இடத்தைக் கொடு. நானே பண்றேன்…” என்றேன். “எனக்கு ஒரு வீணை, தம்புரா கொடு. நான் ஜி.கே.வெங்கடேஷை வைச்சுப் பண்றேன்..” என்றேன்.

அவரும் பயந்துபோய் “என்னப்பா…” என்றார். “ஒண்ணும் இல்ல ஸார்.. நான் சொல்ற மாதிரி செய்யுங்க. இது மாதிரி”ன்னு சொல்லி அந்த வாத்தியக் கருவிகளை வைச்சு அவரை செய்ய வைச்சு போட்டுட்டேன். வேறொரு இசையமைப்பாளரா இருந்தா அத்தோட “போயிட்டு வாடா”ன்னு சொல்லிருப்பான். அது ராஜான்றதால ஒண்ணும் சொல்லலை.

ஆனால் அன்னிக்கு ராத்திரி வீட்டுக்குப் போயி்டடு எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தான் இளையராஜா.

அந்த லெட்டர்ல, “நீ நடிப்புல பெரிய சக்கரவர்த்தி. எவ்வளவு பெரிய கலைஞர்களாக இருந்தாலும் அவங்ககிட்ட நடிப்பை வாங்கும் அளவுக்கு திறமை உன்கிட்ட இருக்கு. அதே மாதிரி இசையின் நுணுக்கங்கள் பற்றி எனக்கும் நல்லா தெரியும். இந்த இசையை அக்குவேறு, ஆணி வேறா எனக்குத் தெரியும். எனக்கு நைட்டெல்லாம் தூக்கம் இல்லை. ஏதோ நீ கேட்டு என்னால கொடுக்க முடியலைன்ற பலவீனம் எனக்கு வந்திரக் கூடாது. அதுனால மறுபடியும் அந்த ரீலை அனுப்பு. நான் வாசிக்கிறேன்…” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தான்.

“அந்தக் குறிப்பிட்ட 5-வது ரீலுக்கு மட்டும் வாசிக்காமல் முழுமையாக அனைத்து ரீல்களுக்கும் நான் வாசிப்பேன்…” என்றான் இளையராஜா. அப்போது அதுக்கு 2,500 ரூபாய் செலவாகும். ஒரு ரீலுக்கு மட்டுமென்றால் 300 ரூபாய்தான் செலவாகும். நான் இதையும் யோசித்தேன். ஆனாலும், சரி.. பரவாயில்லை. போனால் போகுதுன்னு மொத்தமா எல்லா ரீலுக்கும் இசையமைக்க நானும் ஒத்துக்கிட்டேன்.

மறுநாள் அந்த 5-வது ரீலை மட்டும் எடுத்துப் போட்டு “நேத்து என்னமோ கிழிச்சாராம்ல.. பார்ப்போம்.. போடு”ன்னான். பார்த்தான். அந்த இடத்துல இருந்த இசை அவனுக்குள்ளேயும் ஏதோ ஒண்ண காட்டிருச்சு. “சரி.. விடுய்யா..” என்று சொல்லிவிட்டான். அதுதான் இளையராஜாவின் பெருந்தன்மை.  அவனுக்கு இசையைப் பற்றி நிறையவே தெரியும். எனக்குக் கொஞ்சம்தான் தெரியும்..” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

Our Score