நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சக்ரா’ திரைப்படத்திற்கு தடை மேல் தடையாக வந்து கொண்டேயிருக்கிறது.
ஏற்கெனவே கடந்த அக்டோபர் மாதம் இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருந்த சூழலில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் “ஆக்சன்’ திரைப்படத்தின் மூலம் எனக்கேற்பட்ட 8 கோடி ரூபாய் நஷ்டத்தை விஷால் தான் சரி கட்டுவதாகச் சொன்னார். ஆகவே, எனக்கு தகுந்த நஷ்ட ஈட்டினை கொடுக்காமல் ‘சக்ரா’ திரைப்படத்தை வெளியிடக் கூடாது…” என்று கேட்டு நீதிமன்றப் படியேறினார்.
இதையடுத்து கடந்த அக்டோபர் 11-ம் தேதியன்று “ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்திவிட்டு ‘சக்ரா’ படத்தை வெளியிடலாம்…” என்று விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இதே வழக்கில் தயாரிப்பாளர் ரவீந்திரன் “இந்த ‘சக்ரா’ படத்தின் கதையை முதன்முதலில் என்னிடம்தான் இந்தப் படத்தின் இயக்குநரான எம்.எஸ்.ஆனந்தன் கூறினார். நான் இந்தப் படத்தை தயாரிப்பாதற்காக சில முன் பணிகளைச் செய்திருக்கிறேன். எனவே இதற்காகவும் தனக்கு நஷ்ட ஈடு வேண்டும்” என்று கேட்டிருந்தார்.
ஆனால், “இந்தப் பிரச்சினையை சம்பந்தப்பட்ட இருவரும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்…” என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது.
ஆனால், இப்போது இதே கோரிக்கையின்படி ‘சக்ரா’ படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
‘சக்ரா’ திரைப்படத்தை இந்த வார வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 19-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார் விஷால். இந்த நேரத்தில் இப்படியொரு சிக்கல் எழுந்துள்ளது.
பாவம் விஷால்.. இ்ப்போதைக்கு அவருக்கு பெரிய அளவில் யாரும் உதவிக்கரம் நீட்டாமல் இருக்கும் சூழலில் இந்தப் பிரச்சினையில் இருந்து எப்படி வெளியில் வரப் போகிறார் என்று தெரியவில்லை.