full screen background image

பேட்டரி – சினிமா விமர்சனம்

பேட்டரி – சினிமா விமர்சனம்

்ரீஅண்ணாமலையார் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.மாதையன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள்.

மேலும், கன்னட நடிகரான ராஜ் தீபக் ஷெட்டி இந்தப் படத்தின் மூலமாக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். மற்றும் யோக் ஜப்பி, எம்.எஸ்.பாஸ்கர், என் உயிர்த் தோழன்’ ரமா, நாகேந்திர பிரசாத், அபிஷேக், ராஜ்குமார், ஜார்ஜ் மரியம், கிருஷ்ண குமார், ராம், பேபி மோனிகா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

பத்திரிகை தொடர்பு – ஜான்சன், நிர்வாக தயாரிப்பாளர்கள் நவீன் – ஜெய் சம்பத், பாடல்கள் – நெல்லை ஜெயந்தா, தமயந்தி, சண்டை இயக்கம் – ஹரி தினேஷ், நடன இயக்கம் – தினேஷ், படத் தொகுப்பு – ராஜேஷ்குமார், கலை இயக்கம் – சிவா யாதவ், திரைக்கதை, வசனம் – ரவிவர்மா பச்சையப்பன், ஒளிப்பதிவு – கே.ஜி.வெங்கடேஷ், இசை – சித்தார்த் விபின், பத்திரிகை தொடர்பு – ஜான்ஸன், கதை – இயக்கம் மணி பாரதி, இணைத் தயாரிப்பு –  எம்.செங்குட்டுவன், எம். கோபிநாத், தயாரிப்பு – சி. மாதையன்.

இயக்குநர் மணி பாரதி பிரபல இயக்குநர்களான வஸந்த், மணிரத்னம், சரண் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இயக்குநர் லிங்குசாமி, ஹரி ஆகியோரிடம்  கதை விவாதங்களில் பங்காற்றி வருபவர்.

சூது கவ்விய தர்மத்தை, அதனிடமிருந்து மீட்கும் படமே இந்த பேட்டரி’ திரைப்படம். சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இது ஒரு க்ரைம், திரில்லர் திரைப்படம்.

இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு தற்போதைய காலக்கட்டத்தில் மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது.

கல்வியும், மருத்துவமும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது. அதில் கற்று தேர்ந்தவர்கள், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியதுபோய், இன்று அதை பணம் சம்பாதிக்கும் வியாபாரத் தளமாக்கிவிட்டனர். அப்படிப்பட்ட மருத்துவ துறையிலேயே முறைகேடு நடந்தால் சாதாரணமான ஏழை மக்கள் அதை எப்படி தாங்கிக் கொள்வார்கள்..?

மருத்துவத் துறையில் நடக்கும் இப்படியான ஒரு முறைகேட்டால் ஒரு குடும்பமே எப்படி பாதிக்கப்படுகிறது என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கரு.

சென்னை, நுங்கம்பாக்கம் ஏரியாவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. இரண்டுமே சட்ட ரீதியாக குற்றவாளிகளை நிரூபிக்க முடியாதவகையில் இருக்கின்றன.

வித்தியாசமான இந்தக் கொலைகளை செய்தவனை கண்டு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர பணியில் புதிதாகச் சேர்ந்திருக்கும் நாயகன் புகழ்’. 

இதே சென்னையில் மருத்துவ மாணவியான ‘ஆஷா’, பேஸ் மேக்கர் வைத்துள்ள குறிப்பிட்ட 2 பேரைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

தன் ஒரே மகளை கொலை செய்த கொலைகாரனை தேடி அலைகிறார் அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனரான விக்டர். 

இந்த மூன்று கதாபாத்திரங்களும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள். அந்தப் புள்ளி எது.. எதனால் இந்தச் சம்பவங்களும், கொலைகளும் நடந்தன என்பதைச் சொல்லும் இந்த வித்தியாசமான கதையும், திரைக்கதையும் பார்வையாளர்களின் இதயத் துடிப்பை நிச்சயமாக எகிறச் செய்யும்.

பொதுவாக, க்ரைம் கதை என்றாலே எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். இப்படத்தில் வரும் திருப்பங்கள், ஒரு புதிர் விளையாட்டு போல, ஏன்.. எதற்கு.. எப்படி?.. என்கிற ஆர்வத்தை தூண்டும்படியாக இருக்கிறது.

சென்னையில் நுங்கம்பாக்கம் ஸ்டேஷனுக்கு சப்-இன்ஸ்பெக்டராக போஸ்டிங் கிடைத்து பணியில் சேர்கிறார் நாயகன் செங்குட்டுவன். அந்த ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கும் யோக் ஐப்பி, ரப் அண்ட் டப் கேரக்டராக இருக்கிறார்.

அந்த ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் ஒரு பிணம் கண்டெடுக்கப்படுகிறது. கொலையாளியைத் தேடும் பணி நடந்து கொண்டிருக்கும்போது திடீரென்று இன்ஸ்பெக்டரான யோக் ஐப்பி வித்தியாசமான முறையில் ஒரு மர்ம மனிதனால் கொல்லப்படுகிறார்.

இந்த நேரத்தில் ஒரு விபத்தில் சிக்கி ஓய்வில் இருந்த துணை கமிஷனர் விக்டர் நுங்கம்பாக்கம் பகுதிக்கு பொறுப்பேற்கிறார். அவர் பொறுப்பேற்ற பின்பு சென்னையின் மிகப் பெரிய தொழிலதிபர் ஒருவரின் உயிருக்கு ஆபத்து என்பதால் அவருக்கு முழு பாதுகாப்பு கொடுக்கும்படி போலீஸ் கமிஷனரே, விக்டரை நேரில் அழைத்துச் சொல்கிறார்.

விக்டரும், செங்குட்டுவன் தலைமையில் ஒரு டீமை போட்டு அவருக்குப் பாதுகாப்பு கொடுத்திருந்தும் அந்தத் தொழிலதிபரும் இதே மாதிரியான மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். தொடர்ந்து விக்டரையும், செங்குட்டுவனையும் கொல்லவும் முயற்சிகள் நடக்கிறது.

கொலைகளை செய்த கொலையாளி யார்..? ஏன்.. எதற்காக இந்தக் கொலைகள்..? கண்டு பிடித்தார்களா..? இல்லையா..? என்பதுதான் இந்த பேட்டரி’ படத்தின் சஸ்பென்ஸ், திரில்லர் கொண்ட திரைக்கதை.

நாயகன் செங்குட்டுவனுக்கு போலீஸ் டிரெஸ் பொருத்தமாகத்தான் உள்ளது. புதிதாகப் பணியில் சேரும் போலீஸ்காரர்களுக்கு என்ன அவமானங்கள் கிடைக்குமோ அது அத்தனையும் செங்குட்டுவனுக்கும் நடக்கிறது.

அதை அவர் எதிர்கொள்ளும்விதமும், யோக் ஐப்பியை சமாளிக்க முடியாமல் திணறும் தருணத்திலும் ‘ஐயோ பாவம்’ என்று சொல்ல வைக்கிறார். அம்மு அபிராமியைத் தவறாக நினைத்துவிட்டு வருந்துவதும், சமயம் கிடைத்தவுடன் நட்பை காதலாக்கும் அந்தத் தருணத்திலும் செங்குட்டுவன் ரசிக்க வைத்திருக்கிறார்.

அம்மாவுக்கு மகனாக.. தாத்தாவுக்குப் பேரனாக.. தங்கைக்கு பாசமிக்க அண்ணனாக பல்வேறு நடிப்புகளைக் காட்டியிருந்தாலும் ஆக்ரோஷத்தில் மட்டும் கொஞ்சம் குறைவான அளவையே கொடுத்திருக்கிறார். இயக்குநர் இதுவே போதும் என்று சொல்லிவிட்டாரோ.. கிளைமாக்ஸ் காட்சியில் விக்டரை ஏமாற்றிவிட்டு நமட்டுச் சிரிப்போடு பார்க்கும் காட்சியில் ரசிகர்களை பெருமளவு கவர்கிறார்.

அம்மு அபிராமி தனது முட்டை கண்களாலேயே பேசுகிறார். அவர் யார் என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருந்து பாதியில்தான் தெரிய வருகிறது. தனது அப்பாவின் வார்த்தைகளைக் காப்பாற்ற வேண்டி அவர் படும் கஷ்டமும் படத்திற்கு நன்மையே செய்திருக்கிறது.

யோக் ஐப்பி வழக்கம்போல தன்னுடைய வித்தியாசமான நடிப்பைக் கொட்டியிருக்கிறார். அலட்சியம், தந்திரம், கேலி, கிண்டல், கோபம் என்று அவர் காட்டும் நவரசங்களும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறது. லிப்ட்டுக்குள் அவர் படும்பாடு பெரும் தவிப்புதான்..!

விக்டராக நடித்திருக்கும் கன்னட நடிகரான தீபக் குமார் ஷெட்டியின் நடிப்பு சிறப்பு. செங்குட்டுவனை யார் என்று கண்டறிந்து அவரைக் கைது செய்ய துணிவதும், கடைசியில் தன்னுடைய கையாலாகத்தனத்தை எண்ணி மருகுவதும் ஒரு நல்ல போலீஸ் அதிகாரியைப் பார்த்த திருப்தியைத் தருகிறது.

வழக்கம்போல எம்.எஸ்.பாஸ்கர் நம் மனதைத் தொடும் அளவுக்கு நடித்திருக்கிறார். அம்மாவாக நடித்திருக்கும் ரமாவும் அப்படியே..! அந்தக் குழந்தை மோனிகாவின் சின்னச் சின்ன ஆக்சன் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.

ஒரேயொரு குறை போலீஸ் கமிஷனராக நடித்தவர்தான். ஏன்  இந்த அளவுக்கு வசனங்களைக் கடித்துத் துப்பியிருக்கிறார் என்று தெரியவில்லை. வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம்.

கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவும், சித்தார்த் விபின் பின்னணி இசையும் ஒரு சேர படத்திற்குப் பலம் சேர்த்திருக்கின்றன. குலுமணாலியில் எடுக்கப்பட்ட பாடல் காட்சியை படத்தின் சீரியஸ் தன்மை கெடுகிறது என்று சொல்லி நீக்கிவிட்டார்களாம். அதுவும் சரிதான்.

பாடல் காட்சிகளில் குடும்ப மாண்டேஜ் காட்சிகளின் வடிவமைப்பு சூப்பர்..! தொழிலதிபரின் வீட்டுக்குள் நடக்கும் சண்டை காட்சியை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் சண்டை இயக்குநர்.

இயக்குநர் எழுதிய சிறப்பான கதைக்கு சஸ்பென்ஸ். திரில்லிங் அனுபவம் கிடைக்கும்வகையில் அதைவிட சிறப்பான வகையில் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் ரவிவர்மா பச்சையப்பன்.

அதே சமயம் படத்தில் ‘பேட்டரி’ என்ற தலைப்புக்கும் படத்தில் நியாயம் செய்திருக்கிறார்கள். பேட்டரியைப் பயன்படுத்தியும், ஐஸ் குண்டுவை வைத்தும் கொலைகளைச் செய்வதெல்லாம் நிச்சயமாக புதுமையான விஷயம்தான்..!

இடைவேளை பிளாக்கிலேயே கொலையாளி யார் என்று தெரிந்தாலும், ஏன்.. எதற்காக.. என்பதை சில காட்சிகளுக்கு பின்பு காக்க வைத்துச் சொல்கிறார்கள். விக்டர் செய்த கொலையை மின்னல் வேகத்தில் காட்சிப்படுத்தியிருப்பது நிச்சயமாக குறைதான். யாரேனும் அந்த நேரத்தில் செல்போனை பார்க்க குனிந்துவிட்டால் நிச்சயமாக படம் புரியாமல் போய்விடும்..!

அதேபோல் சஸ்பென்ஸாகவே அடுத்தடுத்த காட்சிகளை நகர்த்திக் கொண்டு போய் உச்சக்கட்டமாக கிளைமாக்ஸில் செங்குட்டுவன் காட்டும் புத்திசாலித்தனத்திற்காக திரைக்கதை ஆசிரியருக்கு ஒரு ‘ஜே’ போட வேண்டும்..!

இதய  நோய்க்காக பேஸ்மேக்கர் வைப்பது என்பது இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது. ஆனால் இதிலிருக்கும் ஒரு அபாயத்தை இந்தப் படத்தில் பெரும் சங்காக ஊதியிருக்கிறார்கள். கேட்டவர்களும், பார்த்தவர்களும் கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது.

ஒரு மனிதன் என்றைக்கு வேண்டுமானால் இறந்துவிடுவான். அந்த சூழலில், ஒன்று கடவுளிடம் போய் நிற்பான். இல்லையென்றால் மருத்துவரிடம் போய் நிற்பான். அதுதான் உண்மை.

இப்படி இருக்கும் பட்சத்தில் மருத்துவ துறையில் இருக்கும் சில கிரிமினல்கள் நோயாளிகளின் குடும்பத்தினரின் பாசத்தைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் உண்மையை இந்தப் படத்தில் உரக்கச் சொல்லியிருக்கிறார்கள்.  இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் தேவையான விழிப்புணர்வைக் கொடுக்கும் படமாகும்.

பேட்டரி – ஃபுல் சார்ஜா இருக்கு..!

RATINGS : 3.5 / 5

Our Score