தென்னக சினிமாவின் மூத்த ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு காலமானார்

தென்னக சினிமாவின் மூத்த ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு காலமானார்

தென்னக சினிமாவின் பிரபலமான மூத்த ஒளிப்பதிவாளரான ராமச்சந்திர பாபு, இன்று கேரளாவில் காலமானார். அவருக்கு வயது 72.

1972-ம் ஆண்டு பிரபல மலையாள இயக்குநரான ஜான் ஆபிரஹாம் இயக்கிய ‘Vidyarthikaley Ithile, Ithile’ படத்திற்குத்தான் முதன்முதலில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ராமச்சந்திர பாபு,.

இதைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு., தமிழ், ஹிந்தி, அராபி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 135 படங்களுக்கும் மேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ராமச்சந்திர பாபு.

தமிழில் புகழ் பெற்ற திரைப்படமான ‘அக்ரஹாரத்தில் கழுதை’, மற்றும் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘ஒரே வானம் ஒரே பூமி’, ‘தேவதை’, ‘சாவித்திரி’, ‘பாடும் வானம்பாடி’, ‘பகல் நிலவு’, ‘மந்திரப்புன்னகை’, ‘காதல் என்னும் நதியினிலே’, ‘காதல் விடுதலை’, ‘புதிய ஸ்வரங்கள்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

மலையாளத்தில் ஜான் ஆபிரஹாம், பரதன், சிபிமலயில், லோகிததாஸ், ஷாஜி குரூப், எம்.டி.வாசுதேவன் நாயர், ராமு கரியத், கே.எஸ்.சேதுமாதவன், ஐ.வி.சசி, கே.ஜி.ஜார்ஜ், பாலச்சந்திர மேனன், விஸ்வாம்பரன், பாசில், லெனின் ராஜேந்திரன், ஹரிஹரன், சசிகுமார், பவித்ரன், சுரேஷ் உன்னித்தன், ராஜசேனன், பத்ரன் உள்ளிட்ட பிரபலமான மலையாள இயக்குநர்களின் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய முதல் திரைப்படமான ‘உணரு’ படத்திற்கும் ‘பகல் நிலவு’ படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான கேரள மாநில அரசின் விருதினை நான்கு முறை வென்றிருக்கிறார்.

1976-ல் ‘த்வீபு’, 1978-ல் ‘ரதி நிர்வேதம்’, 1980-ல் ‘சமரம்’, 1989-ல் ‘ஒரு வடக்கன் வீர கதா’ ஆகிய படங்களுக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான மாநில அரசின் விருதினைப் பெற்றிருக்கிறார்.

இது கூடவே மலையாள மக்களுக்குப் பிடித்தமான ‘கன்மாடம்’, ‘வெங்கலம்’ உள்ளிட்ட பல முக்கியமான மலையாளத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

2003-ம் ஆண்டு வெளியான ராஜீவ் அஞ்சலின் ‘Beyond The Soul’ ஆங்கிலப் படத்திற்கும், 2010-ம் ஆண்டு வெளியான ‘Pirate’s Blood’ என்ற ஆங்கிலப் படத்திற்கும்கூட ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

மலையாள திரையுலகத்தின் பல்வேறு அமைப்புகளில் பல்வேறு பொறுப்புக்களையும் வகித்திருக்கிறார்.

இரண்டாண்டுகளுக்கு முன்பாக ‘புரொபஸர் தினகன்’ என்னும் பெயரில் நடிகர் திலீப்பை நாயகனாக நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்கியிருந்தார் ராமச்சந்திர பாபு. ஆனால், திலீப் திடீரென்று நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி ஜெயிலுக்குப் போனதால் அந்தப் பட வெளியீட்டில் சிக்கல் உருவாகியிருந்தது. இப்போதுதான் சிக்கல்கள் அகன்று அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி படம் வெளியாக ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இந்த நிலைமையில் இன்று திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராமச்சந்திர பாபு. சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

1947-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி தமிழகத்தில் மதுராங்கத்தில் பிறந்தவர் ராமச்சந்திர பாபு. பின்பு குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் குடியேறினார். புனே பிலிம் இண்ஸ்டிடட்டியூட்டில் ஒளிப்பதிவைக் கற்றவர். பிரபல தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளரான ரவி கே.சந்திரன் இவரது தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score