5 மொழிகளில் வெளியாகும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ திரைப்படம்..!

5 மொழிகளில் வெளியாகும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ திரைப்படம்..!

‘புஷ்கர் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் புஷ்கரா மல்லிகார்ஜுனையா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமான செலவில் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’

இந்தப் படத்தில் ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.

மேலும் முக்கிய வேடங்களில் பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், அச்யுத் குமார், கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே ஆகியோருடன் இணைந்து ரக்ஷித், சான்வி ஸ்ரீவஸ்தவா ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

கரம் சாவ்லா ஒளிப்பதிவில், உல்லாஸ் ஹைதூர் கலை வண்ணத்தில் பிரமிப்பூட்டும், பிரம்மாண்டமான செட்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அமராவதி நகரை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

இப்படத்தின் ஆடை வடிவமைப்பு பொறுப்பாளரான அருந்ததி அஞ்சனப்பா, 1980-களில் நிலவி வந்த பேஷன் குறித்த தனது விரிவான ஆராய்ச்சிகளின் விளைவாக அவரது உழைப்பு வெகுவான பாராட்டுதலை பெற்றிருப்பதோடு, படத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறது.  

அஜநீஷ் லோக்நாத் பின்னணி மற்றும் இரண்டு பாடல்களுக்கு இசை அமைக்க, இப்படத்தின் வேறு இரண்டு பாடல்களுக்கு சரண்ராஜ் இசையமைத்திருக்கிறார். ‘ரங்கஸ்தலம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன் இப்படத்திற்கு ஒலி வடிவமைப்பு செய்திருக்கிறார். இம்ரான் சர்தாரியா நடன இயக்கம் செய்திருக்கிறார். விக்ரம் மூர் வித்தியாசமான சண்டைப் பயிற்சிகளைக் கொடுத்து இயக்கியிருக்கிறார்.

இயக்குநர் சச்சின் இப்படத்தின் இயக்கம், படத் தொகுப்பு, மற்றும் வி.எப்.எக்ஸ். சிறப்பு காட்சி அமைப்புகள் என மூன்று பொறுப்புகளிலும் திறம்பட செயலாற்றி இருக்கிறார்.

‘புஷ்கர் பிலிம்ஸ்’ புஷ்கரா மல்லிக்கார்ஜுனையா தயாரித்த முதல் படம் ‘கோதி பன்னா சாதாரண மை கட்டு’. அதனைத் தொடர்ந்து, கன்னட திரையுலகில் சிறந்த திரைப்படங்களை தயாரிக்கும் ஒரு வல்லமைமிக்க சக்தியாகவும், புதிய சிந்தனைகளையும் தொழிட் நுட்ப யுக்திகளையும் கொண்டு அனைத்து வகை திரைப்படங்களையும் மொழி வேறுபாடுகளையும் கடந்து வெற்றிப் பெற செய்வதில் முனைப்புடன் செயல்படுபவராகவும் திகழ்கிறார்.

அவரது முதல் திரைப்படத்தை தொடர்ந்து அவர் தயாரித்த ‘கிரீக் பார்ட்டி', 'ஹம்பிள் பாலிடீசியன் நோக்கராஜ்', 'கதையொந்து ஷுருவாகிதே', 'ஜீர்ஜிம்பே' ஆகிய அனைத்தும் மகத்தான வெற்றிப் படங்கள். குறிப்பாக 'கிரீக் பார்ட்டி' கன்னட திரையுலக வரலாற்றில் வசூல் சாதனை படைத்த சில குறிப்பிட்ட படங்களில் ஒன்று என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

இப்படத்திற்கு கதை எழுதியிருப்பவர்கள் மிகச் சிறந்த செயல் திறன் படைத்தவர்களான ‘தி செவன் ஆட்ஸ்’(The Seven Odds) எனும் எழுத்தாளர் குழு. இக்குழு ரக்ஷித் ஷெட்டி, சந்திரஜித் பெல்லியப்பா, அபிஜித் மகேஷ், சச்சின்(இயக்குநர்), அனிருத்தா கோட்கி, அபிலாஷ் மற்றும் நாகார்ஜுன்(பாடலாசிரியர்) ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டது.

ஏழு பேரைக் கொண்ட இந்த குழு, பல அருமையான கதைகளை எழுதி, பிரமிக்கத்தக்க திரைப்படமாக உருவாக்கி, அதை வெற்றிப் படங்களாக உயர்த்துவதில் சாதனைப் படைத்து வருகிறது.   

இந்த ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’, ஒரு ஃபாண்டஸி அட்வென்சர் கலந்த நகைச்சுவை திரைப்படம். முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமையான வெகு தூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்க முடியாத ஒரு மர்மத்தைத் தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படத்தின் கதைக் கரு.

படத்தில் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி ஒரு நகைச்சுவை காவலராக நடிக்க, அவருடன் இணைந்து ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஒரு கொடூரமான வழிப்பறித் திருட்டு கூட்டத்தையும், ஒரு தந்திரமான அரசியல்வாதியையும் சமாளித்து எப்படி அந்த மர்மத்தை தீர்த்து வைக்கிறார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன், ரசிக்கத்தக்க வகையில் பிரம்மாண்டமாக  படமாக்கியிருக்கிறார்கள்.

ரக்ஷித்துக்கு ஜோடியாக நடிக்கும் ஷான்வி நுட்பமாக காதலை வெளிப்படுத்தும் நாயகியாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.