மத்திய, மாநில அரசுகளுக்கு நடிகை ஸ்ரீப்ரியாவின் கோரிக்கை..!

மத்திய, மாநில அரசுகளுக்கு நடிகை ஸ்ரீப்ரியாவின் கோரிக்கை..!

இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் போராடிவரும் இந்த நேரத்தில், நடிகை ஸ்ரீப்ரியா இது தொடர்பாக சில  கோரிக்கைகளை அனைவரின் முன்பாகவும் வைத்திருக்கிறார்.

கிராமப்புறங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள்  கிடைக்க செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி அவர் சமீபத்தில்  வெளியிட்டிருந்த ஒரு ட்வீட், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வித்திட்டது.

இந்த நடவடிக்கை மூலம் கிராமப்புறத்தில் வசிக்கும் எண்ணற்ற பெண்களின் மாதாந்திர சுகாதார பிரச்சனை தீர்க்கப்பட்டது எனலாம்.

இவரின் ட்வீட்டிற்கு உடனடியாக பதில் அளித்த சுகாதரத் துறை செயலாளருக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ரீப்ரியா.

இதைத் தொடர்ந்து அவர் சமீபமாக வெளியிட்டிருக்கும் காணொளியிலும் சில நல்ல யோசனைகளையும் முன் வைத்திருக்கிறார்.

அந்தக் காணொளியில் இது தொடர்பாக நடிகை ஸ்ரீப்ரியா பேசும்போது, "இந்தியாவில் ஒட்டு மொத்த மக்களும் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்த நேரத்தில், கை கழுவும் சோப்பும், சானிடைசரும் கிடைப்பதில் நடைமுறையில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது.

முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் இப்பொருட்களுக்கு பெரும் பற்றாக்குறையே நிலவுகிறது. இதனைத் தவிர்த்திட, அரசு இந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அவர்களது தயாரிப்புகளை பொது மக்களுக்கு மலிவு விலையிலும், ஏழை மக்களுக்கு இலவசமாகவும் விநியோகம் செய்திட உரிய முன் முயற்சிகளை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் மக்களின் பொது சுகாதாரம் மேம்படுவதால், நோய் பரவுவதும் கட்டுப்படுத்தப்படும். இந்தப் பொருட்களை அன்றாடம் வீட்டுக்கு வந்து உடல் நலம் விசாரிக்கும் மாநகராட்சி ஊழியர்களிடமே கொடுத்து விநியோகமும் செய்திடலாம் என்பதும் நான் முன் வைக்கும் ஒரு கூடுதல் யோசனை.

அடுத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்களை இந்தப் பேரிடர் காலத்தில் பராமரிப்பதைப்போல் என்றும் பராமரிக்கப்பட வேண்டும்...” என்று குறிப்பிட்டுள்ளார் நடிகை ஸ்ரீப்ரியா.

“இந்த முயற்சி இவ்வுலகத்தில் நம்மோடு வாழ்ந்து வரும் சக மனிதர்கள் அனைவருடைய சுகாதாரமும் மிக, மிக முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது, தனி மனித சுகாதாரம், ஒரு வீட்டின் சுகாதாரத்தை மேம்படுத்தும். வீடுகளின் சுகாதாரமே நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்தும்.

நாம் அனைவருமே மாற்றத்தை விரும்புகிறோம். ஆனால் அதனை ஏனோ உருவாக்க முயல்வதில்லை. வாருங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திடலாம்.." என்கிறார் நடிகை ஸ்ரீப்ரியா.

இந்த யோசனைகளை சேன்ஜ்.ஓஆர்ஜி [CHANGE.ORG] என்ற இணையத் தளத்திலும் ஒரு மனுவாக பதிவு செய்துள்ளார் நடிகை ஸ்ரீப்ரியா,

அதிகமான கையொப்பங்கள்தான் அதை அரசின் மேலான கவனத்திற்கு எடுத்து செல்லும். அதற்கு அனைவரும் அவசியம் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார் நடிகை ஸ்ரீப்ரியா.

வாருங்கள்.. வாக்களிப்போம்..!!!