“மாஸ்டர் படம் நிச்சயமாக பொங்கலுக்கு வெளியாகும்” – தியேட்டர் அதிபர்களின் உறுதிமொழி..!

“மாஸ்டர் படம் நிச்சயமாக பொங்கலுக்கு வெளியாகும்” – தியேட்டர் அதிபர்களின் உறுதிமொழி..!

“இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ‘இளைய தளபதி’ விஜய் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் நிச்சயமாக 2021-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும்” என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுதியளித்துள்ளனர்.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் நிகழ்ச்சிக்கு திரைப்பட ஆர்வலரும், ஆய்வாளருமான வெங்கட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் சங்கத்தின் நிர்வாகிகளான திருச்சி ஸ்ரீதரும், வெங்கடேஷும் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் பேசும்போது, “தமிழகத்தின் தியேட்டர்களில் தற்போது இருக்கும் டிஜிட்டல் முறையை எங்களிடத்தில் சொல்லி ஏற்கச் சொன்னதே இதே தயாரிப்பாளர்கள். 2008-ம் ஆண்டின் துவக்கத்தில் அவர்களுடைய அறிமுகத்தினால்தான் நாங்கள் இதனை ஏற்றுக் கொண்டோம்.

அப்போதும் அவர்கள்தான் வி.பி.எஃப். கட்டணத்தைக் கட்டினார்கள். நாங்களாக கேட்கவில்லை. அவர்களே கொண்டு வந்த புதிய தொழில் நுட்பத்திற்கு அவர்கள்தான் பணம் கட்ட வேண்டும். அதுதான் நியாயமானது.

ஒரு சில தியேட்டர்களில் சாதாரண டிஜிட்டல் முறையும், 2-கே புரொஜெக்சன் முறையும் இருக்கிறது. சில தயாரிப்பாளர்களே “நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு அதிகமான செலவுகளை செய்து தரமான படமாக அதனை உருவாக்கியிருக்கிறோம். அதனால் இதனை 2-கே-வில் புரொஜெக்ஸன் செய்யுங்கள்…” என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்லித்தான் நாங்கள் அதனை செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் அதற்குரிய பணத்தை அவர்கள்தானே கட்ட வேண்டும்..?

புரொஜெக்டர்களை சொந்தமாக வைத்துக் கொள்வதா, வேண்டாமா என்பது எங்களுடைய பிரச்சினை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களுக்கு ஒரு தயாரிப்பாளர் படம் கொடுக்கும்போது, ‘அந்தப் படம் தயாரிக்க எத்தனை கோடி செலவானது..?’, ‘இந்தப் படத்திற்காக யாரிடம் பைனான்ஸ் வாங்கினீர்கள்..?’, ‘இந்தப் படத்தின் மீது எத்தனை கோடிகள் கடன் இருக்கிறது..?’ என்றெல்லாம் நாங்கள் என்றைக்காவது யாரிடமாவது கேட்டிருக்கிறோமா..? இல்லையே.. அதேபோலத்தான் தயாரிப்பாளர்களும் இந்த விஷயத்தில் எங்களை கேள்வி கேட்க முடியாது.

ஏற்கெனவே தொடர்ந்து திரைப்படங்களை பார்க்க தியேட்டர்களுக்கு வந்து கொண்டிருக்கும் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் வந்து போனார்கள். அவர்களுக்கு பார்க்கிங் செலவோ, கேண்டீன் செலவோ பெரிய விஷயமே இல்லை. இனிமேலும் முன்பு போலவேதான் பார்க்கிங் கட்டணமும், கேண்டீனில் விற்கும் திண்பன்டங்களின் விலையும் இருக்கு. அதில் எந்தவித மாற்றமும் இருக்காது.

தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு அரசு என்ன விதிமுறைகளை சொல்லியிருக்கிறதோ அதைப் பின்பற்றும்படி சொல்லுவோம். நாங்களும் அதனைப் பின்பற்றுவோம்.

‘மாஸ்டர்’ படம் நிச்சயமாக அடுத்த பொங்கல் தினத்தன்று தியேட்டர்களில்தான் வெளியாகும். இதனை நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம்..” என்றனர்.

Our Score