ஆனந்த் சங்கர் படம் பற்றிய வதந்தியை பொய்யாக்கிய விஷால்..!

ஆனந்த் சங்கர் படம் பற்றிய வதந்தியை பொய்யாக்கிய விஷால்..!

இனிமேல் ஒரு திரைப்படத்தைத் துவக்கும்போது, வதந்திகளுக்கு பதில் சொல்வதற்கென்றே தனியாக ஒரு ஆளை ஒவ்வொரு பட நிறுவனமும் வேலைக்கு வைக்க வேண்டும் போலிருக்கிறது.

‘இந்தியன்-2’, லைகா புரொடெக்சன்ஸ், இயக்குநர் ஷங்கர் மோதல் என்று கதை கட்டிவிட்டதைப் போலவே கடந்த இரண்டு தினங்களாக ‘நடிகர் விஷாலுக்கும் இயக்குநர் ஆனந்த் ஷங்கருக்கும் மோதல்.. அதனால் விஷால் படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்கி கொடு்த்துவிட்டார்’ என்றெல்லாம் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

ஆனால், உண்மையில் அங்கே நடந்திருப்பதே வேறு.

விஷாலின் நடிப்பில் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் ஸ்டூடியோவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் கடந்த 2 நாட்களுக்கு முன்பாகத்தான் விஷால் கலந்து கொள்ளவில்லை. காரணம், அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக் குறைவு. ‘அவன் இவன்’ படத்தில் மாறு கண் தோற்றத்தில் தொடர்ந்து பல நாட்கள் நடித்ததன் விளைவாக அவருக்கு மைக்ரேன் தலைவலி தொடர்ந்திருக்கிறது.

இந்தத் தலைவலி விஷாலுக்கு திடீரென்று வருவதும், பின்னர் சிகிச்சையளித்தவுடன் போய்விடுவதுமாக இருக்கிறது. இந்தத் தலைவலி பிரச்சினையினால்தான் கடந்த 2 தினங்களாக விஷாலால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. இதைத்தான் வதந்தியாளர்கள் ‘இயக்குநருக்கும், ஹீரோவுக்கும் சண்டை.. விஷால் டிமிக்கி’ என்றெல்லாம் எழுதி வருகிறார்கள்.

ஆனால், மூன்றாவது நாளில் இருந்து விஷால் இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். 2 நாட்களாகத் தான் நடிக்காததால் ஏற்பட்ட நேர இழப்பினை சரிக்கட்ட தொடர்ந்து இரவு, பகலாக அந்தப் படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

“ஏற்கெனவே போட்டிருந்த ஷெட்யூலின்படி இந்த வார சனிக்கிழமையோடு இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிச்சயமாக முடிவடையும்…” என்கிறார் படத்தின் இயக்குநரான ஆனந்த் சங்கர்.

அந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூலில் நடிகர் ஆர்யாவும் நடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஆர்யா நடிக்கும் ஷெட்யூல் மட்டும் கொஞ்சம் தள்ளிப் போக வாய்ப்பியிருப்பதாக படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இதற்கான காரணம், ஆர்யா தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ‘சல்பேட்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் ஆர்யாவின் கெட்டப்பும், லுக்கும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

அதனால், மொத்தமாக ‘சல்பேட்டா’ படத்தை முடித்த பின்புதான் அவர் அடுத்தப் படத்திற்காக கேமிரா முன்பு நிற்க முடியும் என்பதால் அவர் வருகை மட்டும் சற்று தாமதமாகும் என்று தெரிந்து, இப்போதே அதற்கேற்றாற் போன்று படப்பிடிப்பு நாட்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நமக்குக் கிடைத்த கூடுதல் தகவல்.

Our Score