பிரபல தமிழ் நடிகரான நெப்போலியன் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறார். படத்தின் பெயர் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’.
தரமான குடும்ப மற்றும் நம்பிக்கை சார்ந்த திரைப்படங்களை முன்னெடுத்துவரும் ‘கிறிஸ்டல் கிரீக்’ நிறுவனமும், சர்வதேச தரத்தில் சிறந்த கதைக் களங்களைக் கொண்ட திரைப்படங்களை தயாரித்தும், விநியோகிம் செய்தும் வரும் ‘கைபா பிலிம்ஸ்’ நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் நெப்போலியனுடன் கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – கிறிஸ்டல் கிரீக் மற்றும் கைபா பிலிம்ஸ், தயாரிப்பாளர்கள் – மார்க் நட்சன், மிஷல் நட்சன், டெல். கே கணேசன், ஜி.பி.டி.மொதியோஸ். ஒலி வடிவமைப்பு – தாமஸ் லேஷ், இசை- சீன் ஆண்டனி கிஸ்க், ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, இயக்குநர் – டானியல் நட்சன்.
முழு நேர வேலை பறிபோன நிலையில், முன்னாள் ஸ்கேட்டிங் சாம்பியனான கோர்ட்னி, தன்னுடைய நண்பரின் உறைந்த குளத்தில், ஸ்கேட்டிங் பயிற்சியாளராக தனது பணியைத் துவக்குகிறார். கூடுதல் மாணவர்களை ஈர்க்கும்விதத்தில், ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ ஒன்றை வடிவமைத்து, தனது மருமகளுடன் விநியோகித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது பள்ளிப் பருவ காதலனான ஆரன் நோபிள் தனது மருமகளை ஸ்கேட்டிங் பயிற்சியில் சேர்ப்பதற்காக கோர்ட்னியை சந்திக்கிறார். காரணம் சொல்லாமல் பிரிந்து சென்ற பள்ளிப் பருவ காதலன் ஆரன்.. அதன் பாதிப்புகளில் இருந்து போராடி மீண்டு, வாழ்க்கையை சீரமைத்துக் கொண்டிருக்கும் கோர்ட்னி.. பல ஆண்டுகளுக்கு பின் நடந்த இந்த சந்திப்பு.. அதன் தாக்கம் என்ன.. அவர்கள் வாழ்வில் நடந்ததென்ன… காதலர்கள் இணைந்தார்களா என்பதே இப்படத்தின் கதைகளம்.
உணர்வுகளின் கொந்தளிப்பில் இருக்கும் பள்ளிப் பருவ காதலுக்கும், வாழ்வின் யதார்த்தங்களும், நிதர்சனங்களும் புரிந்த நிலையில் அதனை அணுகும்போது உள்ள வித்தியாசத்தையும் மிகவும் நளினமாகவும், சுவராஸ்யமாகவும் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் டானியல்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் எழில் கொஞ்சும் ஏரிகள், பச்சை புல்வெளிகள், டெட்ராய்ட் நகரின் நவீன தொழில் துறை மையங்கள், தனித்துவமான நான்கு பருவ நிலைகள் என மிகவும் பிரமிப்புடன் ரசிக்கத்தக்க வகையில் இத்திரைப்படத்தைப் படமாக்கியிருக்கிறார்கள்.
இப்படம் விரைவில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.