‘V ஸ்டுடியோஸ்’ நிறுவனம் ‘ஸ்ரீசரவணபவா ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ‘கண்ணாடி’ எனும் திரைப்படத்தை தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மாயவன்’ என தமிழ் படங்களிலும் மற்றும் பல தெலுங்கு படங்களிலும் நடித்த இவருக்கு இப்படத்தில் ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார்.
இந்தியில் புகழ் பெற்ற நடிகைகள் அனுஷ்கா ஷர்மா, பர்ணீதி சோப்ரா, வாணி கபூர் போன்ற பல பிரபல வெற்றிபட ஹீரோயின்களை அறிமுகப்படுத்திய யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் ஆன்யா சிங்கை அவர்கள் தயாரித்த ‘கைதி பேண்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் ‘கண்ணாடி’ திரைப்படத்தின் கதையை ஆன்யா சிங்கிற்க்கு பரிந்துரைத்து. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஆன்யா சிங் நாயகியாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் ஆன்யாவுடன் இணைந்து ஆனந்த்ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர்.
இசை – S.S.தமன், ஒளிப்பதிவு – P.K.வர்மா, படத் தொகுப்பு – K.L.பிரவின், கலை இயக்கம் – விதேஷ், சண்டை இயக்கம் – ‘ஸ்டன்னர்’ சாம், பாடல்கள் – யுகபாரதி கோ ஷேஷா, நடன இயக்கம் – ஷெரிஃப், ஒலி வடிவமைப்பு – சம்பத் ஆழ்வார், நிர்வாக தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு – விஜி சுப்ரமணியன் & சாந்தி ஸ்ரீனிவாச குரு.
‘திருடன் போலிஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்கியிருக்கிறார்.
இத்திரைப்படம் ஜூலை 12-ம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.
இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்துடன் சம்பந்தப்பட்ட அத்தனை கலைஞர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
பாடலாசிரியர் கோ ஷேஷா பேசும்போது, “இத்திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ஏற்கனவே தெலுங்கில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற சந்தீப், இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பை சந்தீப்பே தயாரிக்கிறார்.
த்ரில்லர், காதல் போன்ற வணிக ரீதியாக மட்டுமல்லாமல் இயல்பாகவே இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர். இயற்கையாகவே எல்லா அம்சங்களும் ஒரு கதம்பமாக அமைந்திருக்கும். ஆகையால், குடும்பத்தோடு கண்டு களிக்கும் வகையில் இருக்கும். தமனின் இசை இப்படத்திற்கு தூணாக அமைந்திருக்கிறது. அவருடன் பணிபுரிந்தது உணர்வுமிக்க அனுபவமாக இருந்தது…” என்றார்.
ஒளிப்பதிவாளர் வர்மா பேசும்போது, “இது என்னுடைய முதல் த்ரில்லர் படம்.. இரண்டு மொழிகளிலும் 45 நாட்கள் உழைத்து படத்தை முடித்திருக்கிறோம். இயக்குநர் கார்த்திக் படக் குழுவினர் அனைவரையும் ஊக்கப்படுத்துவார்…” என்றார்.
நடிகர் கருணாகரன் பேசும்போது, “ஜீவி’ படத்திற்கு ஆதரவு கொடுத்ததற்காக பத்திரியாளர்களுக்கு நன்றி. ‘ஜீவி’ படத்தைப் போலவே இப்படத்திலும் அனைவரும் என்னை ரசிக்கும் வண்ணம் என் கதாபாத்திரம் அமைந்திருக்கும்…” என்றார்.
நாயகி அன்யா சிங் பேசும்போது, “இப்படம் எனக்கு முதல் தமிழ் படம். தமிழ் படத்தில் அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தில் காதல், த்ரில்லர், நகைச்சுவை, அனைத்தும் கலந்திருக்கும்…” என்றார்.
இயக்குநர் கார்த்திக் ராஜு பேசும்போது, “என்னுடைய முந்தைய படமான ‘உள்குத்து’ சரியாக ஓடவில்லை. இது பற்றி என் நண்பர்களுடன் கலந்தாலோசிப்பேன். அப்போதுதான் இந்த கதை உதித்தது. அடுத்த 3 நாட்களிலேயே மொத்தக் கதையையும் எழுதி முடித்து விட்டேன்.
உடனேயே தயாரிப்பாளர் சுப்பு சாரிடம் கதையை கொடுத்தேன். அவர் படித்து முடித்ததும் இப்படத்தைத் தயாரிக்க ஒப்புக் கொண்டார். இந்தப் படத்தை அப்படியே தெலுங்கிலும் கொண்டு போக வேண்டும் என்று சந்தீப் விரும்பினார். ஆனால், எனக்கு தெலுங்கில் ஒரு வார்த்தைகூட தெரியாது என்றேன். அதற்கு அவரே உதவி புரிந்து தெலுங்கில் தானே தயாரிப்பதாகவும் கூறினார்.
இப்படம் பெற்றோர்களுக்கு மிகவும் பிடிக்கும்விதமாக திடமான கருத்தைக் கூறும் படமாக இருக்கும். படத்தில் சண்டை காட்சிகள் சவாலாகவே இருக்கும். சந்தீப் மற்றும் கருணாகரனின் காட்சிகள் அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும். இப்படத்தில் கடினமாக உழைத்தது நாயகி அன்யா சிங்தான். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளும் தெரியவில்லையென்றாலும் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் மாற்றி, மாற்றி நடித்தார்.
என்னுடைய முதல் படமான ‘திருடன் போலீஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு என் அப்பா, படம் நன்றாக இருக்கிறது. ஆனால், புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறினார். ஆனால் இப்படத்தில் காட்சிக்குத் தேவைப்பட்டதால் வைத்திருக்கிறேன்…” என்றார்.
தயாரிப்பாளர் விஜி சுப்புரமணியன் பேசும்போது, “இந்தப் படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு நாயகியாக யாரை தேர்வு செய்யலாம் என்று ஆலோசித்தபோது, அன்யா சிங்கை சந்தீப்தான் பரிந்துரை செய்தார். இருப்பினும், ஆடிசன் வைத்துத்தான் அவரைத் தேர்வு செய்தோம். அவரும் நன்றாக நடித்திருக்கிறார்…” என்றார்.
நாயகன் சந்தீப் கிஷன் பேசும்போது, “நான் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகின்றது. ஆனால், இப்போதைய நிலையில் 2 வருடங்களுக்கு ஒரு முறைதான் என் படம் வெளியாகும் என்ற நிலைதான் இருக்கிறது. நான் இதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படத்தின் கதையைக் கேட்ட பின்புதான் இந்தப் படத்தை நாமே தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது.
நான் எனக்காக படம் நடிக்கவில்லை. பார்வையாளர்களுக்காகத்தான் நடிக்கிறேன். ஆனால் இப்பொழுது படம் நடிப்பது என்றால் பயமாக இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு படமும் வெளியிடுவதற்கு பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. இப்டத்திற்காகவும் ஒவ்வொருவரும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். தரமான படமாக வரவேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்திக்கிறோம்.
இப்படத்தில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கதையின் அடிப்படை மாறும். மேலும், 2043 வருடத்திலிருந்து ஆரம்பிக்கும். எதிர்காலத்தில் ஆரம்பித்து நிகழ்காலத்தில் முடியும்.
இப்படத்தின் டீஸரை பார்த்த பலரும் நேர்மறையான கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். ஆனால், நல்ல படமாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே இப்படத்தை எடுத்திருக்கிறோம். இப்படம் வெளியாகும்போது எல்லோராலும் பேசும் படமாக இது இருக்கும்.
எல்லோரும் ‘பேய் மற்றும் விலங்குகளை வைத்து படமெடுத்தால் வெற்றியாகும்’ என்றார்கள். ஆனால், எந்தப் பின்னணியில் எடுத்தால் வெற்றியாகும் என்று யார் கூறினாலும், அதிலிருந்து நான் எப்போதும் வித்தியாசமாகத்தான் நடிப்பேன். இப்படத்தைப் பார்த்து முடித்ததும் இது பேய் படம் என்று யாராவது கூறிவிட்டால் இனிமேல் நடிப்பதையே விட்டுவிடுகிறேன்…” என்றார்.