மலையாள நடிகர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் பிரச்சினையில்லாமல் முடிந்தது..!

மலையாள நடிகர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் பிரச்சினையில்லாமல் முடிந்தது..!

மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் வருடாந்திர பொதுக் குழுக் கூட்டம் இன்று காலை கொச்சியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நடிகைகள் ரேவதியும், பார்வதியும் கலந்து கொண்டனர் என்பது சிறப்புச் செய்தி.

2017-ல் உருவாக்கப்பட்ட ‘WCC’ என்றழைக்கப்படும் ‘Women’s Collective In Cinema’ என்கிற அமைப்பின் மூலம் மலையாளத் திரைத்துறையில் இருக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி ‘அம்மா’ அமைப்பிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

குறிப்பாக பிரபல நடிகை பாவனா, நடிகர் திலீப் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ‘அம்மா’ அமைப்பு நடந்து கொண்டவிதம் சரியில்லை என்றும் அது ஆணாதிக்கத்தனமாக.. ஆண்களாலேயே முடிவெடுக்கப்பட்ட ஒரு விஷயமாக அமைந்தது என்று நடிகைகள் ரேவதி, பத்மப்பிரியா, பார்வதி மேனன், ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கால் உள்ளிட்ட பலரும் குரல் எழுப்பினர்.

AMMA-NEW-AMMA

திலீப் மீது எடுத்த சஸ்பென்ஸன் நடவடிக்கையை ரத்து செய்து அவரை மீண்டும் சங்கத்தில் சேர்த்தது தவறான முடிவு என்று சொல்லி ரம்பா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கால் மூவரும் சங்கத்திலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்பிவிட்டனர். இதேபோல் பாவனாவும் சங்கத்திலிருந்து விலகிவிட்டார்.

சங்கத்தில் பெண்களுக்கான பங்களிப்பும், பெண்கள் மீதான குற்றங்களை விசாரிக்க தனி அமைப்பும் உருவாக்கப்பட வேண்டும் என்று கோரி ரேவதியின் தலைமையில் பல நடிகைகள் WCC அமைப்பில் இருந்து ‘அம்மா’ அமைப்பிற்குக் கோரிக்கை வைத்தனர்.

இவர்களிடம் இது குறித்து விசாரித்த சங்கத் தலைவரான மோகன்லால் தலைமையிலான டீம், “இது குறித்து விரிவாக சங்கத்தின் பொதுக்குழுவில்தான் பேச முடியும்…” என்றும்.. “இப்போதைக்கு மலையாளத் திரையுலகத்தில் பெண்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. அது போன்ற பிரச்சினைகளும் இல்லை…” என்று தெரிவித்தது.

revathy-parvathy-384x253

இதைக் கேட்டு அதிருப்தியடைந்த ரேவதி, மோகன்லாலை “சந்திர மண்டலத்தில் இருந்து இப்போதுதான் வந்திருக்கிறார்…” என்று கிண்டல் செய்திருந்தார்.

இந்த நிலைமையில் வருடாந்திர பொதுக் குழுக் கூட்டத்திற்காக மலையாளத் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இன்று கொச்சியில் குவிந்தனர்.

இந்தக் கூட்டத்தில் நடிகர் மம்மூட்டி பேசும்போது “சங்கத்தில் இருந்து விலகிய நடிகைகளை மீண்டும் சங்கத்தில் சேர்க்க வேண்டும்…” என்றும், “அப்படி சேர்க்கும்பட்சத்தில் அவர்களிடமிருந்து உறுப்பினர் கட்டணம் வசூலிக்க வேண்டாம்…” என்றும் கேட்டுக் கொண்டார்.

mohanlal-amma-meeting

இதை ஏற்றுக் கொண்ட நிர்வாகிகள், “விலகிச் சென்ற நடிகைகள் மீண்டும் சங்கத்தில் சேர்வதாக கடிதம் அளித்தால் அதை ஏற்றுக் கொள்வதாகத்” தெரிவித்தனர்.

மேலும், சங்கத்தின் நிர்வாகக் குழுவில் செயற்குழு உறுப்பினர் பதவியில் 4 பதவிகளை பெண்களுக்கு வழங்க வேண்டும். 1 துணைத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பெண் உறுப்பினர்களுக்கெதிரான குற்றங்களை விசாரிக்க விசாகா கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என்று WCC அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இது பற்றி கூட்டத்தில் பேசிய நடிகைகள் ரேவதி, பார்வதி இருவருமே தங்களுக்கு இது பற்றி வெளியில் பேச பேச்சுரிமை இருப்பதாகத் தெரிவித்தினராம். இதேபோல் சங்கத்தை விமர்சித்து பேசிய மறைந்த நடிகர் திலகனின் மகனான ஷம்மி திலகனும் தான் பேசியதற்கு பொதுக் குழுவில் விளக்கமளித்தாராம்.

parvathy-revathy-wcc

இந்தக் கூட்டம் முடிந்த பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்த அம்மா அமைப்பின் தலைவரான மோகன்லால் பேசும்போது, “WCC அமைப்பின் சார்பில் வைக்கப்பட்ட சங்கத்தின் சட்ட விதிகளைத் திருத்தம் செய்யும் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும் அதனை முறைப்படி பொதுக் குழுவில் முன் வைத்து நிறைவேற்றுவோம்..” என்று சொல்லியிருக்கிறார்.

பொதுக் குழுவில் வேறு எந்தப் பிரச்சினையும் பேசவில்லையாம். அனைத்தும் சுமூகமாக முடிந்ததாகவும் கூறியிருக்கிறார் மோகன்லால். ரேவதியும், பார்வதியும்கூட பொதுக் குழு முடிந்த பின்பு எந்தப் பேட்டியும் அளிக்கவில்லை.

மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பு மலையாள சினிமா அமைப்புகளிலேயே வெளிப்படைத்தன்மையுடன் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

https://malayalamcinema.com/ என்ற பெயரில் சங்கத்தின் வலைத்தளத்தை நடத்தி வருகிறார்கள். இந்த வலைத்தளத்திலேயே சங்க உறுப்பினர்களின் பெயர்கள், சங்கத்தின் சட்டத் திட்டங்கள், நடைமுறைகள்.. உறுப்பினர்களுக்குச் செய்யும் உதவிகள்.. சங்கத்தின் செயல்பாடுகள்.. அடுத்து வரவிருக்கும் மலையாளத் திரைப்படங்கள்.. நடிகர், நடிகைகளின் செயல்பாடுகள் என்று பலவற்றையும் தொகுத்து மிகச் சிறப்பாக வழங்கி வருகிறார்கள்.

உறுப்பினர்களுக்கு சங்கம் செய்யும் உதவிகள்..? என்னென்ன உதவிகள்..? அதை எந்தெந்த உறுப்பினர்கள் பெற்று வருகிறார்கள்..? சங்கத்தின் வரவு செலவு என்ன..? கடந்த கால செயல்பாடுகள் எப்படி என்பது பற்றியெல்லாம்கூட இதில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

இது சங்கம்..

தமிழ்நாட்டில் அப்படியா நடக்கிறது..?

புகார்கள்.. குற்றச்சாட்டுக்கள்.. நீதிமன்றத்தில் வழக்கு.. வாய்தாக்கள்.. பத்திரிகை பேட்டிகள்.. பரபரப்பு குற்றச்சாட்டுக்கள்.. பிரேக்கிங் நியூஸ்கள் என்று தமிழகத்தில் வேறு எந்த முக்கியப் பிரச்சினையுமே இல்லை என்பதை போல முக்கியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர்.

இந்தக் கசாமுசாவுக்கெல்லாம் ஒரே தீர்வு.. தென்னிந்திய நடிகர் சங்கத்தை இரண்டாகப் பிரித்து நாடக நடிகர்களை தனி சங்கமாக்கிவிட வேண்டும்.

மலையாள ‘அம்மா’ அமைப்பில் இருப்பதுபோல..  சினிமாவில் மட்டுமே நடித்துவரும் முக்கிய நடிகர், நடிகைகளை மட்டும் வைத்து ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ என்ற பெயரில் ஒரு புதிய சங்கத்தைத் துவக்கி நடத்தினால் இது மாதிரியான பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

இருக்கின்ற சொத்துக்களை பாதியாகப் பிரித்துக் கொண்டு செயலாற்றினால் இரண்டு சங்கங்களுமே தனித்து செயல்பட முடியும். நாடக நடிகர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை அவர்களே தலைமைப் பொறுப்புக்கு வந்தால்தான் உணர முடியும். முழுமையாக செய்ய முடியும். 

இப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருக்கின்ற நடிகர், நடிகைகளுக்கு இருக்கும் ஈகோ பிரச்சினையால்தான் அத்தனை குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன. விட்டுக் கொடுத்து, தட்டிக் கொடுத்து.. செயலாற்றும் அக்கறை கொண்ட ஒரு நடிகர்கூட தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இல்லாதது இவர்களது துரதிருஷ்டம்தான்..!

மோகன்லால், மம்மூட்டி மற்ற மலையாள நடிகர்களை போல சங்கப் பதவியை வைத்து ஆட்சியில் பங்கேற்க.. அரசியல் ஈடுபட.. தேர்தலில் குதிக்க என்று உள் அரசியல் செய்யாமல் உண்மையாக சங்கத்திற்காக உழைப்பவர்கள் நிர்வாகிகளாக வந்தால்தான், தமிழகத்தில் நடிகர் சங்கம் மட்டுமல்ல அனைத்து சினிமா சங்கங்களும் கொஞ்சமேனும் உருப்படும்.

இல்லையேல்.. இது போன்று கேவலமாகத்தான் இருக்கும்..!

Photos : Thanks To Malayalam Manorma.com

Our Score