வாக்களிக்கச் சென்ற நடிகர் சிரஞ்சீவிக்கு நேர்ந்த அவமானம்..!

வாக்களிக்கச் சென்ற நடிகர் சிரஞ்சீவிக்கு நேர்ந்த அவமானம்..!

பொதுவாகவே நடிகர் சிரஞ்சீவியை பக்கா ஜென்டில்மேன் என்பார்கள் தெலுங்கு திரையுலகத்தினர். அவருடன் ஜோடியாக நடித்த நடிகைகளும் இதைத்தான் சொல்வார்கள். தானுன்டு, தன் வேலையுண்டு என்று இருப்பவர். இருந்தவர்.

தெலுங்குலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவரது புகழுக்கும், பெருமைக்கும் எப்படியோ இருக்க வேண்டியவர் அரசியலுக்குள் நுழைந்து படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

இன்றைக்கு தெலுங்கானாவிலும், சீமந்தரா மாநிலத்திலும் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. தனது வாக்கினை செலுத்துவதற்காக வாக்குச்சாவடிக்கு வந்த தனது குடும்பத்தினருடன் வந்த சிரஞ்சீவி வரிசையில் நிற்காமல் உள்ளே போக முயன்றிருக்கிறார்.

ஆனால் அப்போது ஏற்கெனவே வரிசையில் காத்திருந்த கார்த்திக் என்ற இளைஞர், சிரஞ்சீவியை மறித்து "உங்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்..? நீங்களும் வரிசைல நின்னுதான் உள்ள போகணும்..?" என்று வாக்குவாதம் செய்தார். சிரஞ்சீவி எதிர்பாராத அதிர்ச்சி, பிளஸ் அவமானத்தை தாங்கிக் கொண்டு சிரித்தபடியே அந்த நபருக்கு சமாதானம் சொல்லிவிட்டு வரிசைக்கு போய் நின்றுவிட்டார்.

இதைப் பார்த்துவிட்டு வரிசையில் நின்றிருந்த மற்ற வாக்காளர்களும் கை தட்டி அந்த இளைஞரை பாராட்டினார்கள்.. நீண்ட வரிசையில் வந்து காத்திருந்த சிரஞ்சீவி புகைப்படக்காரர்களுக்காக சிரித்தபடியே போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அந்தக் குறிப்பிட்ட எதிர்க் குரல் எழுப்பிய நபர் வாக்களித்தவிட்டு வெளியேறியவுடன்.. சில நிமிடங்கள் கழித்து மற்ற வாக்காளர்கள் எதிர்ப்பு எதுவும் சொல்லாமல் சிரஞ்சீவியை உள்ளே போய் வாக்களிக்கும்படி சொல்ல.. சில நிமிட காத்திருப்புக்குப் பின்னர் சிரஞ்சீவி தனது வாக்கினை செலுத்தினார். இப்போது சிரஞ்சீவி மத்திய அமைச்சராகவும் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

karthik

கார்த்திக் இது குறித்து கொடுத்த பேட்டியில், அவரும் வாக்காளர். நானும் வாக்காளர். பின்பு என்ன வித்தியாசம்..? தேர்தல் கமிஷனின் விதிமுறை அனைவரும் வரிசையில் நின்றுதான் உள்ளே போக வேண்டும் என்று சொல்லியிருக்கிறதே..? ஒரு மத்திய அமைச்சரே இதை மீறினால் எப்படி..?" என்று சொல்லியிருக்கிறார்.

சிரஞ்சீவியோ, "எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்ப்பதற்காகவே நான் உள்ளே போக முயன்றேன். பத்திரிகைகள் மாற்றி எழுத வேண்டாம்.." என்றார்.

இதே நாளில் வேறொரு வாக்குச் சாவடிக்கு தெலுங்கு சினிமாவின் இன்னுமொரு ஸ்டார் பாலகிருஷ்ணா தனது மனைவி, மகளுடன் வந்தார். காரை விட்டு இறங்கியதும் நேராக உள்ளே சென்றார். வாக்களித்தார். பின்பு வெளியே வந்து மை பூசிய கை விரலைக் காட்டிவிட்டு காரில் ஏறி பறந்துவிட்டார். ஒருத்தராச்சும் கேக்கணுமே..? ம்ஹூம்.. கேட்டிருவாங்களா என்ன..?

இதுதான் பாலகிருஷ்ணாவுக்கும், சிரஞ்சீவிக்கும் உள்ள வித்தியாசம்..!